விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 30 ஜூன், 2022

சிந்தனை செய் தமிழா (52) பெயருடன் “ஜி” இணைத்துப் பேசாதீர்!

மோடிஜிவடவர் பண்பாடு ! மோடி அவர்கள்தமிழர் பண்பாடு !

 

தமிழ்வாணன் : வாங்க அன்பழகன்ஜி ! சௌக்யமா ?

 

அன்பழகன் :: நலம்தான் தமிழ்வாணன் ! இது என்ன புதுப்பழக்கம், “ஜிபோட்டுப் பேசுகிறீர்கள் !

 

தமிழ்வாணன் : ஜிஎன்பது மரியாதையைக் குறிக்கும் சொல் ! காந்திஜி, நேருஜி, மோடிஜி மாதிரி அன்பழகன் ஜி ! ஏன் ? உங்களுக்குப் பிடிக்கவில்லயா ?

 

அன்பழகன் :: அடுத்து அம்மாஜி, அப்பாஜி, தாத்தாஜி, பாட்டிஜி, அண்ணாஜி அண்ணிஜி, அக்காஜி, மாமாஜி, மாமிஜி என்றெல்லாம் அழைப்பீர்களோ ?

 

தமிழ்வாணன்; எல்லோரும் மரியாதைக்கு உரியவர்கள் தானே ! ஜிபோட்டு அழைத்தால் என்ன ?

 

அன்பழகன் :: அம்மா, அப்பா, தாத்தா, மாமா என்பவை எல்லாம் மரியாதை இல்லாத சொற்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது ?  அம்மாவை அம்மாஜிஎன்று ஜிபோட்டு அழைப்பது தான் மரியாதை என்று எந்த முட்டாள் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் ?

 

தமிழ்வாணன்: ஏன் கோபப்படுகிறீர்கள் அன்பழகன் ? அப்படி என்ன நான் தவறாகச் சொல்லி விட்டேன் ?

 

அன்பழகன் :: அம்மா ! சென்று வருகிறேன்என்று சொல்வது பண்புக் குறைவான கூற்று அன்று ! அம்மா !  சென்று வரேண்டி என்பது தான்  பண்பற்ற பேச்சு ! அம்மாஜி ! சென்று வரேண்டி !என்று சொல்வது பண்புடைய பேச்சாகுமா ? பெயர்ச் சொல் மற்றும் விளிச் சொல்லுடன் ஜிசேர்ப்பது இந்திக்காரர்கள் வழக்கம் !

 

தமிழ்வாணன்: இந்திக்காரர்களின் வழக்கத்தை நாம் பின்பற்றுவது தவறா ?

 

அன்பழகன் :: தவறு தான் ! அவர்கள் பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டுகிறார்கள்; குல்லா போட்டுக் கொள்கிறார்கள் ! நீங்களும் அவ்வாறு செய்வது தானே ! அந்தப் பெண்கள் தலையில் முக்காடு போட்டு, மூக்கிலும், காதிலும், கை, கால்களிலும்  வளையங்களைத் மாட்டிக் கொள்கிறார்கள் ! உங்கள் தாயாருக்கும், மனைவிக்கும் முக்காடு போட்டுக் கொள்ளத் துணியும், கை, கால், மூக்கு, காதுகளில் மாட்டிக் கொள்ள வளையங்களும் வாங்கித் தருவீர்களா ?

 

தமிழ்வாணன்: என்ன இப்படி தப்புத் தப்பாகப் பேசுகிறீர்கள் ? ”ஜிஎன்று அழைத்ததற்காக இவ்வளவு கோபமா ?

 

அன்பழகன் :: இந்தியில் ”, “எழுத்துகள் கிடையா ! அவர்களைப் பின்பற்ற விரும்பும் நீங்கள், இனிமேல் பெத்தபெருமாளை பேத்த பேருமாள்!என்று சொல்லுங்கள் ! வெங்காயத்தை, “வேங்காயம்என்று கடையில் கேட்டு வாங்குங்கள் ! புத்தகக் கடைக்குப் போய், ஐயா ! தோல்காப்பியம்இலக்கண நூல் இருக்கிறதா என்று கேளுங்கள் !

