விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 27 ஏப்ரல், 2022

சிந்தனை செய் தமிழா (12) வடமொழியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழ்நாடு !


மனிதன் குடியிருப்பதற்கு ஒரு வீடு தேவை. கூடி வாழ்வதற்கு ஒரு ஊர் தேவை. இவ்விரண்டையும் தனக்கு நன்மை பயக்கும் வகையில் அவன் வடிவமைத்துக் கொள்ளவேண்டும் !

 

எனக்கு வீடு தேவைப்படுகையில், அதன் வடிவமைப்பை நான் தான் முடிவு செய்ய வேண்டும். இன்னொருவன் தன் விருப்பத்தை அதில் புகுத்த அனுமதிக்கக் கூடாது. உற்றார் உறவினரோடு நான் உறைகின்ற ஊர் எப்படி இருக்க வேண்டும் என்பதை என் ஊர் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வேறு ஊரினர் இதில் தலையிட உரிமை இல்லை !

 

பண்டைய தமிழர்கள் பல குடும்பங்களகச்  சேர்ந்து பல ஊர்களைக் கட்டமைத்தனர். நீர்நிலைகளை உருவாக்கினர். கரம்பு நிலங்களை வயல்களாகப்  பக்குவப் படுத்தி வேளாண்மையை அறிமுகப்படுத்தினர். அந்த ஊர்களுக்கு அவர்கள் தனித் தனிப் பெயர்களையும் சூட்டினர். மருதவனம், நல்லூர்,  மாங்குடி, ஆலங்குடி, ஆற்றூர், இடையூர், கடிநெல்வயல், எழிலூர், திருவாலங்காடு, திருப்புத்தூர் எனக் காரணங்களுடன் கூடிய அழகிய தமிழ்ப் பெயர்களாக அவை அமைந்தன !

 

காலப்போக்கில், நாடோடிகளாய் வந்த நச்சுக் கும்பலொன்று தமிழ் மக்களிடையே பொல்லாங்குக் கருத்துகளைப் புனை கதைகளாக யாத்து, ஊர்ப்பெயர்களை மாற்றி அமைக்கலாயினர்.  கற்பனைக் கதைகளில் மனம் மயங்கிய மக்கள், விழிப்பின்றி இருந்த சூழலில், தமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள் வடமொழிப் பெயர்களாக மாற்றப்பட்டன !

 

தூங்கியவன் தொடையில் திரித்தவரை ஆதாயம் என்று ஒரு சொலவடை ஊர்ப்புறங்களில் உண்டு. எந்தெந்த ஊர் மக்கள் விழிப்புக் குறைந்தனரோ அந்த ஊர்ப் பெயர்களெல்லாம் வடமொழிப் பெயர்களாயிற்று. தமிழன் எப்போதெல்லாம் விழிப்பின்றி இருந்தானோ அப்போதெல்லாம் தமிழும், தமிழர் பண்பாடும், பழக்க வழக்கங்களும் சிதைக்கப்பட்டன !

 

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும்  என்று சொன்னான் ஒருமேலை நாட்டு அரசியல் அறிஞன். அதுதான் பல நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழர் அல்லாத வேற்றாரின் கவடத்தால் தில்லையூர் சிதம்பரம் ஆயிற்று. திருவரங்கம் ஸ்ரீரங்கம் ஆயிற்று; திருத்தவத்துறை இலால்குடி ஆயிற்று. திருமுதுகுன்றம் விருத்தாசலம் ஆயிற்று;  பெயர் மாற்றப்பட்ட ஊர்களின் பட்டியல் வாலியின் வாலைவிட ஐந்நூறு மடங்கு நீளமானது !

 

பல நூற்றாண்டுகளாக உறக்கத்தில் இருக்கும் தமிழன் இன்னும் விழித்து எழவில்லை. தமிழில் இருந்த தனது ஊர்ப் பெயர்களைப் பறிகொடுத்தான்; தனக்கு அடையாளம் தரும் தனது தமிழ்ப் பெயரையே பறிகொடுத்தான். தான் வணங்கும் கடவுளரின் தமிழ்ப் பெயர்களை எல்லாம் பறி கொடுத்துவிட்டான். தமிழ்ப் பண்பாட்டையே பறிகொடுத்து அறுவடைத் திருநாளை மகரசங்கராந்தி என அழைக்கத் தலைப்பட்டு விட்டான் !

 

இன்று தமிழன் பெயரில் தமிழ் இல்லை. மாதங்களின் பெயரில் தமிழ் இல்லை. பிறந்த நாளின் பெயரில் (நட்சத்திரம்) தமிழ் இல்லை. உண்ணும் உணவின் பெயரில் தமிழ் இல்லை. உடுக்கும் உடையின் பெயரில் தமிழ் இல்லை. கொண்டாடும் திருநாளின் பெயரில் தமிழ் இல்லை. உள்வாங்கும் மூச்சுக் காற்றின் பெயரில் தமிழ் இல்லை. இந்த அழகில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்னும் கூக்குரலுக்கும் குறைவில்லை !

 

ஏ ! தமிழா ! அன்று உறங்கத் தொடங்கிய நீ இன்னும் விழித்துக் கொள்ளவில்லை.  விழித்தெழுவாய் என்று நம்பிக்கை வைக்கவும் இயலவில்லை. இந்த நிலையில் தமிழனென்று சொல்லடா ! தலை நிமிந்து நில்லடா ! என்று பாடுவது தவறல்லவா ?

 

எனவே தான் சொல்கிறேன், ஏ ! தமிழா ! உன்னைத் தமிழனென்று சொல்லாதே ! நீ தலை நிமிர்ந்தும் நில்லாதே!

