ஊரகப் பகுதியில் வாழும் உலகப்பன் வீட்டுப் பிள்ளை மருத்துவர் ஆகக் கூடாதா?
தமிழ்நாட்டில் இப்போது இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரிகள்
எண்ணிக்கை 23. தனியார் மருத்துவக் கல்லூரிகள் =20.
ஆக மொத்தம் = 43.
இன்றைய நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒப்பளிக்கப் பட்டுள்ள
மாணவர் பயிற்சி இடங்கள் = 3300. தனியார் மருத்துவக் கல்லூரிகளில்
ஒப்பளிக்கப்பட்ட பயிற்சி இடங்கள் = 2100. இதில் 1050 இடங்கள் அரசால் நிரப்பப்படும். எஞ்சிய 1050 இடங்கள் கல்லூரி ஆட்சியாளர்களால் (Management) நிரப்பப்படும் !
அரசுக் கல்லூரி + தனியார் கல்லூரிகளில் அரசால் நிரப்படவிருக்கும்
இடங்கள் = 3300 + 1050 = 4350. இதில் 15% இடங்களான 653 இடங்கள் ஒன்றிய அரசு நிரப்ப வேண்டியவை
(All India Quota). எனவே மாநில அரசு நிரப்ப வேண்டிய நிகர
இடங்கள் = 4350 – 653 = 3697 !
இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள்= 3697
X 7.5% = 277 .நேற்று ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர்
பேசும் போது, கடந்த ஆண்டு 7.5% இட ஒதுக்கீட்டின்படி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப்
பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 430 என்று கயிறு திரித்தார். 277 எப்படி 430 ஆயிற்று ? மேடை ஏறிவிட்டால் விருப்பம் போல் ஏதாவது அள்ளிவிட வேண்டியதா ?
“நீட்” தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிகளில்
சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 430 என்றே ஒரு வாதத்திற்காக வைத்துக் கொள்வோம். இவர்களுள் எத்தனை பேர்
ஊரகங்களை (கிராமங்களை) சேர்ந்தவர்கள் என்று சொல்லாமல் ஏன் மறைக்கிறார்கள் ?
ஏனென்றால் ஊரகத்தைச் சேர்ந்த மாணவர்கள் “நீட்” பயிற்சிக்குச் செல்ல முடிவதில்லை. ”நீட்” என்னும் தடையை அவர்கள் முன் ஏற்படுத்தி, அவர்கள் ஆசைகளை முளையிலேயே கருக்கிவிடுகிறார்கள்.
அரசுப்பள்ளி மாணவர்கள் 430 பேருக்கு
உண்மையிலேயே இடம் கிடைத்திருந்தால் அதில் திரு. எடப்பாடி பழனிச்சாமியோ அவரது
கூட்டணிக் கட்சியினரோ , பெருமைப் பட்டுக் கொள்வதற்கு
ஏதுமில்லை. ஏனென்றால் “அரசுப் பள்ளி” என்பதற்கான விளக்கத்தில் தான் சூட்சுமம் இருக்கிறது ! எப்படியா ?
தொடர்ந்து படியுங்கள் !
அரசுப்பள்ளிகள் என்னும் வகைப்பாட்டின் கீழ் எந்தெந்தப் பள்ளிகள்
வருகின்றன தெரியுமா ?
(01) சென்னை, வேலூர், கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் மாநகராட்சி
மற்றும் அரசு மேனிலைப் பள்ளிகள் (இவை எல்லாம் நகரப் பகுதிகள் என்பதை நினைவிற்
கொள்ளுங்கள்)
(02) செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், இராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, விருதுநகர், நாகர்கோயில் போன்ற நகராட்சிப் பகுதிகளில் இயங்கி வரும் நகராட்சி
மற்றும் அரசு மேனிலைப் பள்ளிகள்.( இவையும் நகரப் பகுதிகளே)
(03) பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில்
இயங்கி வரும் அரசு மேனிலைப் பள்ளிகள்.
(04) சென்னை உள்பட அனைத்து இடங்களிலும்
இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் ஒன்றிய அரசின் கட்டாயக் கல்விச் சட்டத்தின் படி
சேர்க்கப்பட்டுப் பயின்ற மாணவர்கள். (இவர்களும் அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற
வகைப்பாட்டின் கீழ் வருகின்றனர்)
வகை 1-ன் கீழ் வரும் மாநகராட்சிப் பகுதிகளில் ”நீட்” பயிற்சி மையம் இருக்குமாதலால் அங்கு
படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் “நீட்” பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளவர்கள்.