 

தமிழ்வாணன் : போதும் அன்பழகன் ! என்னைக் குழப்பாதீர்கள் !

 

அன்பழகன் :: தமிழ்வாணன் ! இந்தியில் மேசைஎன்பது பெண்பால் ! இனி, மேசை சுவர் ஓரத்தில் கிடக்கிறாள், என்று சொல்லிப் பாருங்கள் !

 

தமிழ்வாணன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை அன்பழகன் ! குழப்பமாக இருக்கிறது !

 

அன்பழகன் :  தமிழ்வாணன் ! ஒவ்வொரு நாட்டினருக்கும், ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்கள் உள்ளன ! உணவுப் பழக்கம், பேச்சு, நடை, உடை, ஒப்பனை, பண்பாடு ஒவ்வொன்றிலும் நமக்கும் அவர்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன ! அவர்களுடன் நாம் அன்பாகப் பழகலாமே அன்றி, அவர்களிடமிருந்து எதையும் இரவல் வாங்கக் கூடாது !

 

தமிழ்வாணன் : அப்படியா ?

 

அன்பழகன் : புலியைப் பார்த்து தன் உடலிலும் வரிகள் இருந்தால் அழகாக இருக்குமே என்று எண்ணி பூனை சூடு போட்டுக் கொள்வது புத்திசாலித் தனமாகுமா ? இந்திக்காரர் ஜிபோட்டுப் பேசுகிறார் என்பதற்காக நாமும் ஜிபோட்டுப் பேச வேண்டுமா ? நாம் எதிரில் வருபவரைப் பார்த்து வணக்கம்என்கிறோம் ! எந்த இந்திக்காரராவது வணக்கம்என்று சொல்கிறாரா ? “நமஸ்கார்என்றல்லவா சொல்கிறார் !

 

தமிழ்வாணன்:  ஆமாம் !

 

அன்பழகன் : வணக்கத்தை அவர் நம்மிடமிருந்து இரவல் வாங்க மறுக்கிறார்; தேவையின்றி, தொடர்வண்டி நிலையங்களிலும், அஞ்சலகங்களிலும், அளகைகளிலும் (BANKS), இந்தியைக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். நம் தமிழகப் போக்குவரத்துக் காவல்துறை வழங்கும் பற்றுச் சீட்டுகளில் கூட இந்தியைப் புகுத்திவிட்டனரே. !

 

தமிழ்வாணன்: நீங்கள் சொல்வது உண்மை தான் !

 

அன்பழகன் : நமது தமிழ், அவர்களுக்கு வேப்பங் காயாகக் கசக்கிறது ! அவர்களது ஜிஉங்களுக்கு இனிக்கிறதா ? தமிழ்வாணன் என்று பெயர் வைத்துக் கொண்டு, தமிழையும், தமிழ் உணர்வையும் மறந்து  நீங்கள் செயல்படலாமா ?

 

தமிழ்வாணன்: நீங்கள் சொல்வதில் ஞாயம் இருக்கிறது ! ஒப்புக் கொள்றேன் !

 

அன்பழகன் : தமிழ்வாணன் ! உங்கள் சிந்தனையில் தெளிவு ஏற்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் ! தெரிந்தோ தெரியாமலோ, தங்கள் பெயருடன் அல்லது பிறர் பெயருடன் ஜிஇணைத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகின்ற தமிழ்நாட்டவர் எல்லோரும் திருந்த வேண்டும் ! தமிழுக்கு அணிசேர்க்க வேண்டுமேயன்றி  பிணிசேர்க்கக் கூடாது !