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 14]

{27-04-2022} 

-----------------------------------------------------------------------------

திங்கள், 25 ஏப்ரல், 2022

சிந்தனை செய் தமிழா (11) ஆங்கிலத்துக்கு நீ அடிமை ஆகலாமா ?

தமிழா ! விரைவாகத் திருந்து ! இல்லையேல் உன் அடையாளத்தை இழந்து விடுவாய் !

        

இனமென்பது மொழி வழியால் அமைவது. குலம் என்பது பழக்க வழக்கங்களால் அமைவது. தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர் என்னும் இனம் !

 

பிறப்பு முதல் இறப்பு வரைத் தமிழிலேயே பேசி, தமிழ் வழியாகவே கல்வி கற்று, தமிழிலேயே எழுதி, தமிழ் வழியாகவே அலுவல்களை நடத்தி, தமிழ் வழியாகவே இறைவனைத் தொழுது, தமிழ் வழியாகவே சிந்தித்து, வாழ்ந்து வந்தால் தான் தமிழ் நிலைத்து நிற்கும்; தமிழன் என்னும் அடையாளமும் நமக்குக் கிடைக்கும். தமிழ் நலிவடைந்தால், தமிழன் என்னும் அடையாளமும் நலிவடையும். இந்த மன்பதையில் [ சமுதாயத்தில் ] தமிழன் என்னும் அடையாளத்தை இழந்துவிட்டால், நாம் அனைவரும் ஏதிலிகளாக [ அநாதைகளாக ] இழிந்து போய்விடுவோம் !

 

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ்நாட்டில் வாழும் மக்களில் எத்துணை பேர் வீட்டில் இன்று தமிழ் பேசப்படுகிறது ? மூன்று அகவைக் குழந்தை முதல் முதியோர் வரை, தமிழ் தள்ளி வைக்கப்பட்டு, ஆங்கிலமல்லவா அரசாட்சி செய்கிறது. குட்மார்னிங் (GOOD MORNING), காபி (COFFEE), நியூஸ் பேப்பர் (NEWS PAPER) , பாத்ரூம் (BATH ROOM ), பேஸ்ட் (PASTE), பிரஷ் (BRUSH ), டவல் (TOWEL ), சோப் (SOAP ), ஆயில் (OIL ),டேடி (DADY), மம்மி (MUMMY), ஹோம் ஒர்க் (HOME WORK), ஸ்கூல் வேன் (SCHOOL VAN) ,ஷூ (SHOE), யூனிபார்ம் ( ) குக்கர் ( ), ஸ்டவ் ( ), டிபன் பாக்ஸ் ( ), டாட்டா (TATA) பைபை (BYE BYE). காலை 8-00 மணி வரை தமிழன் வீட்டில் ஒலிக்கும் துன்பியல் இசை அல்லவா இது. வீட்டிலேயே தமிழை ஒதுக்கி வைக்கும் நமக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள என்ன உரிமை இருக்கிறது !

 

ஏ ! தமிழா ! நீ வாழ்வது இங்கிலாந்தா ? தமிழ்நாடா ? உன் தாய் ஆங்கிலேயக் குடும்பத்தில் பிறந்தவளா ? உன் உடலில் ஆங்கிலேயரின் அரத்தமா (BLOOD) ஓடுகிறது ? உன் பிள்ளைகள் அமெரிக்காவில் பணியமர்வு பெற்று, இலட்சம் இலட்சமாக வருமானம் ஈட்டி, உன்னைப் பணத்தால் முழுக்காட்டப் போகிறார்களா ? ஆங்கிலம் பேசுவதால் உன் வீட்டில் அகில் மணமா வீசுகிறது ?

 

ஏ ! தமிழா ! நீ சிந்திக்கும் திறனை இழந்து விட்டாய் ! செம்மறி ஆட்டுக் கூட்டத்தில் முன் ஆடு துள்ளிக் குதித்தால், பின் ஆடும் துள்ளிக் குதிப்பதைப் போல, நீயும் காரணமில்லாமல், அடுத்தவனைப் பின் தொடர்கிறாய். அறிவியல் அறிஞர்கள் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, அரியலூர் வளர்மதி போன்றவர்கள் அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர்கள் என்பதை எண்ணிப் பார்த்தால், உன் வீட்டில் தமிழ் புறக்கணிக்கப்படுவதும் ஆங்கிலத்தை அரியணையில் அமர்த்தி இருப்பதும் நிகழ்ந்திருக்காது !

 

தவறு செய்யும் தமிழா ! விரைவாகத் திருந்து !  இல்லையேல் உன் இன அடையாளத்தை இழந்துவிடுவாய் ! உன்னைத் திருத்திக் கொள்ள மனம் இல்லையேல் இனி உன்னைத் தமிழனென்று சொல்லிக் கொள்ளாதே ! தலை நிமிர்ந்தும் நடக்காதே !

 

---------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 12]

{25-04-2022}

----------------------------------------------------------------------------------------

வியாழன், 21 ஏப்ரல், 2022

சிந்தனை செய் தமிழா (10) தொலைக்காட்சிகளில் பண்பாட்டுச் சிதைவு !

தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுப் பொங்கியெழ வேண்டாவா ?

 

ஒரு நாளில், இருபத்து நான்கு மணி நேரத்தில் நமது  மக்கள் ஏறத் தாழ எட்டு மணி நேரத்தை உறக்கத்தில் கழிக்கின்றனர். எஞ்சியுள்ள பதினாறு மணி நேரத்தில் தொலைக்காட்சி எதிரில் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் கண்டு கண்ணீர் வடிப்பதிலும், காதைக் கிழிக்கும் இசைகளைக் கேட்டு உள்ளம் களிப்படைவதிலும்,  அன்றாடம் நான்கு மணி நேரமாவது அவர்களுக்குக் கரைந்து போகிறது.