வகை 2-ன் கீழ் வரும் நகராட்சிப் பகுதிகளில் ”நீட்’ பயிற்சி மையம் இருக்கும் என்று
உறுதியாகச் சொல்ல முடியாது. எனவே இங்கு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் “நீட்” பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி
பெறும் வாய்ப்புகள் இருக்கக் கூடும்; அல்லது
இல்லாமலும் இருக்கலாம்.
வகை 3-ன் கீழ் வரும் பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் ”நீட்” பயிற்சி மையங்கள் இருக்காது. எனவே
இங்கு இயங்கிவரும் அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் “நீட்” பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி
பெறும் வாய்ப்பை முற்றிலும் இழந்துவிடுகிறார்கள்.
வகை 4- என்பதை இப்போது கணக்கில் கொள்ள வேண்டாம்.
இப்போது ஒரு கருத்தைச் சிந்தித்துப்
பாருங்கள். அரசுப் பள்ளியில் படித்த மானவர்களில் ஒரு பகுதியினர் “நீட்” பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி
பெறும் வாய்ப்பு உள்ளவர்கள். இன்னொரு பகுதியினர் அந்த வாய்ப்புக் கிடைக்காதவர்கள்
!
இவ்வாறு ” பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்புக்
கிடைக்காதவர்கள் யார் தெரியுமா ?
(01) ஊரகங்களில் (கிராமப் புறங்களில்) உள்ள வேளாண் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகள்.
(02) ஊரகங்களில் உள்ள சிறு, குறு வேளாண் நில
உடைமையாளர்கள் வீட்டுப் பிள்ளைகள்.
(03) ஊரகங்களில் உள்ள சலவைத் தொழிலாளி, முடி திருத்தும் தொழிலாளி, தச்சுத்
தொழிலாளி, மட்பாண்டத் தொழிலாளி வீட்டுப்
பிள்ளைகள்
(04) ஊரகங்களில் உள்ள பட்டியலின மக்கள் வீட்டுப் பிள்ளைகள்.
(05) ஊரகங்களில் வாழும் நெசவாளர் குடும்பத்துப் பிள்ளைகள்.
(06).மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் வீட்டுப் பிள்ளைகள்.
மேற்கண்ட ஆறு வகைகளில் வரும் பிள்ளைகள்
12 –ஆம் வகுப்புத் தேர்வில் 95% மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெற்றாலும், “நீட்” பயிற்சி இல்லாத காரணத்தால், அந்தத் தேர்வில் போதுமான மதிப்பெண்கள் பெறமுடியாமையால், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பை இழந்து விடுகின்றனர்.
“நீட்” தேர்வு ஆதரவாளர்கள் ஏன் இவர்களைப்
பற்றிச் சிந்திப்பதே இல்லை ?
ஊரகப் பகுதியில் வாழும் உலகப்பன் வீட்டுப் பிள்ளை மருத்துவர் ஆகக் கூடாதா? வேளாண் கூலித் தொழிலாளி வெள்ளைச்சாமி வீட்டுப் பிள்ளை மருத்துவர் ஆகக் கூடாதா? ஊரகத்தில் வாழும் சலவைத் தொழிலாளி சக்கரபாணியின் பிள்ளை, சலவைத் தொழிலைத் தான் செய்து வர வேண்டுமா? மண்ணெண்னெய் விளக்கில் படித்து 97% மதிப்பெண் வாங்கியுள்ள முடிதிருத்தும் தொழிலாளி முத்துவின் பிள்ளை மருத்துவக் கல்லூரியில் சேர ஆசைப்படக் கூடாதா?
திரைகடலையே நம்பி வாழும்
தேவனாம்பட்டினம், பூம்புகார், வேளாங்கன்னி, வேதாரணியம், கோடிக்கரை, முத்துப்பேட்டை , மீமிசல், கடலாடி, கன்னியாகுமரி போன்ற கடலோரப் பகுதி மீனவர்களின் பிள்ளைகள் “நீட்” தேர்வுக்குப் பயிற்சி பெற எங்கு
செல்வர்?