 

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 17]

{01-07-2022}

-----------------------------------------------------------------------------------


புதன், 29 ஜூன், 2022

சிந்தனை செய் தமிழா (51) திருமண வாழ்வு தோல்வியில் முடிவது ஏன் ?

மன நிறைவில்லா  இல்லற வாழ்வு - காரணம் என்ன ?

 

மருத்துவ அறிவியல் தொடர்பான ஒரு கட்டுரையை எழுதி வெளியிட, கடந்த ஆறு மாத காலமாகச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று தான் அதைச் செயல்படுத்த முடிந்தது. அதை எழுதி இன்று வெளியிடத் தூண்டுகோலாக அமைந்தது 22-09-2019 நாளிட்ட இராணி வார இதழில் மருத்துவர் இரவீந்திரன் குமரன் எழுதியுள்ள ஒரு கட்டுரை !

 

கடந்த   பத்திருபது ஆண்டுகளாக (ONE OR TWO DECADES), திருமண வாழ்வில் நிறைவின்மை காரணமாகப் (DUE TO IMPOTENCY OF HUSBAND) பல பெண்கள் மணவிலக்கு கோரி நீதி மன்றங்களை நாடிய செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  அதுபோலவே, திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தைப் பேறு இல்லாமல் இருக்கும்  இளம் அகவையினர் பலரைப் பற்றிய செய்திகளையும் தெரிந்திருப்பீர்கள் !

 

குறிப்பிட்ட இத்தகைய இரு நேர்வுகளும் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருவதையும் அறிந்திருப்பீர்கள். ஏனிந்தத் துன்ப நிலை ? கடந்த பத்திருபது ஆண்டுகளாக (ONE OR TWO DECADES) மட்டும் இவை நிகழ்வது ஏன் ?

 

மனிதனின் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அவ்வவற்றின் பணிகளுக்காகத் தனித் தன்மையுடன் இயற்கையால் படைக்கப் பட்டிருக்கின்றன. அந்த உறுப்புகளை நாம் பாதுகாக்கக் தவறினால், அவற்றின் செயல் வலிவிழந்து போகிறது !

 

ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஒன்று விதைப்பை (SCROTUM). இந்த விதைப்பைக்குள் உயிரணுக்களை உருவாக்கும் விதைகள் (TESTICLES) இரண்டு இருக்கின்றன. நமது உடல் வெப்பநிலையைவிட ஓரிரு பாகைகள் குறைவாகவே இந்த விதைப் பையின் வெப்பநிலை இருக்க வேண்டும் !

 

கோடைக் காலத்தில், வெளிப்புற வெப்பம் கூடுதலாக இருக்கும் காரணத்தால் மனிதனின் உடல் வெப்பமும் சிறிது கூடுதலாக இருக்கும். உடல் வெப்பம் அளவுக்கு விஞ்சி கூடுதல் ஆகாமல் இருப்பதற்காக, உடலில் உள்ள வேர்வைச் சுரப்பிகள் இயங்கி, வேர்வையை வெளிப்படுத்தி, உடல் வெப்பத்தைக் கட்டுப்படுத்துகிறது !

 

கோடைக் காலத்தில், மனிதனின் விதைப் பை, உடலுடன் ஒட்டி இராமல் தளர்வாக கீழே இறங்கி நிற்கும். இதற்குக் காரணம், கோடை காலத்தில் சிறிது உயர்ந்து  இருக்கும் உடல் வெப்பம் விதைப் பைக்குள் பாதுகாப்பாக இருக்கும் விதைகளைத் தாக்கக் கூடாது என்பது தான் !