 

தேசியப் புவியியல் வலையம் [NATIONAL GEOGRAPHIC CHANNEL], புதியன போற்றும் வலையம் [DISCOVERY CHANNEL], விலங்கியல் உலக வலையம் [ANIMAL PLANET]  போன்ற வலையங்கள்  ஒளிபரப்பும்  அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளைப் போல,  தமிழ்நாட்டு வலையங்கள் [CHANNELS] எந்த நிகழ்ச்சியையாவது நடத்துகின்றனவா?

 

தமிழ் மக்களது சிந்தனையைத்  தூண்டி, அறிவூட்டும் நிகழ்ச்சிகளைக் காண்பித்து, அவர்களது வாழ்க்கை வளம் பெற வழி காட்டுவதற்கு வக்கில்லாத தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்கள், கண்ணீர் வடிக்கும் காட்சிகளைத்  தொடர் நாடகங்களாக்கி, மக்களை உணர்ச்சிப் பிழம்பாக்கிக் கட்டிப் போட்டு, தங்களது T.R.P உயர்வைக் காண்பித்து விளம்பர வருவாயைப் பலமடங்கு உயர்த்திக் கொள்கின்றனர்.  

 

பழி வாங்கும் நாடகங்களைத் தொடர்ந்து  காண்பித்து, மக்கள் மனதில் விலங்கியல் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றனர். செவிப்பறையைக் கிழிக்குமளவு உரத்த ஒலியெழுப்பும் இசைக்கருவிகளைச் சுண்டிவிட்டு மெல்லிசை நிகழ்ச்சிகளை எல்லாம் வல்லிசை வலிப்பாக மாற்றி மகிழ்கின்றனர்.

 

ஐந்து வயதுக் குழந்தையை அரங்கத்தில் ஏற்றி நேற்று ராத்திரி யம்மா !என்று பாட வைக்கும் அவலம் இங்குதான் நடைபெறுகிறது. ஏழு வயதுப் பெண் குழந்தையையும், எட்டு வயது ஆண் குழந்தையையும் மேடையில் ஏற்றிக் காதலர்களாக்கி அருவருக்கத் தக்க அங்க அசைவுகளுடன் ஆடிப் பாட வைக்கும் பண்பாடற்ற செயல்  நமது தொலைக் காட்சி நிறுவனங்களுக்கு நித்தமும்  வாடிக்கை ஆகிப்போய்விட்டது.

 

குழந்தைகளைப் பிஞ்சு வயதிலேயே பழுக்கச் செய்யும் வகையில் நிகழ்ச்சிகளை அமைத்து , அவர்களது எதிர்கால வாழ்க்கையைச் சீரழித்து  தங்களது பணப்பெட்டிகளை நிரப்பிக் கொள்ளும் தொலைக் காட்சி முதலாளிகளுக்கு இருக்கும் பண வெறியை நமது மக்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை.

 

இன்றைய தமிழ் மக்கள் தொலைகாட்சிப் பெட்டிகளின் முன் தவமாய்த் தவமிருக்கிறார்கள் ! மழலை மாறாக் குழந்தைகளின் காதல் பாட்டுகளைக் கேட்டுக் கைகொட்டிச்  சிரிக்கிறார்கள் ! இதையெல்லாம் காணும் போது தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்று தோளுயர்த்திச் சொல்ல முடியுமா ?

 

அதனால்தான் சொல்கிறேன், ஏ தமிழகத்து மானிடனே ! நீ தமிழனென்று சொல்லாதே ! இனி தலை நிமிர்ந்து நில்லாதே !

 

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 08]

{21-04-2022}

------------------------------------------------------------------------------------

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

சிந்தனை செய் தமிழா (09) புதிய கல்விக் கொள்கை - வஞ்சக நோக்குடைய சூழ்ச்சி வலை !

 

இந்தி  மொழி பேசாத மாநிலங்களில் 6 -  ஆம் வகுப்பிலிருந்து இந்தி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடுவணரசு அறிவித்துள்ளது.  இதன்படி 6 -  ஆம் வகுப்பிலிருந்து இந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டியதில்லை; எனினும் மூன்றாவதாக ஒரு மொழியைப் படிப்பது  கட்டாயம் என்னும் அம்சம் நீக்கப்படவில்லை !

 

கல்வி தொடர்பான கொள்கைகளை வறையறுத்தல் கல்வியாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப் பட்டிருக்க வேண்டும். விண்வெளி அறிவியலாளரான கத்தூரிரங்கனிடம் இந்தப்பணியை ஒப்படைத்ததே தவறு. அப்பணியை அவர் ஏற்றுக் கொண்டதும் தவறு. அவரது குழுவினரின் அறிக்கை தவறுகளை மட்டுமே உள்ளடக்கிய தவறான அறிக்கை !

 

கத்தூரிரங்கன் குழுவினர் எத்தனை பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர் ? பள்ளிகளில் நிலவும் சூழ்நிலை பற்றி அவர்கள் ஆய்வு செய்தனரா ? எழுதுவதற்குக் கரும்பலகை இல்லாத பள்ளிகளும், அமர்வதற்கு இருக்கைகள் இல்லாத பள்ளிகளும், ஒதுங்குவதற்குக் கழிப்பறை இல்லாத பள்ளிகளும், கூட்டிப் பெருக்கத் துப்புரவுப் பணியாளர் இல்லாத பள்ளிகளும், சொல்லித் தருவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளும் பல்லாயிரக் கணக்கில் மலிந்து கிடக்கும் இந்நாட்டில் இந்தி மொழியை மாணவர்களின் புத்திக்குள் புகுத்த நினைக்கும் இந்த அறிவாளிகளின் கல்விக் கொள்கை முட்டாள்தனத்தின் முகடாக அல்லவா இருக்கிறது !

 

படித்து விட்டுப் பணி தேடி அலைந்து களைத்து சோர்ந்து விழுந்து கிடக்கும்   கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருதல் பற்றிச் சிந்திக்க வேண்டிய  நடுவணரசு அதைக் கிடப்பில் போட்டு விட்டு இந்திக்கு மகுடம் சூட்ட முனைந்திருப்பது முட்டாள்தனமான முயற்சியன்றி வேறென்ன  ?

 

தமிழக மாணவர்கள் இந்தி படித்து விட்டால், அவர்களுக்கு உத்தரப் பிரதேசம், பீகார், இமாச்சலப் பிரதேசம், இராசத்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் வேலை கிடைக்கிறதா என்ன ? ஆம் என்றால், தமிழ்நாட்டிற்கு இம் மாநிலத்தவர்கள் ஏன் வந்து குவிகின்றனர் ?

 

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமல்ல என்றால், அப்புறம் ஏன் மூன்றாவது மொழியொன்றைப் படிக்கச் சொல்கிறார்கள் ? கட்டாயமல்ல என்று சொல்லிவிட்டு, இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கும் ஏமாற்று வேலையல்லவா இது ?

 

சரி ! 6 - ஆம் வகுப்பில் இந்தி கட்டாயமல்ல ! ஆனால் மூன்றாவது மொழியொன்றைப்  படிக்க வேண்டும் ! இந்தியை எதிர்ப்போரை அமைதிப்படுத்தும்  நயப்பா இந்த அறிவிப்பு ? இல்லை ! வஞ்சக நோக்குடைய சூழ்ச்சி வலை !  ஒரு பள்ளியில் 6 ஆம் வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 10 பேர் வங்காள மொழி  கற்க விரும்புகின்றனர். இன்னொரு 10 பேர் ஒரிய மொழி கற்க விரும்புகின்றனர். அடுத்து ஒரு 10 பேர் மலையாளம் கற்க விரும்புகின்றனார்.

 

இன்னொரு 10 பேர் கன்னடம் கற்க விரும்புகின்றனர். எஞ்சிய 10 பேர் தெலுங்கு கற்க விரும்புகின்றனர். இந்த 50 பேருக்காக வங்காளம், ஒரியா, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி ஆசிரியர்களைத் தமிழக அரசு அமர்வு செய்யப் போகிறதா ? ஒரு பள்ளியில் மட்டும் 5 வெவ்வேறு மொழியாசிரியர்களை அமர்வு செய்தால் ஆயிரக் கணக்கான பள்ளிகளில் எத்தனை பிறமொழி ஆசிரியர்களைத் தமிழக அரசு அமர்த்தப் போகிறது. இதற்கு தமிழக அரசின் நிதி நிலைமை இடம் தருமா ?

 

இறுதியில் என்னவாகும் ? ஒரு பள்ளியில் ஒரு இந்தி ஆசிரியரை மட்டும் அமர்வு செய்துவிட்டு, 6 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இந்தியைத் தேர்வு செய்து படியுங்கள் என்று அன்பாகக் கட்டாயப்படுத்தப் படுவார்கள். இந்தி கட்டாயமல்லாத மாநிலங்களில் மறைமுகமாக இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படும்.

 

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமல்ல, ஆனால் விரும்புகிற வேறொரு மொழியைப் படிக்க வேண்டும் என்னும் அறிவிப்பு இந்திக்கு வழக்குரைஞர்  ஆகி வால் பிடிக்கும் சுரணை கெட்ட தளைவர்கள்  நீங்கலாக ஏனைய தமிழர்களை முட்டாளாக்கும் செயலல்லவா ?

 

முதுகெலும்பு ஒடிந்து கிடக்கும் ஆட்சியாளர்கள் இப்போதாவது நெஞ்சை நிமிர்த்தி இந்தியை எமது பள்ளிகளில் நுழையவிடமாட்டோம் என்று அறிவித்துச் சொல்லிலும் செயலிலும் மெய்ப்பித்துக் காட்டவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு “1965” நிகழ்வதைத் தடுக்க முடியாது !

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 06]

{19-04-2022}

----------------------------------------------------------------------------------

திங்கள், 11 ஏப்ரல், 2022

சிந்தனை செய் தமிழா (08) இந்தி தமிழர்களுக்குத் தேவையா ?

 

ஆங்கிலம் எனக்கு அயல்  மொழி என்றால், இந்தியும்   எனக்கு அயல் மொழியே !

 

பிற மாநிலங்களுக்குச் செல்லும் நம்மவர்கள் இந்தி தெரியாமையால் இன்னற் படுகிறார்களே, நாம் இந்தியைக் கற்றுக் கொண்டால் தான் என்ன ? என்று தமிழ்நாட்டில் சிலர் ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். அதையொட்டிப் பலரும் தமது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர் !

 

தமிழ் நாட்டினர் இந்தி படிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் மூன்று  காரணங்களுக்காக அப்படிச் சொல்கின்றனர். (1) இந்தி நமது நாட்டின் ஆட்சி மொழி. ஆகையால் நாமும் அதை அறிந்திருக்க வேண்டும் (2) இந்தி தெரியாததால் பிற மாநிலங்களில் தமிழர்கள் வேலை வாய்ப்பைப் பெறமுடிவதில்லை. (3) பிற மாநிலங்களுக்குச் செல்கையில் இந்தி தெரியாமையால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இன்னற்பட வேண்டியிருக்கிறது. இதைப் பற்றி சற்று அலசிப் பார்ப்போம் !

 

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு எப்போதுமே ஒரே நாடாக இருந்ததில்லை. விடுதலை பெற்றுப் பல்லாண்டுகளுக்குப் பின்பு தான் -  மன்னராட்சியின் கீழ் இருந்த பல பகுதிகளும், போர்ச்சுகீசியர்கள், பிரஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள் ஆட்சியில் இருந்த பகுதிகளும் இணைக்கப்பட்ட பின்பு தான் ஒரே நாடு என்ற நிலையை அடைந்தது !

 

பல்வேறு  இனத்தவர்கள்,  பல்வேறு  மொழிகள்  பேசுபவர்கள், பல்வேறு பண்பாடு உடையவர்கள், பல்வேறு பழக்க வழக்கங்களை உடையவர்கள் உள்ளடங்கிய நாடு தான் இந்தியா. இந்திய அரசின் 2001 –ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 122 பெரிய மொழிகளும் 1599 சிறிய மொழிகளும் இருப்பதாகக் கணக்கெடுக்கப் பட்டுள்ளது. இவ்வாறு 1700-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நூற்சரமாக ஆங்கிலம் இருந்து வந்தது !

 

இந்திய விடுதலைக்கு முன்பாக இந்திய அரசியல் நிர்ணய சபை ஒன்று ஆங்கிலேய அரசால்  அமைக்கப் பெற்று அதன் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர். இராசேந்திர பிரசாத் டிசம்பர் 1946 –ல் பொறுப்பேற்றிருந்தார் !

 

இந்திய விடுதலைக்குப் பின் டாக்டர். இராசேந்திர பிரசாத் தலைமையில் கூடிய இந்திய அரசியல் நிணய சபையில், இந்தியாவின் ஆட்சி மொழி பற்றிய விவாதம் வந்தபோது, இந்தியாவின் ஆட்சி மொழி ஆங்கிலமா, இந்தியா என்பது பற்றி சர்ச்சை எழுந்தது.  இந்தி பேசாத மாநில உறுப்பினர்கள் இந்திக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர் !


வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில்  ஆங்கிலம், இந்தி இரண்டுக்கும் ஆதரவாக சரி சமாக  வாக்குகள் பதிவாயின. எப்போதுமே நடுநிலை  வகித்து அவையை நடத்த வேண்டிய அவைத் தலைவர் இந்திக்கு ஆதரவாக தனது வாக்கினை அளித்து, தீர்மானம் நிறைவேறச் செய்தார். அரசியல் நிணாய சபையின் முடிவை எற்று இந்திய அரசு,  14-9-1949  முதல் இந்தியாவின்  ஆட்சி மொழியாக இந்தியை அறிவித்து ஆணை வெளியிட்டது !

 

ஏறத்தாழ 1700 –க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் இந்தியாவில், அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய இந்திய அரசு, இந்திக்கு ஆதரவாகச் செயல்பட்டதுடன் அல்லாமல், இந்தியைப் பல வழிகளிலும் பிற மாநில மக்களின் மேல் திணிக்கவும் தொடங்கியது !

 

அதனுடைய தொடர்ச்சி தான் தமிழ் நாட்டிலுள்ள அனைத்து இருப்பூர்தி நிலைய (Railway Stations)ப் பெயர்ப் பலகைகளிலும் இந்தி கோலோச்சுகிறது. அரசுடைமை ஆக்கப்பெற்ற அளகைகளில்  (Nationalized Banks) இந்தி அட்டாணிக்கால் போட்டுக் குந்திக்கொண்டுள்ளது !

 

ஆட்சி மொழி தொடர்பாக, சிறுபான்மையான இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள மற்ற மொழி மக்களின் மேல் ஆதிக்கம் செலுத்தும் போக்கு நாளுக்கு நாள் மிகுதியாகி வருவதால், இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு இந்தி பேசும் மக்களே ஆப்பு வைத்து வருவதாகத் தோன்றுகிறது !

 

ஆங்கிலம் எனக்கு அந்நிய மொழி என்றால், இந்தியும் எனக்கு அந்நிய மொழியே ! அதை ஆட்சி மொழியாக ஏற்கமுடியாது என்ற உணர்வு இந்தி பேசாத மாநில மக்களிடையே நாளுக்கு நாள் மிகுதியாகி வருகிறது. தமிழகத்தில்  இந்த உணர்வு சற்று தூக்கலாக இருக்கிறது !

 

ஆட்சி மொழி தொடர்பான புலனத்தில் (விஷயத்தில்) மையத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்தித் திணிப்பில் மும்முரம் காட்டுவதையே தங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளனர். இந்திய ஒற்றுமை இதனால் பாதிக்கப்படும் என்ற அறிவுணர்வு  அவர்களிடம் இருப்பதில்லை !

 

எண்ணிக்கையில் 1700 –க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிகள் பேசும் மக்களை  இந்திக்காரர்கள் அடிமைப்படுத்த நினைப்பது தவறு. தமிழின் தொன்மையும், வலிமையும், செழுமையும்  இந்திக்குத் துப்புரவாகக் கிடையாது. செம்மொழி நிலையை அடையாத இந்தி, செம்மொழி நிலையை அடைந்த தமிழை அழித்தொழிக்க நினைக்கிறது !