அங்கு பயிற்சி மையங்களா இருக்கின்றன?
அப்படியே இருந்தாலும் பயிற்சி மையத்தில் சேர
அவர்களிடம் இலட்சம் இலட்சமாக பணம் கொட்டியா கிடக்கிறது?
நகர்ப் புறங்களையே எடுத்துக் கொள்வோம்.
நகர்ப்பகுதியில் வாழும் பொறிச் சிவிகை வலவர்கள் (Auto Rikshaw Drivers) , போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், சுமை தூக்கிப் பிழைப்போர், நடைபாதையோரத்தில்
பூ விற்போர், ஆப்பக் கடை வைத்திருப்போர், குடிசை வாசிகள், மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்கள்,
மருத்துவமனைத் தூய்மைப் பணியாளர்கள், சிறு, குறு தொழிற்சாலைகளில் பணிபுரிவோர்,
கடற்கரையில் மாலை நேரங்களில் சுண்டல் விற்போர்
போன்றோர் வீட்டுப் பிள்ளைகளால் “நீட்” பயிற்சிக்குப் பணம் செலவழிக்க முடியுமா?
ஊரகங்களிலேயே முடங்கிப் போய்விட்ட பல்வகைப்பட்ட
மக்கள், பயிற்சி மையம் அருகில் இல்லமையால் “நீட்” பயிற்சி பெறும் வாய்ப்பு இல்லாதோர்,
வாய்ப்பு இருந்தும் பணவசதி இல்லாதோர், அன்றாடங் காய்ச்சிகள் தமிழகத்தில் கோடிக் கணக்கில் இருக்கிறார்கள்,
அவர்கள் வீட்டிலும் நன்கு படிக்கும் பிள்ளைகள்
இருக்கின்றனர், அவர்களுக்கும் மருத்துவராகும் கனவு
இருக்கத்தானே செய்யும் !
அவர்களுக்கும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தரவேண்டமா? இந்த அடித்தட்டு மக்களைப் பற்றிய பகுத்தறிவு துளிக் கூட இல்லாமல் ஆட்சியாளர்கள் இருக்கிறார்களே என்பதை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே !
ஊரக மக்களின் நிலை பற்றி, அவர்களின் இயலாமை பற்றி குளிரூட்டிய அறையில் வாழும் இந்தியத் தலைமை அமைச்சர் திரு.நரேந்திர மோடிக்கும் தெரியாது, ஒன்றிய அரசின் கல்வி அமைச்சருக்கும் தெரியாது, ஒன்றிய அரசின் நலத்துறை அமைச்சருக்கும் தெரியாது !
மேட்டுக் குடி
மக்களான பாரதிய சனதாக் கட்சியினருக்கும் தெரியாது, பதவிக்காக அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் பிற ஆளிநருக்கும்
தெரியாது ! ஏன் – உச்சநீதிமன்றத்தில் உயரமான இடத்தில்
அமர்ந்து கொண்டு “நீட்” தேவை தான் என்றும் தீர்ப்புச் சொல்லும் நீதிபதிகளுக்கும் தெரியாது !
ஊரக மக்களின் ஏழைப் பிள்ளைகளின்
மருத்துவக் கனவை “நீட்” கொண்டு வந்து சிதைக்கிறோமே என்ற உணர்வு இல்லாமல் வாழும் மேட்டுக்
குடியினருக்கு நாட்டை ஆள்வதற்கு என்ன தகுதி இருக்கிறது ?
”நீட்” தேவை என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கும் மேட்டுக்குடி மக்களே, இருட்டறையில் வாழும் குருட்டுப் பூனைகளே ! உங்கள் கண்களை அகலத்
திறந்து ஏழைகளின் கண்ணீர்த் துளிகளைப் பாருங்கள் !
மருத்துவக் கனவு சிதைந்து போனதால் உயிரையே துறந்து விட்ட
அனிதாக்களைப் பாருங்கள் !
அனைத்து மக்களுக்கும் சம நீதி
கிடைக்கச் செய்ய உங்களால் முடியாவிட்டால், உங்களுக்கு ஆட்சி
எதற்கு ? அதிகாரம் எதற்கு ?
--------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053: கடகம் (ஆடி)
08]
{24-07-2022}
---------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக