விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 24 ஜூலை, 2022

சிந்தனை செய் தமிழா (86) தமிழ்நாட்டு அரசியல் சீரழிவு !

காரணமின்றிக் கட்சி தொடங்குபவன் நாட்டைச் சீரழிக்கும் நயவஞ்சகன் !


ஒரு அரசியல் கட்சி தொடங்க வேண்டுமானால் அதற்கு ஒரு முகாமையான தேவை இருக்க வேண்டும் ! நாட்டு விடுதலையை முன்னிறுத்தி இந்தியப் பேராயக் கட்சி (INDIAN NATIONAL CONGRESS) தொடங்கப்பட்டது.  முதலாளிகளின் சுரண்டலுக்கு எதிராக உழைக்கும் மக்களின் உரிமையைக் காப்பதற்குப் பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டது !

 

நாட்டு விடுதலைக்குப் பின், வடமாநிலத்தவரின் மேலாளுமை  நடுவணரசில் அதிகமாகி, தமிழ்நாடு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகப்பட்டது. தமிழ் மொழிக்கு உரிய முன்னிடம் தராமல் புறக்கணிக்கப்பட்டது. இதை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது !

 

இவ்வாறு இந்தியப் பேராயக் கட்சி, இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தோன்றுவதற்குக் காரணம் இருந்தது கொள்கைகள் இருந்தன !

 

ஆனால் மத அடிப்படையில்  மக்கள் கட்சி (ஜனசங்கம்), இசுலாமியக் கட்சி (முஸ்லில் லீக்)  ஆகியவையும், தாழ்த்தப் பட்டவர்களுக்கெனச் சாதி அடிப்படையில் இந்தியக் குடியரசுக் கட்சியும்  தோன்றின !

 

தமிழ்நாடு அளவில்  வேறு கட்சிகள் தோன்றுவதற்கான  தேவை இருந்ததா என்பதை மட்டும் இனிப் பார்ப்போம் !

 

திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து, பிரிந்து அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம்  1972 –ஆம் ஆண்டு ம.கோ.இரா. அவர்களால் தொடங்கப்பட்டது. ம.கோ.இரா. தனிக்கட்சித் தொடங்க வேண்டிய தேவை எதுவும் அப்போது இல்லை.  முழுநேரத் திரைப்பட நடிகராக இருந்த திரு.ம.கோ.இரா. தி.மு.க.வில்  பகுதி நேர அரசியல் ஆளிநராகத் தான் இருந்து வந்தார் !

 

ஆட்சியில் இருந்த தி.மு.க. தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.  அவர் ஆசை பகுதி அளவில் நிறைவேறி சட்ட மேலவை  உறுப்பினராகவும், சட்ட மன்ற உறுப்பினராகவும், சிறு சேமிப்பு வாரியத் துணைத் தலைவராகவும் பதவி வகித்து வந்தார் !

 

தன் செல்வாக்கினால் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது என்று அவர் நம்பினார்; அதன் விளைவாக  தி.மு.க தலைமை / ஆட்சித் தலைமை தன்னைக்கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலானார்..  அவரது ஆசைகள், எதிர்பார்ப்புகள்  நிறைவேற்றப்படுவதில்  தி.மு.க. தலைமை சுணக்கம் காட்டியது. பகுதி நேர அரசியல் ஆளிநருக்கும், முழு நேர அரசியல் ஆளிநர்களுக்கும் கட்சிக்குள் ஏற்பட்ட மோதல், கட்சிப் பிளவுக்கு வழி வகுத்தது !

 

தான் முதலமைச்சராக ஆகவேண்டுமெனில் தனிக் கட்சி தொடங்கியாக வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார்.  விளைவு, அ.தி.மு.க என்ற புதிய கட்சியை 1972 –ஆம் ஆண்டு அவர் தொடங்கினார்.  அந்தக் கட்சியின் கொள்கை அண்ணாயிசம்என்றார்.  ஆனால் அதற்கு இன்று வரை அந்தக் கட்சியினரால் விளக்கம் சொல்ல முடிய வில்லை ! அண்ணா தி.மு.க என்ற கட்சி, பின்பு அகில இந்திய அண்ணா தி.முக என்று பெயர் மாற்றம் பெற்றது !

 

சொந்த ஆசைகள் நிறைவேறவில்லை என்னும் சினத்தினால், கொள்கையே இல்லாமல், தொடங்கப்பட்ட கட்சி என்ற பெருமையை அக்கட்சி அரசியல் அரங்கில் பெற்றது. திரைப்படங்களில் நல்லவராகவும், வல்லவராகவும், ஏழைகளுக்கு உதவி செய்பவராகவும் நடித்து வந்ததால், அதை  உண்மை என்று நம்பிய   பகுத்தறிவில்லா மக்களிடையே அவருக்குச் செல்வாக்குப் பெருகியது !