 

அடக்கியாள நினைப்பவர்கள் நெடுங்காலம் வாழ்ந்ததாக  வரலாறே கிடையாது. இந்தி ஆதரவாளர்கள் இதை ஒரு நாள் உணர்ந்தே தீருவார்கள் !


--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மீனம் (பங்குனி) 28

{11-04-2022}

---------------------------------------------------------------------------------

ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

சிந்தனை செய் தமிழா (07) காவிரி கழிமுகம் பாலைவனம் ஆகிடுமா ?


தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மண் அமைப்புக்கு ஏற்றவாறு விளைபொருள்கள் பயிர் செய்யப்படுகின்றன. காவிரி கழிமுகப் பகுதியில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரும்பகுதியில் மண் அமைப்பு களிமண் அல்லது செம்மண் சார்ந்தது. கடலோரப் பகுதிகளில் மட்டும் புழுதி சார்ந்த மண் அமைப்பு உள்ளது !

 

இந்த மாவட்டங்களில் களிமண் சார்ந்த பகுதிகளில் நெல் மட்டுமே விளைவிக்க முடியும். ஆழ்குழாய்க் கிணறு அமைக்கப் பெற்றுள்ள மிகச் சில  இடங்களில் மட்டுமே கரும்பு பயிர் செய்யப்படுகிறது !

 

களிமண் அல்லது செம்மண் அமைப்பு உடைய நிலத்தில் நெகிழ்வுத் தன்மை இருக்காது. ஆகையால் கடலையோ, சோளமோ, மரவள்ளிக் கிழங்கோ, கம்பு போன்ற தானியங்களோ, பருத்தியோ, மல்லிகைச் செடியோ பயிர்செய்ய முடியாது. இதனால் தான் காவிரி கழிமுகப் பகுதி மக்கள் நெல் பயிரிடுவதை மட்டுமே தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர் !

 

நெல் விளைச்சல் பொய்த்துப் போனால், அந்த ஆண்டில் இம்மாவட்ட மக்கள் பட்டினியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பண்டைக் காலத்தில் காவிரியானது  வற்றாத நீர் வளமுடைய ஆறாகத் திகழ்ந்ததால், ஒவ்வொரு ஆண்டும் முப்போகம் (THREE TIMES HARVEST) நெல் விளைந்தது !

 

ஒருகாலத்தில் தமிழ்நாட்டுக்கே சோறு அளித்த தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட கழிமுகப் பகுதி, இப்போது போதுமான நீர் வரத்து இன்மையால், நெல் விளைச்சலில் வீழ்ச்சி கண்டு வருகிறது. நீராதாரம் வலுப்பட்டால், காவிரி கழிமுகப் பகுதி மீண்டும் முந்தைய நிலைக்கு எழுந்து  விடும். (கழிமுகப் பகுதியை டெல்டாஎன்ற ஆங்கிலப் பெயரால் அழைக்காதீர்) !

 

நீருக்காக அல்லாடும் கழிமுகப் பகுதி வேளாண் மக்களுக்கு  நீராதாரத்தைப் பெருக்கித் தருவது மட்டுமே நல்ல அரசுக்கு அழகு. குடிமக்களின் தேவை அறிந்து அதை நிறைவு செய்து கொடுத்து ஆட்சி புரியும் மன்னனின் அடிகளை மக்கள் தழுவி ஆதரவு தருவார்கள் என்கிறார் வள்ளுவர் !

 

கழிமுகப் பகுதி மக்களைக் காக்க வேண்டிய நடுவணரசு, அவர்கள் தலையில் கல்லைப் போட்டுக் கதற வைத்துக் கொண்டிருக்கிறது. விளைநிலங்களை எல்லாம் பாழாக்கி 5,573 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நீரகக் கரிமம் என்னும் ஹைட்ரோ கார்பன்எடுக்கும் திட்டத்தைச் செயற்படுத்தத் துடிக்கிறது !


நீரகக் கரிமத் திட்டம் என்றால் என்ன தெரியுமா ? பூமிக்குள் புதைந்து கிடக்கும் எண்ணெய் மற்றும் எரிபொருள் வளத்தை வெளிக் கொணர்வது. 5,573 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சராசரியாக 5000 மீட்டர் ஆழத்திற்கு, நூற்றுக் கணக்கில் ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்து, அவற்றிலிருந்து எண்ணெய் எடுத்து இந்தியாவின் பொருளாதாரத்தைப் பெருக்கப் போகிறார்களாம் !

 

இத்திட்டத்தால் வேளாண் நிலங்கள் எப்படிப் பாழ்படும் என்று எண்ணத் தோன்றும். இத்திட்டம் பற்றி மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் தெரிவித்துள்ள கருத்து ஆராயத் தக்கது !

 

இத் திட்டத்திற்கு நீரியல் விரிசல் முறைதான் பயன்படுத்தப்படும் என்று ஹைட்ரோ கார்பன்திட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒரு (ஆழ்குழாய்) கிணறு அமைத்தால், அதில் நீரியல் விரிசல் முறை பயன்படுத்தும் போது 14 “டேங்கர்மணலும், 634 வகை வேதிப் பொருள்களும் (இரசாயானங்களும்) கலந்து தண்ணீருடன் அதை உள்ளே விசையாகச் செலுத்தி,  செயற்கைப் பூகம்பத்தை ஏற்படுத்தி, அவற்றை மீண்டும் உறிஞ்சி வெளியில் எடுப்பார்கள்.” !