 

குளிர்க் காலத்தில் வெளிப்புற வெப்பம் மிகக் குறைந்து காணப்படும். இதன் தாக்கம் உடலைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக, உடல் வெப்பத்தை இயல்பு நிலையில் வைத்துக் கொள்ள உடலின் திசுக்களுக்குள் சில வேலைகள் நடைபெறுகின்றன. அதைப் பற்றிய விரிவு இப்போது வேண்டாம் ! வெளிப்புறத்தில் நிலவும் குளிர்ச் சூழல், விதைப் பைக்குள் இருக்கும் விதைகளைத் தாக்கக் கூடாது என்பதற்காக, விதைப் பையானது குளிர்காலத்தில் சுருங்கி உடலுடன் ஒட்டிக் கொள்கிறது ! வெப்பம் மிதமாக இருக்கும் உடலுடன் ஒட்டிக் கொண்டு, அதன் கத கதப்பில், தாயின் அரவணைப்பில் இருக்கும் குழந்தைபோல, விதைப் பைக்குள் பாதுகாப்பாக இருந்து கொள்கின்றன விதைகள் இரண்டும் !

 

இவ்விரு நிகழ்வுகளும் தன்னியல்பாக (INVOLUNTARILY) நடைபெறுகின்றன.  ஏன் இப்படி நிகழ வேண்டும் ? முன் பத்தியொன்றில், விவரிக்கும் போது, உடல் வெப்பத்தை விட ஓரிரு பாகை குறைந்த வெப்ப நிலையே விதைப்பைக்குள் இருக்கும் விதைகளுக்குத்  தேவை என்பதைப் பார்த்தோம். கோடை காலத்தில், உயரும் உடல் வெப்பம் விதைகளைத் தாக்காமல் இருக்க விதைப் பை தளர்ந்து தொங்குகிறது; குளிர்காலத்தில், வெளியில் வெப்பம் குறைவாகவும் குளிர் அதிகமாகவும்  உள்ளதால், அதனால் பாதிக்கப் படாமல் இருப்பதற்காக விதைப் பை சுருங்கி, உடலுடன் ஒட்டிக் கொண்டு, உடல் வெப்பத்தை பெற்றுத் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது !

 

உயர் வெப்பம் அல்லது போதுமான வெப்பமின்மை காரணமாக விதைப் பைக்குள் இருக்கும் விதைகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன ? இதைப் பார்ப்பதற்கு முன்பு விதைகளின் இயக்கம் பற்றிச் சிறிது பார்க்கலாம் !

 

கணையத்தைப் (PANCREAS)  போன்றே விதைகளும் (TESTICLES)  இரண்டு வேலைகளைச் செய்கின்றன.   உயிரணுக்களை உருவாக்குவது (PRODUCTION OF  SPERMS) , “டெசிடோடிரான்என்ற ஊக்குநீரை (HORMONE) சுரக்கச் செய்வது ஆகியவை அவற்றின் பணிகள் ! உயிரணுக்கள் (SPERMS)  பெண்ணைக் கருவுறச் செய்வதற்குப் பயன்படுகிறது; ஊக்குநீர் (HORMONE) பருவ வயதை எட்டிய ஆண்களுக்கு, மீசை அரும்புவதையும், குரல் தன்மை மாறுவதையும், ஆண்மைக்குரிய உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் செயல்களையும் செய்கிறது !

 

இதில் ஏதாவது ஒரு வேலையை விதைகள் சரியாகச் செய்யாமல், இன்னொரு வேலையைச் சிறப்பாகச் செய்வதும் உண்டு !

 

விதைகள், இயல்பைவிடச் சற்று அதிகமான வெப்பத்தாலோ அல்லது  குளிராலோ பாதிக்கப் பட்டால், அவற்றின் செயல்பாடுகள் வீழ்ச்சி அடைகின்றன ! உயிரணுக்களை உருவாக்கும் (PRODUCTION OF  SPERMS) திறன் குறைகிறது அல்லது முற்றிலுமாக நின்று போகிறது ! அல்லது ஆண்மைக்குரிய உணர்ச்சிகளைத் தூண்டி விடும் வேலை (INDUCING ERECTION) நின்று போகிறது !

 

எப்பொழுது இந்தியாவுக்குள் கீழாடை (JATTY) அணியும் பண்பாடு தோன்றியதோ அப்பொழுதான் சிக்கலும் தோன்றியது. ஆங்கிலேயர்கள் குளிர் அதிகமுள்ள நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கீழாடை (JATTY) அணிந்தால் தான், விதைகளுக்குப் பாதுகாப்பு. விதைப் பை கீழாடையால் (JATTY) இறுக்கப்பட்டு எப்பொழுதும் உடலுடன் ஒட்டியே இருப்பதால், அதிலுள்ள விதைகள் குளிரால் செயலிழக்காமல் பாதுகாப்பாக இருக்கிறது. வெளிப்புற வெப்பம் குறைவாகவே இருப்பதால், அவர்களின் உடல் வெப்பமும் இயல்பாகவே இருக்கும். ஆகையால் உடல் வெப்பத்தால் விதைகள் செயலிழக்கும் பிரச்சினையே அங்கு இல்லை !

 

புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, குளிர் நாட்டுக் காரர்கள் அணியும் கீழாடையை (JATTY) வெப்ப நாட்டுக் காரர்களாகிய நாம் அணியத் தொடங்கினோம். அதிலும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் 24 மணி நேரமும் கீழாடை (JATTY) இல்லாமல் இருப்பதில்லை . கல்லூரிக் காளைகளும் இரவில் கைலி (லுங்கி) அணிந்தாலும், கீழாடையைக் களைவதில்லை.

 

இதன் விளைவு, உடல் வெப்பத்தால், விதைகளின் செயல் பாதிப்படைந்து இரண்டு வகைகளில் வெளிப்படுகிறது. அதில் ஒன்று உயிரணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு ஏற்படுதல் (DECREASE IN SPERM COUNTS) அல்லது வலுவில்லாத உயிரணுக்கள் (WEAKER SPERMS)  உருவாகுதல். இவ்விரண்டுமே அந்த ஆணிடம் மலட்டுத் தன்மையை (INFERTILITY) ஏற்படுத்துகிறது. உடல் நலம் நன்றாக இருக்கும்; உடல் வலிமையும் சிறப்பாக இருக்கும்; ஆனால் திருமணம் ஆன பின் குழந்தைப் பேறு இருக்காது !

 

இரண்டாவது வகையில், உடல் நலத்தில் நலிவு இருக்காது; வலிமையிலும் குறைவிருக்காது; ஆனால் விதைகள் பாதிப்பால் ஊக்குநீர் சுரப்பு போதுமானதாக இல்லாததால் ஆணுறுப்பில் விரைப்புத் தன்மை (PENIS ERECTION)  அற்றுப்போய்விடும். இத்தகைய குறைபாடு உடைய ஆண்களின் கோழைத் தனத்தால், பெண் பார்த்து, திருமணம் செய்வித்து, முதலிரவு வரை செல்லும்  இல்லற ஏற்பாடு, முதலிரவு நாளிலேயே  தோல்வியில் முடிந்துவிடும் ! ஏமாற்றமடையும் பெண், திருமணமான ஓரிரு மாதங்களிலேயே மணவிலக்கு கேட்கும் நிலைக்கு ஆளாகிறாள் !

 

நண்பர்களே ! இப்பொழுது உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும் ! ஆங்கிலேயர்களை அடியொற்றிக் கீழாடை (JATTY) அணிவதன் பலன் எங்கு கொண்டு போய் விடுகிறது பார்த்தீர்களா ? நண்பர்களே ! உங்கள் வீட்டு ஆண் குழந்தைகளை பள்ளி செல்லும் நேரம் தவிர பிற நேரங்களில் கீழாடை (JATTY) அணியாமல் இருக்க,  தக்க அறிவுரை வழங்குங்கள் ! இரவு நேரங்களில் தளர்வான துயிலாடை (NIGHT-DRESS)  அணிந்து உறங்கும் வழக்கத்தினை மேற்கொள்ளச் செய்யுங்கள் !