 

மாநிலத் தன்னாட்சி என்னும் கொள்கையுடன் 1967 – முதல் ஆட்சியில் இருந்து வந்த தி.மு.க.வை  வீழ்த்துவதே தன் பணி என்று திரு.ம.கோ.இரா. செயல்படலானார்.  அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வராக இருந்த திரு.கருணாநிதி மீது ஊழல் புகார்களைக் கூறி குடியரசுத் தலைவரிடம் விண்ணப்பம் கொடுத்தார் !

 

வடநாட்டு அரசியல் ஆளிநருக்கு இது போதாதா ? நெருக்கடி நிலையை ஆதரிக்கவில்லை என்பதற்காக,  ஊழல் புகார்கலைக் காரணம் காட்டி கருணாநிதி ஆட்சியை இந்திராகாந்தி கலைத்தார். கருணாநிதி ஆட்சியில் தவறுகள் நடபெற்றன என்றால் அதைக் கட்சிக்குள்ளேயே பேசி, திரு.ம.கோ.இரா சரிசெய்திருக்க வேண்டும் . மாறாக கருணாநிதியை வீழ்த்துவதற்காக ஊழல் புகார்ப் பட்டியல் தந்தது அரசியல் தவறு !

 

1972-ஆம் ஆண்டு தமிழ் நாட்டுக்கான கேடு காலத்தைத் தொடங்கி வைத்தார் திரு.ம.கோ.இரா. அதற்குப் பிறகு கருணாநிதி ஆட்சிக் கவிழ்ப்பு, ம.கோ.இரா. அரியணை  ஏற்றம், ம.கோ.இரா. மறைவு, செயலலிதா அரியணை ஏற்றம், செயலலிதா மறைவு, கருணாநிதி மறைவு என்று பல நிகழ்வுகள் நடந்துவிட்டன ! இந்த இடைக்காலத்தில் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கும், ஆட்சிக்கு வந்த பின் அதைத் தக்க வைப்பதற்கும் . இந்தியப் பேராயக் கட்சி, பா.ச.க. என்று மாற்றி மாற்றி கூட்டணி வைக்க வேண்டியதாயிறு !

 

அ.இ.அ.தி.மு.க.வினரும் ஆட்சிக்கு வருவதற்கும், வந்த பின் அதைத் தக்க வைத்துக் கொள்வதற்கும்  இந்தியப் பேராயக் கட்சி, பா.ச.க. என்று மாறி மாறி கூட்டணி வைக்கலாயினர். மொத்தத்தில், எந்த வடநாட்டு அரசியல் ஆளிநரின் மேலாளுமைக்கு எதிராகத் தமிழகம் கிளர்ந்து எழுந்ததோ, அவர்களுடனேயே கூட்டணி  வைத்துக் கொண்டு தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம்  தி.மு.க.வுக்கு ஏற்பட்டது !

 

திரு.ம.கோ.இராவின் (M.G.R) பதவி ஆசைக்குத் தமிழ்நாடு பலிகடா ஆகிற்று ! இந்தியை முனைப்பாக எதிர்த்த தி.மு.க. இப்போது பெயரளவுக்கு மட்டுமே எதிர்ப்புக் காட்டுகிறது. பெரியாரின் குமுகாயச் சீர்திருத்தக்  கொள்கைகளைக் கையிலெடுத்து  முனைப்புடன் செயல்பட்த் தொடங்கிய தி.மு.க இப்போது அதிலிருந்து எழுச்சியுடன் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது !

 

தமிழ் வளர்ச்சியில் முழுமையாக அக்கறை காட்டிய தி.மு.க , இப்போது அதை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டது !  பகுத்தறிவுக்  கொள்கைகளில் முனைப்புக் காட்டிய தி.மு.க, இப்போது அதைப் பற்றிப் பேசுவதையே விட்டுவிட்டது !

 

தமிழ் வழிக் கல்வி, அனைத்து மக்களும் அர்ச்சகராகும் உரிமை, பிற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிப்பு, மிகப் பிற்பட்டவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு, தரமணியில் மென்பொருள் பூங்கா அமைப்பால்  வேலை வாய்ப்புப் பெருக்கம், யுண்டாய் (HYUNDAI) போன்ற பெருந்தொழில் வளாகப் பெருக்கம், பெரியார் சமத்துவ புரங்கள் மூலம்  பல மக்களுக்கு இலவய வீடுகள், குடிசை மாற்ரு வாரியம் அமைப்பு போன்ற எண்ணற்ற பயன்மிகு திட்டங்களை முன்னெடுத்த தி.மு.க அரசு, திரு.ம.கோ.இராவின்  குழிபறிப்பினால், தனது திட்டங்களில் கவனம் செலுத்த முடியவில்லை !

 

கடந்த நான்கரை ஆண்டுகளாக (2014 - 2019)  மதம் தமிழ்நாட்டையே ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. மத நம்பிக்கையுள்ள இராசாசி பதவிப் பொறுப்பில் இருக்கையில்  நெற்றியில் நாமம் தரிக்கவில்லை. இதற்கு முன்பு தமிழ்நாட்டில் முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ பதவியிலிருந்த எவரும் தமது மதம் சார்ந்த சின்ன்ங்களை தம் நெற்றியில் இட்டுக் கொள்ளவில்லை !