 

அந்த அளவிற்குத் தண்ணீர் பயன்படுத்தித் தான் நீரியல் விரிசலை ஏற்படுத்துவார்கள். இதற்கான தண்ணீர் எடுக்க பல ஆழ்குழாய்க் கிணறுகளை அப்பகுதியிலேயே அமைப்பார்கள். இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்திற்குப் போய்விடும்.  பூமிக்குள்ளிருந்து உறிஞ்சி வெளியில் எடுக்கப்படும் ஹைட்ரோ கார்பன்,” தண்ணீர், வேதியல் பொருள்கள் சேர்ந்த கலவையிலிருந்து ஹைட்ரோகார்பனைமட்டும்  பிரித்து எடுத்துக் கொண்டு வேதிப் பொருள் கலந்த கழிவு நீர் வெளியில் விடப்படும். அந்தக் கழிவு  நீர் பரவும் இடங்கள் எல்லாம் வளம் திரிந்து  பாலைவனமாக மாறி  மக்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக மாறிவிடும்” !

 

ஒரு  கிணறு மட்டுமே சில ஆயிரம் ஏக்கர் நிலத்தைப் பாலைவனமாக்க முடியுமென்றல், நூற்றுக் கணக்கில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து எண்ணெய் எடுத்தால், இலட்சக் கணக்கான ஏக்கர் நிலம் பாலைவனம் ஆகிவிடாதா?

 

விடாப்பிடியாக இத்திட்டத்தைச் செயற்படுத்த முனையும் நடுவணரசும், அதைத் தடுத்து நிறுத்த வலிமையற்ற மாநில அரசும் சேர்ந்து கொண்டு காவிரி கழிமுகப் பகுதி மக்களை வஞ்சித்து வருகிறார்கள். விளை நிலங்களை அழித்து, “பெட்ரோலியம்உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன்எடுத்து, “கன்னெய்” (பெட்ரோல்) தயாரித்து அரசு ஊர்திகளுக்கு இலவயமாக கன்னெய்நிரப்பி ஊரெல்லாம் உலா வரத் துடிக்கும் இத்தகைய மா மனிதர்களுக்கு  நாமும் ஆதரவு தருவோம் !  நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வோம் !

 

--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்”வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053,மீனம்(பங்குனி) 27]

{10-04-2022|

--------------------------------------------------------------------------------------

 

புதன், 6 ஏப்ரல், 2022

சிந்தனை செய் தமிழா (06) ஓய்வு பெற்ற தமிழறிஞர்கள் ஒதுங்கலாமா ?

தமிழ் உங்களுக்கு உயரிய வாழ்வைத்  தந்திருக்கிறது ! தமிழுக்கு நீங்கள் என்ன தரப் போகிறீர்கள் ?

 ------------------------------------------------------------------------------------


தமிழறிஞர்கள் என்பார் யார் ? தமிழைப் பயின்று, தமிழால்  பதவிப் பொறுப்புகளில் அமர்ந்து, தமிழால் வளமான வாழ்க்கையைப் பெற்று, வாழ்ந்துவரும் அனைவருமே தமிழறிஞர்கள் தான் !

 

பணி ஓய்வு பெற்ற பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள், கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள், பள்ளித் தமிழாசிரியர்கள் அனைவருமே தமிழன்னையின் பால் அருந்தி வளர்ந்தவர்கள் தானே ! தமிழைப் பழுதறக் கற்று, புலமை பெற்ற பூங்கலன்கள் தானே !

 

இன்று, ஆங்கிலம், இந்தி இரண்டுக்கும் இடையே அன்னைத் தமிழ் அகப்பட்டுக்கொண்டு அல்லாடிக் கொண்டிருப்பது உங்கள் கண்களில் படவில்லையா ?. “அஞ்சேல்என்று ஆதரவுக் கரம் நீட்ட வேண்டிய தமிழக அரசு, முதல் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை  ஆங்கில வழிக் கல்வியை [2013 ஆம் ஆண்டு முதல்] அறிமுகப் படுத்தி, தமிழை இருட் சிறைக்குள் தளைப்படுத்தி வைத்திருப்பது உங்கள் கருத்திற்குப் புலப்படவில்லையா ?

 

பெயரோ தமிழ் நாடு; பேசும் மொழியோ தமிழ்; பெருமைப் பட்டுக் கொள்ளும் ஆட்சி மொழியும் தமிழ்; ஆனால் அரசு ஆணைகளில், தமிழ் இல்லை; அறிவிக்கைகளிலும் தமிழ் இல்லை; அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகள் ஆண்டுதோறும் தொடங்கப்படுகின்றன !

 

கல்வி வணிகர்கள் பதின்மப் பள்ளிகளைத் தொடங்கி, தமிழ் மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்; பதின்மப் பள்ளிகளில் பயிற்று மொழியும் தமிழ் இல்லை; பள்ளிகளின் பெயரிலும் தமிழ் இல்லை ! தடுத்து நிறுத்த வேண்டிய அரசிடமும் தமிழ் உணர்வில்லை ! தமிழ் படித்த தமிழன் அரசின் கல்வித் துறைக்கு அகப்படவில்லை போலும் ! கல்வித் துறைச் செயலரோ பிரதீப் யாதவ் என்னும் பீகார் மாநிலத்தவர். என்னே தமிழுக்கு வந்த சோதனை !

 

வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் தள்ளாடுகிறது; தமிழகத்தை ஏய்த்துப் பிழைக்கும் திரைப்படத் துறையில் தமிழ் ஊனப்படுத்தப் படுகிறது; மின்ம ஊடகத் துறையில் தமிழ் சிதைக்கப்படுகிறது. செய்தித் தாள்கள் மக்கள் சிந்தனைக்கு வைப்பது ஜல் சக்தி அபியான்பற்றிய தமிழ்ச் சீர்குலைவுச் செய்திகள் !