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmil.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 15]

{29-06-2022} 

-----------------------------------------------------------------------------------

திங்கள், 27 ஜூன், 2022

சிந்தனை செய் தமிழா (50) திரைத் துறையினரின் தமிழ்ப் பகைமை !

நன்றியில்லாத மக்கள் ஈங்கு நாங்கள் அல்லவோ !

 

தமிழுக்கு வளம் சேர்க்கும் வள்ளல்கள் தமிழ் நாட்டிற்கு வெளியில் மட்டுமன்று, தமிழ் நாட்டிற்கு உள்ளேயும் நிரம்ப இருக்கிறார்கள். தமிழ் மக்களின் பணத்தைக் கோடி கோடியாக வாரிக் குவித்து  வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொண்ட  திரைப்படத் துறை வள்ளல்கள், தமிழுக்கு வளம் சேர்க்கும் திருப்பணிகளைப் பாரீர் !

 

தமிழ்ப் படங்களுக்குத் தலைப்பு வைக்க இவர்களுக்குத் தமிழ்ச் சொற்களே கிடைக்கவில்லை தமிழில் சொல்வளம் வறண்டுதான் போய்விட்டது !! நேற்று தொடங்கி கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த தமிழ்ப் படங்களின் அழகிய  தமிழ்ப் பெயர்களைப் பாரீர் !

--------------------------------------------

வெளிவந்த படங்கள்

-------------------------------------------

 

ராட்சசி”, ஜாக்பாட்”, ”சர்கார்”, ”கில்லி”, ”ரன்”, ”சாக்லெட்”, ”தர்பார்”, ”பசங்க,” ”றெக்க”, ”மெட்ரோ”, ”தெகிடி”, ”மெர்க்குரி”, ”தொரட்டி”, ”தொட்டி ஜெயா”, ”நேப்பாளி”, ”டிமாண்டி காலனி”, ”டிக் டிக் டிக்”, ”மான்ஸ்டர்”, ”அயோக்யா”, ”ஆம்பள” “பேட்ட”, ”என்ஜிகே,” ”மிஸ்டர் லோக்கல்”, ”சூப்பர் டீலக்ஸ்”, ”டார்லிங் டார்லிங் டார்லிங்”, ”ஆரஞ்சு மிட்டாய்”, ”மிளகா”, ”பாய்ஸ்”, ”ஜீன்ஸ்”, “மதுர,” ”மெர்சல்,” ”வாலு”, ”ஜோக்கர்”, ”ப்ரண்ட்ஸ்”, ”காலா” “லிங்கா”, ”ஐரா”, ”டிஷ்யூம்”, ”யு டர்ன்”, ”ரோமியோ ஜீலியட்

 

------------------------------------------------------------------------------

விரைவில் வெளிவரவிருக்கும் படங்கள்:

-----------------------------------------------------------------------------

 

விஜய்  நடிக்கும் பிகில்

தனுஷ் நடிக்கும் பட்டாஸ்”, ”அசுரன்

விஜய் சேதுபதி நடிக்கும் லாபம்”, ”துக்ளக் தர்பார்

சிவ கார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ

விஷ்ணு விஷால் நடிக்கும் ராட்சஸன்

ஜெய் நடிக்கும் கேப்மாரி என்கிற சி.எம்.

துருவ் நடிக்கும் ஆதித்ய வர்மா

தினேஷ் நடிக்கும் நானும் சிங்கிள் தான்

காவ்யா நடிக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.