இதற்குக் காரணம் முதல்வரும், அமைச்சர்களும் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் என்னும் உயரிய  கோட்பாடு தான்.  ஆனால் இப்போது முகல்வர் (இ.பி.எஸ்) உள்பட பலர் நெற்றியில் திருநீறோ குங்குமமோ இல்லாமல்  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை !

 

ஒரு பக்கம் பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டும் இன்னொரு பக்கம் மதச் சார்புடைவராகக் காட்டிக் கொண்டும் இரட்டை நிலை எடுத்திருக்கும்  இன்றைய (அ.இ.அ.தி.மு.க) ஆட்சியாளர்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தைத் தந்து கொண்டிருக்கிறார்கள் !

 

தமிழ்நாடு இவ்வாறு சீரழிந்து போனமைக்கு முழு முதற்காரணம் மருதூர் கோபால மேனன் மகன் இராமச்சந்திர மேனன், [திரு.ம.கோ.இரா (M.G.R)]  தவிர வேறு யாருமல்ல !

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 08]

{28-07-2022}

--------------------------------------------------------------------------------

சிந்தனை செய் தமிழா (85) கோயில்களில் தேவதாசி முறை ஒழிப்பு!

மொழிவாரி மாநில அமைப்புச் சட்டம்  1956-ஆம் ஆண்டு  நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றின் நிலப் பகுதிகளுள் பல  சென்னை மாகாணம் (Mardas Presidency) என்ற பெயரில் இந்திய அரசின் ஆளுகையில் இருந்து வந்தன !

 

அப்போது இத்தகைய மாகாணங்களின் ஆட்சித் தலைவர் பிரதமர்” (Premier) என்று அழைக்கப்பட்டார். சென்னை மாகாணப் பிரதமராக பேராயக் கட்சியை (CONGRESS) சேர்ந்த ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் 1947-ஆம் ஆண்டு மார்ச் 03 முதல்,   1949  ஏப்ரல் 06 வரை பதவியில் இருந்தார் !

 

இவரது ஆட்சிக் காலத்தில்தான் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்  1947-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 9-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் பெரியார் ஈ.வெ.இராவும் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியும் !

 

தேவதாசி முறை  என்றால் என்னவென்று உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்து மதப் பழக்க வழக்கங்களில் (சடங்குகளில்)  ஒன்று பசுமாடுகளை கோவிலுக்குத் தானமாகக் கொடுத்தல். இன்னொரு சடங்கு குறிப்பிட்ட  ஒரு சாதிப் பெண்களைக் கோவிலில் ஊழியம் செய்வதற்கு  நேர்ந்துவிடுதல் !

 

இளம் அகவைச் சிறுமியரை கோவிலுக்கென்று ஒப்படைக்கும் இதற்கு பொட்டுக் கட்டி விடுதல்என்று பெயர். இந்தச் சிறுமியர், இசை, நடனம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டு, அன்றாடம் கோயில் கருவறையில் பூசை நடக்கும் போது பாட்டுப் பாடி நடனம் ஆடுவர். அவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கோவிலில் ஊழியம் செய்துவரவேண்டும் ! இவர்கள் தேவன்எனப்படும் இறைவனுக்கு தாசியாக வாழ்வதால் இவர்களுக்குத் தேவதாசிஎன்று பெயர் !

 

தாசிஎன்னும் சொல்லுக்கு என்ன பொருள் என்பது உங்களில் பெரும்பாலானோர்க்குத் தெரியும் என்று நினைக்கிறேன். கோயிலின் சொத்து ஆகிவிட்ட இந்த தேவதாசி  சிறுமியருக்கு, குமுகாயப் பாதுகாப்பு ஏதுமில்லை. அவர்கள் வயதுக்கு வந்த பின்பு, பலருக்கும் ஆசைநாயகியாக வாழவேண்டிய அவல நிலை. இதில் கருவுறும் பெண்கள், குழந்தை பெற்ற பின்பு, அக்குழந்தையைத் தன் குடும்பத்தில் ஒப்படைத்துவிடுவாள். அக்குழந்தை, அங்கு தன் தாத்தா பாட்டியோடு வளர்ந்து வரும் !

 

இவ்வாறு வளரும் குழந்தை பெண்ணாக இருந்துவிட்டால், அக்குழந்தையும், பருவத்திற்கு வருவதற்கு முன்பு பொட்டுகட்டிகோயிலுக்கு நேர்ந்து விடப்படும். இவ்வாறு தந்தை பெயர் தெரியாத குழந்தைகள் அக்காலத்தில் குறிப்பிட்ட சாதிக் குடும்பங்களில் நிரம்பவே இருந்துவந்தன !

 

கோயிலுக்கு பசுமாடுநேர்ந்துவிடும் செயலுக்கு நிகராக, “இளஞ் சிறுமியரைகோயிலுக்கு நேர்ந்துவிடும் தேவதாசிமுறைக்கு, புதுக்கோட்டையைச் சேர்ந்த, தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர், முத்துலட்சுமி ரெட்டி அவர்களும், பெரியார் ஈ.வெ.இரா. அவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஊரெங்கும் பரப்புரைகள் செய்துவந்தனர். பெரியாரின் திராவிடர் கழகம் இதில் மிகுந்த முனைப்புக் காட்டியது !

 

நாடு விடுதலை பெற்ற பிறகு, ஒமந்தூரார் தலைமையில் அமைந்த  சென்னை மாகாண அரசு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றி, இந்து மதச் சடங்குகளில் நிலவி வந்த  முட்டாள்தனமான பகுத்தறிவற்ற,  முடைநாற்றம் வீசும்  இந்த  வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது !

 

நாட்டிலும், அரசியலிலும், கோயில்களிலும் மேலாளுமை செலுத்திவந்த இன்றும் செலுத்தி வருகிற - பிரம்மனின் சிரசிலிருந்து பிறந்ததாகச் சொல்லிக் கொள்ளும் -  குறிப்பிட்ட உயர்சாதி மக்கள் பொறுப்பார்களா தேவதாசி ஒழிப்புமுறையை ?  பேராயக் கட்சிக்குள் (காங்கிரசுக்குள்) ஓமந்தூராருக்கு எதிராகக் கலகத்தைத் தொடங்கினர். விளைவு ? ஓமந்தூரார் பதவி விலக நேர்ந்தது ! பி.எஸ்.குமாரசாமி ராஜா அடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது அன்றைய கதை !

 

இன்றைய கதை என்ன ? அனைத்து சாதியினரும் அர்ச்சகரா ? விடுவோமா ? கலகக் குரல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர் பிரம்மனின் சிரசிலிருந்து குதித்து வந்த  சாதியினர்.  வழக்கம் போல் இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன?” என்று ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறது பிரம்மனின் பாதத்திலிருந்து பிறந்ததாக சொல்லப்படும் சூத்திர சமுதாயம் ! வாழ்க தமிழர்கள் 


--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70v@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 08]

{24-07-2022}

--------------------------------------------------------------------------------

சிந்தனை செய் தமிழா (84) மருத்துவக் கல்லூரிச் சேர்க்கையும் நுழைவுத் தேர்வும் !

ஊரகப் பகுதியில் வாழும் உலகப்பன் வீட்டுப் பிள்ளை மருத்துவர் ஆகக் கூடாதா?

 

தமிழ்நாட்டில் இப்போது இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை 23. தனியார் மருத்துவக் கல்லூரிகள் =20. ஆக மொத்தம் = 43.

 

இன்றைய நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒப்பளிக்கப் பட்டுள்ள மாணவர் பயிற்சி இடங்கள் = 3300. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒப்பளிக்கப்பட்ட பயிற்சி இடங்கள் = 2100. இதில் 1050 இடங்கள் அரசால் நிரப்பப்படும். எஞ்சிய 1050 இடங்கள் கல்லூரி ஆட்சியாளர்களால் (Management) நிரப்பப்படும் !

 

அரசுக் கல்லூரி + தனியார் கல்லூரிகளில் அரசால் நிரப்படவிருக்கும் இடங்கள் = 3300 + 1050 = 4350. இதில் 15% இடங்களான 653 இடங்கள் ஒன்றிய அரசு நிரப்ப வேண்டியவை (All India Quota). எனவே மாநில அரசு நிரப்ப வேண்டிய நிகர இடங்கள் = 4350 – 653 = 3697  !

 

இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள்= 3697 X 7.5% = 277 .நேற்று ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் பேசும் போது, கடந்த ஆண்டு 7.5% இட ஒதுக்கீட்டின்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 430 என்று கயிறு திரித்தார். 277 எப்படி 430 ஆயிற்று ? மேடை ஏறிவிட்டால் விருப்பம் போல் ஏதாவது அள்ளிவிட வேண்டியதா ?

 

நீட்தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 430 என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். இவர்களுள் எத்தனை பேர் ஊரகங்களை (கிராமங்களை) சேர்ந்தவர்கள் என்று சொல்லாமல் ஏன் மறைக்கிறார்கள் ?

 

ஏனென்றால் ஊரகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட்பயிற்சிக்குச் செல்ல முடிவதில்லை. நீட்என்னும் தடையை அவர்கள் முன் ஏற்படுத்தி, அவர்கள் ஆசைகளை முளையிலேயே கருக்கிவிடுகிறார்கள்.

 

ரசுப்பள்ளி மாணவர்கள் 430 பேருக்கு உண்மையிலேயே இடம் கிடைத்திருந்தால் அதில் திரு. எடப்பாடி பழனிச்சாமியோ அவரது கூட்டணிக் கட்சியினரோ , பெருமைப் பட்டுக் கொள்வதற்கு ஏதுமில்லை. ஏனென்றால் அரசுப் பள்ளிஎன்பதற்கான விளக்கத்தில் தான் சூட்சுமம் இருக்கிறது ! எப்படியா ? தொடர்ந்து படியுங்கள் !

 

அரசுப்பள்ளிகள் என்னும் வகைப்பாட்டின் கீழ் எந்தெந்தப் பள்ளிகள் வருகின்றன தெரியுமா ?

 

(01)  சென்னை, வேலூர், கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் மாநகராட்சி மற்றும் அரசு மேனிலைப் பள்ளிகள் (இவை எல்லாம் நகரப் பகுதிகள் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்)

 

(02)  செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நாகர்கோயில் போன்ற நகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் நகராட்சி மற்றும் அரசு மேனிலைப் பள்ளிகள்.( இவையும் நகரப் பகுதிகளே)

 

(03)  பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மேனிலைப் பள்ளிகள்.

 

(04)  சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் ஒன்றிய அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்தின் படி சேர்க்கப்பட்டுப் பயின்ற மாணவர்கள். (இவர்களும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ் வருகின்றனர்)

 

வகை 1-ன் கீழ் வரும் மாநகராட்சிப் பகுதிகளில் நீட்பயிற்சி மையம் இருக்குமாதலால் அங்கு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள்.

 

வகை 2-ன் கீழ் வரும் நகராட்சிப் பகுதிகளில் நீட்பயிற்சி மையம் இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே இங்கு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்புகள் இருக்கக் கூடும்; அல்லது இல்லாமலும் இருக்கலாம்.

 

வகை 3-ன் கீழ் வரும் பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் நீட்பயிற்சி மையங்கள் இருக்காது. எனவே இங்கு இயங்கிவரும் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் நீட்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பை முற்றிலும் இழந்துவிடுகிறார்கள்.

 

 வகை 4- என்பதை இப்போது கணக்கில் கொள்ள வேண்டாம்.

 

இப்போது ஒரு கருத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அரசுப் பள்ளியில் படித்த மானவர்களில் ஒரு பகுதியினர் நீட்பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள். இன்னொரு பகுதியினர் அந்த வாய்ப்புக் கிடைக்காதவர்கள் !

 

இவ்வாறு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்புக் கிடைக்காதவர்கள் யார் தெரியுமா ?

 

(01) ஊரகங்களில் (கிராமப் புறங்களில்) உள்ள வேளாண் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள்.

(02) ஊரகங்களில் உள்ள சிறு, குறு வேளாண் நில உடைமையாளர்கள் வீட்டுப் பிள்ளைகள்.

(03) ஊரகங்களில் உள்ள சலவைத் தொழிலாளி, முடி திருத்தும் தொழிலாளி, தச்சுத் தொழிலாளி, மட்பாண்டத் தொழிலாளி வீட்டுப் பிள்ளைகள்

(04) ஊரகங்களில் உள்ள பட்டியலின மக்கள் வீட்டுப் பிள்ளைகள்.

(05) ஊரகங்களில் வாழும் நெசவாளர் குடும்பத்துப் பிள்ளைகள்.

(06).மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் வீட்டுப் பிள்ளைகள்.

 

மேற்கண்ட ஆறு வகைகளில் வரும் பிள்ளைகள் 12 –ஆம் வகுப்புத் தேர்வில் 95% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றாலும், “நீட்பயிற்சி இல்லாத காரணத்தால், அந்தத் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெறமுடியாமையால், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.

 

நீட்தேர்வு ஆதரவாளர்கள் ஏன் இவர்களைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை ?


ஊரகப் பகுதியில் வாழும் உலகப்பன் வீட்டுப் பிள்ளை மருத்துவர் ஆகக் கூடாதா?   வேளாண் கூலித் தொழிலாளி வெள்ளைச்சாமி வீட்டுப் பிள்ளை மருத்துவர் ஆகக் கூடாதா?  ஊரகத்தில் வாழும் சலவைத் தொழிலாளி சக்கரபாணியின் பிள்ளை, சலவைத் தொழிலைத் தான் செய்து வர வேண்டுமா?  மண்ணெண்னெய் விளக்கில் படித்து 97% மதிப்பெண் வாங்கியுள்ள முடிதிருத்தும் தொழிலாளி முத்துவின் பிள்ளை மருத்துவக் கல்லூரியில் சேர ஆசைப்படக் கூடாதா?

 

திரைகடலையே நம்பி வாழும் தேவனாம்பட்டினம், பூம்புகார், வேளாங்கன்னி, வேதாரணியம், கோடிக்கரை, முத்துப்பேட்டை , மீமிசல், கடலாடி, கன்னியாகுமரி போன்ற கடலோரப் பகுதி மீனவர்களின் பிள்ளைகள் நீட்தேர்வுக்குப் பயிற்சி பெற எங்கு செல்வர்?

 

அங்கு பயிற்சி மையங்களா இருக்கின்றன? அப்படியே இருந்தாலும் பயிற்சி மையத்தில் சேர அவர்களிடம் இலட்சம் இலட்சமாக பணம் கொட்டியா கிடக்கிறது?

 

நகர்ப் புறங்களையே எடுத்துக் கொள்வோம். நகர்ப்பகுதியில் வாழும் பொறிச் சிவிகை வலவர்கள் (Auto Rikshaw Drivers) , போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், சுமை தூக்கிப் பிழைப்போர், நடைபாதையோரத்தில் பூ விற்போர், ஆப்பக் கடை வைத்திருப்போர், குடிசை வாசிகள், மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவமனைத் தூய்மைப் பணியாளர்கள், சிறு, குறு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், கடற்கரையில் மாலை நேரங்களில் சுண்டல் விற்போர் போன்றோர் வீட்டுப் பிள்ளைகளால் நீட்பயிற்சிக்குப் பணம் செலவழிக்க முடியுமா?

 

ஊரகங்களிலேயே முடங்கிப் போய்விட்ட பல்வகைப்பட்ட மக்கள், பயிற்சி மையம் அருகில் இல்லமையால் நீட்பயிற்சி பெறும் வாய்ப்பு இல்லாதோர், வாய்ப்பு இருந்தும் பணவசதி இல்லாதோர், அன்றாடங் காய்ச்சிகள் தமிழகத்தில் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள், அவர்கள் வீட்டிலும் நன்கு படிக்கும் பிள்ளைகள் இருக்கின்றனர், அவர்களுக்கும் மருத்துவராகும் கனவு இருக்கத்தானே செய்யும் !

 

அவர்களுக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தரவேண்டமா?  இந்த அடித்தட்டு மக்களைப் பற்றிய பகுத்தறிவு துளிக் கூட இல்லாமல் ஆட்சியாளர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே !

 

ஊரக மக்களின் நிலை பற்றி, அவர்களின் இயலாமை பற்றி குளிரூட்டிய அறையில் வாழும் இந்தியத் தலைமை அமைச்சர் திரு.நரேந்திர மோடிக்கும் தெரியாது, ஒன்றிய அரசின் கல்வி அமைச்சருக்கும் தெரியாது, ஒன்றிய அரசின் நலத்துறை அமைச்சருக்கும் தெரியாது !


மேட்டுக் குடி மக்களான பாரதிய சனதாக் கட்சியினருக்கும் தெரியாது, பதவிக்காக அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் பிற ஆளிநருக்கும் தெரியாது ! ஏன் உச்சநீதிமன்றத்தில் உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு நீட்தேவை தான் என்றும் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளுக்கும் தெரியாது !

 

ஊரக மக்களின் ஏழைப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நீட்கொண்டு வந்து சிதைக்கிறோமே என்ற உணர்வு இல்லாமல் வாழும் மேட்டுக் குடியினருக்கு நாட்டை ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது ?

 

நீட் தேவை என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கும் மேட்டுக்குடி மக்களே, இருட்டறையில் வாழும் குருட்டுப் பூனைகளே ! உங்கள் கண்களை அகலத் திறந்து ஏழைகளின் கண்ணீர்த் துளிகளைப் பாருங்கள் !

 

மருத்துவக் கனவு சிதைந்து போனதால் உயிரையே துறந்து விட்ட அனிதாக்களைப் பாருங்கள் !

 

அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைக்கச் செய்ய உங்களால் முடியாவிட்டால், உங்களுக்கு ஆட்சி எதற்கு ? அதிகாரம் எதற்கு ?

 

 --------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053: கடகம் (ஆடி) 08]

{24-07-2022}

---------------------------------------------------------------------------------

சிந்தனை செய் தமிழா (83) புதிய விடியல் பூக்குமா ? நல்லன நடக்குமா ? தீயன விலகுமா ?

விடலைப் பிள்ளைகளின் மனதில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தும் திரைப்படங்கள் !


அன்பு, அமைதி, அடக்கம், அறிவுடைமை, வெகுளாமை, நல்லொழுக்கம், இன்மொழி ஆகியவை மனிதன் என்னும் சொல்லுக்கு இலக்கணமாக அமையும் பண்புகள் ! இவற்றில் எந்தவொன்று குறைந்தாலும் அவன் முழுமையான மனிதனாக மாட்டான் !

 

இந்தப் பண்புகளை இளமையிலேயே கற்றுத் தரவேண்டியவை பள்ளிக் கூடங்கள் ! ஆனால் இக்காலக் கல்விக் கொள்கையும் செயல் திட்டங்களும் தன் அடிப்படைத் தடத்திலிருந்து புரண்டு, திசை தவறித் தொலைவாகப் போய்விட்டன. இக்கால மாணவர்கள், தம் வாழ்விடச் சூழலுக்கு ஏற்ப, தாமாகவே சிலவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக் கொள்பவற்றுள் நல்லனவும் உள்ளன; தீயனவும் இருக்கவே செய்கின்றன !

 

இளமைப் பருவத்தில் இருப்பவர்களைத் தம்பால் ஈர்க்கும் புறவுலகக் காரணிகள் நிரம்பவே இருக்கின்றன. அவற்றுள் பெரும் பங்கு வகிப்பது திரைப்படங்கள் ! இன்றைய திரைப்படங்கள் காதல்என்னும் ஒற்றை அடிக்கல்லின் மீது எழுப்பப் படும் அருவருப்பு மாளிகைகளாகத் திகழ்கின்றன. அடிக்கல்லை உருவிவிட்டால், கட்டடமே சரிந்து வீழ்ந்துவிடும் !

 

வாழ்வில் காதல் என்பது ஒரு சிறு பகுதி. இதற்கு அப்பாலும் பல நிகழ்வுகள் மனித வாழ்வில் நடை பெறுகின்றன. ஆனால் அவற்றை எல்லாம் மறந்துவிட்டு, “காதல்என்னும் மின்மினிப் பூச்சியை மட்டுமே பேசு பொருளாகக் கொண்டு எடுக்கப்படுகின்ற திரைப்படங்களின் எண்ணிக்கை இலக்கக் கணக்கில் (இலட்சக் கணக்கில்) பெருகி வருகின்றன !

 

நடைமுறை வாழ்வில் எந்தவொரு ஆணும் பெண்ணும், ஆற்றங்கரையிலும், அடர்ந்த காடுகளிலும், கடற்கரைகளிலும் மலை முகடுகளிலும் ஆடிப் பாடுவதும், அருவருப்பாகக் கட்டிப் பிடிப்பதும் நாம் காண முடியாத காட்சிகள் ! கட்டிப் பிடி, கட்டிப் பிடிடா, என்னைக் கண்டபடிக் கட்டிப் பிடிடாஎன்று ஓடியம் (OBSCURE) நிறைந்த பாடல் வேறு !

 

முகைப் பருவம் (TEEN - AGE) என்பது இயற்கையாகவே பாலுணர்வுகள் கிளர்ச்சி அடைகின்ற பருவம். இப்பருவத்தில், விடலைப் பிள்ளைகளின் மனதில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தும் திரைப்படங்களை நம் வீட்டு நடுக்கூடம் வரைக் கொண்டு வந்து சேர்ப்பதில் தான் தொலைக் காட்சி ஊடகங்களுக்குள் எத்துணைப் போட்டி !

 

பதினைந்து அகவைப் பிள்ளைகளுக்குப் பள்ளிக் கூடப் பாடங்களைச் சொல்லித் தந்தால், பிள்ளைகளின் எதிர்காலமும் வளம்பெறும்; நாடும் நலம் பெறும் ! ஆனால் காசு வெறி பிடித்த கயவர்களின் கைகளில் சிறைப்பட்டுக் கிடக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள், காதலைப் பற்றிய காட்சிகளை மட்டுமே காட்சிப் படுத்தும் திரைப்படங்களைக் காட்டி அவர்களைப் பிஞ்சிலேயே பழுத்து வெம்பிப் போக வைத்து விடுகின்றன !

 

இரண்டடி நீளக் குச்சியின் முனையில் சுவைக்கும் கோந்தினை (SEWING GUM) பிணித்து வைத்துக் கோயில் உண்டியலில் நுழைத்து பணத்தாள்களை வெளியில் எடுக்கும் திருட்டுக் கலையைச் சொல்லித் தந்தது ஒரு திரைப்படம். அதைப் பார்த்து அப்படியே செய்து காவலர்களிடம் மாட்டிக் கொண்டு கம்பி எண்ணுகிறான் ஒரு கயவன் ! மாட்டிக் கொண்ட கயவனை மறந்துவிட்ட மக்கள் , சொல்லித் தந்த கயவனை மறவாமல் நினைவில் வைத்துக் கொண்டு , “ஆகா ! ஓகோஎன்று நாள்தோறும் கொண்டாடி மகிழும் முட்டாள்தனத்தை என்னவென்று சொல்வது ?

 

எப்படியெல்லாம் களவாணித்தனம் செய்வது என்பதைக் கற்றுக் கொடுக்கும் திரைப்படங்களுக்கு நம் நாட்டில் கட்டுப்பாடே கிடையாது. முத்தக் காட்சிகளைப் படத்தில் திணித்துப் பண்பாட்டுச் சீர்குலைவைப் பத்து அகவைச் சிறுவனுக்கும் கற்றுக் கொடுக்கும் பரமக்குடிப் பாண்டை மனிதர்கள் இப்போது அரசியலிலும் கால்பதித்துப் பகட்டுக் காட்ட முனைந்திருக்கிறார்கள் !

 

நான் உன்னை லவ் பண்றேன்” ” ஐ லவ் யூடா”, ” இந்த Figure எனக்கு work out ஆகுமாஎன்பன போன்ற கேவலமான சொற்கள் இடம்பெறாமல் எந்தத் திரைப்படமாவது வெளியாகிறதா ? “First Night” என்னும் சொல், உரையாடலில் இல்லாமல் நடிகர்கள் தோன்றும் காட்சி எந்தப் படத்திலாவது இருக்கிறதா ?

 

ஐந்து அகவை குழந்தை தன் தந்தையிடம் கேட்கிறது ,”அப்பா ! அந்த அங்கிள் First Night என்கிறாரே ! அப்படியென்றால் என்ன? “ இது தான் திரைப்படங்கள் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் நல்லொழுக்கப் பாடம். இத்தகைய படங்களை எடுக்கும் பன்றிக் கூட்டங்களையும் , காசுக்காக அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவற்றில் நடிக்கும் நடிகர் நடிகையரையும் விளக்குமாற்றால் விளாசும் காலம் தமிழ்நாட்டில் வரவே வராதா ?

 

திரைப்படத்துறை என்பது இன்று கொடியவர்களின் கூடாரமாக மாறிவிட்டது ! ஒழுக்கமுள்ள மனிதர்கள் மழைக்குக் கூட ஒதுங்க முடியாத கறுப்பு உலகமாகக் காட்சி அளிக்கிறது ! பணம் ! பணம் ! பணம் !என்று பேயாக அலைகின்ற பித்தர்களின் முதலீட்டுத் தொழிலகமாகச் செழித்து வளர்ந்து நிற்கிறது !

 

130 கோடி மக்கள் வாழ்கின்ற நம் நாட்டில் , அன்றாடம் உழைத்தால் தான் வயிறு நிரம்பும் என்ற நிலையில் 60 % மக்கள் இருக்கிறார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்க்கைத் தரம் படைத்த மக்கள் நிரம்பவும் இருக்கின்ற ஒரு நாட்டில் திரைப்படம் என்னும் பொழுதுபோக்குக் கேளிக்கைக் கூத்துகள் தேவைதானா ?

 

அரசியலின் அடிப்படை நோக்கம் என்னவென்பதை அறியாத தேநீர்க்கடை வணிகர்கள் எல்லாம் நமக்குப் பொருளாதாரம் கற்றுக் கொடுக்க முனைந்து முன்வருகிறார்கள். யார் யார் எந்தப் பதவிக்குத் தகுதி படைத்தவர்கள் என்னும் கோட்பாட்டை பளிச்சென்று பகர்ந்திடாத சட்டங்களும், அவற்றை ஏந்தி நிற்கும் சட்டப் புத்தகங்களும் கயவாளிகளையும், களவாணிகளையும் அரசியல் அரங்கினுள் இழுத்து வந்து நிறுத்தி வைத்திருக்கின்றன !

 

கொரோனாவின் கொடிய தாண்டவத்தால் எத்தனை அல்லற்பட்டாலும், எத்தனை உறவினர்களையும் நண்பர்களையும் இழந்திருந்தாலும், அறிவை அடகு வைத்துவிட்டு, மீன் சந்தைகளிலும், துணிக் கடைகளிலும், ஐந்து பைசா ஊன்சோறு (பிரியாணி) விற்பனைக் கடைகளிலும் முட்டி மோதி முண்டியடித்து முன்னே செல்ல முயலும் முட்டாள்கள் கூட்டம் இன்னும் குறைந்தபாடில்லை !

 

மக்களை நெறிப்படுத்தி, ஒழுங்கு தவறாமல் ஆட்சி செய்ய வேண்டிய அரசியல் ஆளிநர் அடிக்கும் கொட்டங்களுக்கு அளவே இல்லாமற் போய்விட்டது. பொழுது விடிந்தால், இன்று என்ன நல்ல திட்டத்தை மக்களுக்கு அறிவிக்கலாம் என்று சிந்திக்க வேண்டிய அறிஞர்கள்கூட்டம் இன்று எந்த மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்கலாம்என்று சிந்திக்கிறது ! ஆட்பிடிப்புஅரசியலை நடத்தி, தங்களை அழுக்கு மனிதர்களாகக் காட்சிப் படுத்திக் கொள்ள அஞ்சுவதில்லை !

 

நாட்டில் நடக்கும் இத்தகைய அவலங்களைப் பார்க்கக் கண்கள் கூசுகின்றன ! மக்களாட்சிக் கோட்பாடு சிதைக்கப்படுவதை நினைத்தால் வெறுப்புதான் விளைகிறது ! நல்லொழுக்கச் சிந்தையுள்ள எந்த மனிதனும் வெறுப்புஎன்னும் சகதியில் வீழ்ந்துவிடாமல் தாண்டிச் சென்று முன்னேற முடியவில்லை !

 

புதிய விடியல் நம்மை நாடி வருமா ? தீயன அழியுமா ? நல்லன நடக்குமா ? மனிதன் மனிதனாகமாறும் வரை இந்த வினாக்களுக்கு விடை கிடைக்கப் போவதில்லை !

 

---------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 08]

{24-07-2022}

--------------------------------------------------------------------------------