 

இத்துணைக் கொடுஞ் செயல்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு, கொதித்து எழ வேண்டிய தமிழறிஞர்கள், விழிகளை மூடிக்கொண்டு வேதிகைகளில் முடங்கிக் கிடப்பது ஏன் ?

 

நீங்களெல்லாம் பணியில் இருக்கையில் எத்தனை மாணவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள்  என்பது பெரிதன்று ! எத்தனைப் புத்தகங்கள் எழுதி இருக்கிறீர்கள் என்பது பெரிதன்று ! எத்தனை ஆய்வுகளை மேற்கொண்டீர்கள் என்பது பெரிதன்று !  எத்தனைக் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறீர்கள் என்பது பெரிதன்று !! எத்தனை இளைஞர்களைத் தமிழுணர்வு கொண்டவர்களாக உருவாக்கி இருக்கிறீர்கள், என்பதை எண்ணிப் பாருங்கள் !

 

இன்றைய இளைஞர்களிடம் தமிழுணர்வு அருகிவிட்டது ஏன் ? இடைநிலை அகவையினரிடம் தமிழுணர்வு அற்றுப் போய்விட்டது ஏன் ? ஹர்ஷா, ஜுவாலா, ஹிரண், விருஷிகா, புருஷ்கா, துருவ்  என்றெல்லாம் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பவர்கள் எல்லாம் யார் ? உங்களிடம் தமிழ் பயின்றவர்கள் தானே  ! நீங்கள் தமிழ் சொல்லிக் கொடுத்தீர்கள்; ஆனால் தமிழ் உணர்வை ஊட்ட மறந்து விட்டீர்களே !

 

எதிர்ப்பே இல்லாமல், தமிழ் நாட்டுப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வகுப்புகளை அரசே தொடங்குகிறது ! தமிழ் மக்களின் ஒழுக்கக் குலைவுகளுக்கு முழு முதற் காரணமாக இருக்கும் திரைப்படத் துறையினர், தாம் உருவாக்கும் தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களைச் சூட்டி அழகு பார்க்கிறார்கள்.  இந்தக் கொடுமைகளை எதிர்த்து எந்த அமைப்பும் குரல் கொடுக்க வில்லை ! எந்த மக்களமைப்பும் போராட்டம் நடத்துவதில்லை !

 

தமிழறிஞர்களான நீங்களும் முடங்கிக் கிடக்கலாமா ? தமிழ் உங்களுக்கு உயரிய வாழ்வை அளித்திருக்கிறது ! தமிழுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ? பல்லாண்டுகளுக்கு முன்பு தமிழகப் புலவர் குழு என்று ஒரு அமைப்பு இயங்கி வந்தது. தமிழுக்கு ஊறு நேரும் போதெல்லாம் அவர்கள் வெகுண்டு எழுந்து எதிர்த்தார்கள் ! அன்னை மொழிக்கு  வந்த இடையூறுகள் அலறியடித்துக் கொண்டு ஓடிப் போயின  !

 

தமிழை முற்றும் முழுதாகப் படிக்காத என்னைப் போன்றோர் தமிழ்ப் பணி மன்றத்தில் நிரம்ப உள்ளனர்; எங்கள் உள்ளத்தில் தமிழுணர்வு ஊற்றாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது ! தமிழ்ப் பணி ஆற்றுவதிலும், தமிழ் உணர்வை ஊட்டுவதிலும் நாங்கள் ஊக்கமுடன் உழைத்து வருகிறோம் ! எங்களை விடப் பன்மடங்கு தமிழ்ப் புலமை வாய்ந்த நீங்கள் தமிழுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் ? தமிழ் எதிர்கொண்டிருக்கும் கேடுகளை எவ்வாறு துடைத்து எறியப் போகிறீர்கள் ?

 

மீண்டும் தமிழகப் புலவர் குழுவை அமையுங்கள் ! ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்கள், பேராசிரியர்களை அதில் உறுப்பினராக்குங்கள் ! பணியில் இருக்கும் இத்தகையவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் ! பதிவு பெற்ற அமைப்பாகப் புலவர் குழுவைக் கட்டமைத்து, தமிழுக்கு அரணாகத் திகழுங்கள் ! தமிழ் தாழ் நிலைக்குத் தள்ளப் படாமலிருக்க, தமிழகமெங்கும் தமிழுணர்வைத் தட்டி எழுப்புங்கள் !

 

தமிழகமெங்கும் பல்லாயிரக் கணக்கில் பரவிக் கிடக்கும் தமிழறிஞர்களே ! ஓய்வெடுத்தது போதும் ! ஊக்கமுடன் தமிழ் காக்க ஓரணியில் திரண்டு  வாருங்கள் !

 

தமிழ்ப் பணி மன்றத்தில் உறுப்பினராக இருக்கும் ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் யாரேனும் ஒருவர் இதில் முன்முயற்சி எடுத்து, அறிவுப்புக் கொடுக்கலாம். அல்லது உறுப்பினராக இல்லாத ஒருவர், இப்போது உறுப்பினராகச் சேர்ந்து, தமிழ்ப் பணி மன்றத்திலேயே உரிய அறிவிப்பைத் தரலாம். யார் முன்வந்தாலும் தமிழ்ப் பணி மன்றம் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருக்கிறது !

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு :2053, மீனம் (பங்குனி) 23]

{06-04-2022}

-------------------------------------------------------------------------------------