அமுதவாணன் நடிக்கும் மயூரன்

விஜய் தேவரகொண்டா நடிக்கும் மிஸ்டர் காம்ரேட்

அதின் நடிக்கும் ஷார்ப்

தமனா நடிக்கும் பெட்ரோமாக்ஸ்

சாருகாசன் நடிக்கும் அப்பத்தாவ ஆட்டையப் போட்டுட்டாங்க

பிரபாஸ் நடிக்கும் சாஹோ

அகான் நடிக்கும் பௌவ் பௌவ்

சமுத்திரக் கனி நடிக்கும் கொளஞ்சி

யோகி பாபு நடிக்கும் கூர்கா

மிஷ்கின் இயக்கும் சைக்கோ

அதியமான் இயக்கும் ஏஞ்சல்

விமல் நடிக்கும் சண்டகாரி தி பாஸ்

இனியா நடிக்கும் காபி

சிம்பு நடிக்கும் மஹா

சந்தானம் நடிக்கும் டகால்டி

ஜெய் நடிக்கும் லவ் மேட்டர்

ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்

கதிர் நடிக்கும் சர்பத்

அன்பரசன் இயக்கத்தில் வால்ட்டர்

 

-----------------------------------------------------------------------------------

படங்களுக்குப் தமிழில் பெயர் வைப்பதில், தங்கள் தமிழுணர்வை வானளாவ வெளிப்படுத்தும் தமிழகத் திரைப்படத் துறையினருக்கு நாம் கொஞ்சம் உதவி செய்யலாமா ?

-----------------------------------------------------------------------------------

 

என் சார்பில் கீழ்க்கண்ட தலைப்புகளைப் பரிந்துரைக்கிறேன் ! இவை வெறும் தலைப்புகளே ! ஏற்பதும் ஏற்காததும் அவர்கள் விருப்பம் !

 

-----------------------------------------------------------------------------------

(01)  ”நன்றியில்லாத மக்கள் ஈங்கு நாங்கள் அல்லவோ!

(02)  ஆங்கிலத்தை உயர்த்து ! உன் அன்னை மொழியைத் தாழ்த்து !

(03)  சோறு போடும் தமிழை, நீயும் துணிந்து போடு கூறு!

(04)  சுரணை கெட்டத் தமிழனுக்குத் தமிழ்த் தலைப்பு தேவையா ?”

(05)  மானமில்லை ! ஈனமில்லை !  வெட்கமில்லை ! மதியுமில்லை !

(06)  காசுக்காக எதையும் செய்யும் காக்கைக் கூட்டம் அல்லவோ !

(07)  தமிழச்சிக்கு மகனாக இருப்பதைவிட ஆங்கிலத் தாய்க்கு அடிமையாக

     இருப்பது மேல் !

(08)  ஏமாளித் தமிழன் இருக்கும் வரையில் எமக்கு எதற்கு  மனக் கவலை ?”

(09)  தலையைக் காட்டுத் தமிழா ! உன் தலையில் அரைக்கணும் மிளகா(ய்) !

(10)  தாலியை விற்றுப் படம் பாரு ! உன்னைத் தடுப்பதற்கிங்கே ஆள் யாரு ?”

(11)  தமிழுக்குப் சேயாக இருப்பதை விட ஆங்கிலத்திற்கு நாயாக

     இருப்பது மேல்

(12)  கொலைவெறி ! கொலைவெறி ! கொலைவெறி ! தமிழைக் கொத்திக்

     குதறிடக்  கொலைவெறி ! கொலைவெறி கொலைவெறியே !

(13)  அட்டை உருவுக்குப் பால்முழுக்கு ! அடிமைகள் புகழுக்கு ஏதிழுக்கு !

(14)  வாங்க மச்சி வாங்க ! தலைக்குச் சேவை செய்ய வாங்க!

(15)  நாங்க நாட்டைக் கெடுப்போம்! நீங்க வீட்டைக் கெடுங்க !

 

------------------------------------------------------------------------------------

நீங்களும் அழகிய தமிழில் ஏதாவது சில தலைப்புகளை தந்து, திரைப்படத் துறையினருக்கு உதவலாமே !!

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 13]

{27-06-2022}

----------------------------------------------------------------------------------