விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 31 மே, 2022

சிந்தனை செய் தமிழா (30) கண் புரையைப் பற்றி உனக்கு என்ன தெரியும் ?

கண்ணின் அமைப்பு பற்றி உங்களுக்குத்  தெரியுமா ?

-------------------------------------------------------------------------------------


கண்ணின் அமைப்பு பற்றி உங்களுக்குத் தெரியுமா ? தெரியும் என்றால் மகிழ்ச்சி ! தெரியாது என்றால் தவறில்லை ! தொடர்ந்து படியுங்கள் !

 

பந்து போன்ற கோள வடிவத்தில் கண் அமைந்துள்ளது.  இமைகளுக்கு இடையே வெளியில் தெரிவது கண்ணின் சிறு பகுதி தான்.  பெரும்பகுதி மண்டை ஓட்டு எலும்புக்குள் மறைந்திருக்கும். கண் கோளத்தின் முன் பகுதியில் விழி வெண்படலம் இருக்கிறது. வெண்படலத்தின் நடுவில் வட்ட வடிவில் கரும் படலம் உள்ளது.  இதைக் கருவிழி என்போம்; கண்மணி என்றும் சொல்வதுண்டு. இந்த வெண்படலம், கரும் படலம் இரண்டையும் பாதுகாக்கும் வகையில், அவற்றுக்கு முன்பாக ஒளி ஊடுருவும் கண்ணாடி போன்ற மெல்லிய, ஆனால் வலிமையான திரை அமைந்திருக்கிறது !

 

கருவிழியின் மையத்தில் சிறு துளை இருக்கும். இந்தத் துளை பகல் ஒளியில் சிறியதாகவும், அடர் இருளில் பெரியதாவும் அமையும் வகையில் கருவிழியானது சுருங்கி விரியும் தன்மைகொண்டது. கருவிழியின் மையத்தில் உள்ள துளைக்குப் பின்புறத்தில் வில்லை ஒன்று உள்ளது. இந்த வில்லை தட்டையாக இல்லாமல் இருபுறமும் குவிந்து காணப்படும். கண்ணாடி போல் ஒளியைத் தன்வழியே  ஊடுருவிச் செல்லவிடும் இதைக் குவி வில்லை (CONVEX LENS) என்போம் !

 

உங்களுக்கு முன் ஐந்தடி தொலைவில் மின் குமிழ் விளக்கு (ELECTRIC BULB) ஒன்று எரிந்துகொண்டு இருக்கிறது. அதிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் கருவிழியின் நடுவில் உள்ள துளை வழியாகச் சென்று குவி வில்லையில் (CONVEX LENS) பட்டு, அதை ஊடுருவிச் சென்று கண் கோளத்தின் உட்புறச் சுவர் மீது விழுகிறது. அச்செய்தி அங்குள்ள நரம்புகள் மூலம் மூளைக்குத் தெரிவிக்கப்படுகிறது. மூளை  அந்த ஒளிக்கதிர்களை ஆய்வு செய்து அவை மின் குமிழ் விளக்கிலிருந்து வருபவை என அடையாளம் காண்கிறது. எதிரிலிருப்பது எரியும் மின் விளக்கு என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறது. இச்செயல் அனைத்தும் ஒரு நொடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் நிகழ்ந்து விடுகிறது. !

 

கண்ணில் உள்ள குவி வில்லை இயல்பாகவே ஒளி ஊடுருவும் தன்மை உடையது. இந்த வில்லையில் (LENS) மாசு படிந்தால், ஒளி ஊடுருவும் தன்மை இழந்து, பார்வை படிப்படியாகக் குறைகிறது. இதுவே புரை (CATARACT) எனப்படும். மாசு படிவது என்பது கண்ணுக்கு வெளியிலிருந்து மாசு உள்ளே புகுவது என்று பொருளல்ல; கண்ணுக்கு உள்ளேயே நிகழும் செயல் !

 

தெளிவான கண் வில்லையானது ஒளிக் கதிர்களைக் கண் கோளத்தின் உட்புறத் திரையில் குவிக்கிறது. அதனால் சீரான கண் பார்வை கிடைக்கிறது. புரை (CATARACT) வளர வளர கண் வில்லையின் ஒளிபுகும் தன்மை குறைந்து ஒளி புகாத் தன்மை மிகுதிப்படுகிறது. அதனால் ஒளிக்கதிர்கள் கண் கோளத்தின் உட்புறச் சுவரைச் சென்றடைவதில் தடங்கல் ஏற்பட்டு, எதிரில் உள்ள உருவங்கள் மங்கலாகத் தெரியத் தொடங்கும் !

 

கண் புரை (CATARACT) என்பது ஒரு கட்டியோ, சதை வளர்ச்சியோ அல்ல; புரை (CATARACT) ஒரு தொற்று நோயும் அல்ல. வயதானால் வில்லையில் (LENS) ஏற்படும் மாற்றமே புரை !

 

கண் புரை (CATARACT) பல வகைப்படும். பெரும்பாலான புரைகள் கண் வில்லையில் ஏற்படும் வேதி மாற்றத்தால் (இரசாயன மாற்றம்) ஏற்படுகின்றன !

 

முதுமைப் புரை:- பொதுவாக 50 அகவைக்கு மேற்பட்டவர்களுக்கு இப்புரை (CATARACT) ஏற்பட வாய்ப்பு உண்டு.  புரைகளில் 80 % முதுமைப் புரை ஆகும் !

 

பிறவிப்புரை:- குழந்தைகளுக்கு அரிதாக இந்தப் புரை (CATARACT) நோய் ஏற்படுகிறது. இது சூலுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் நோயினாலோ அல்லது பரம்பரைத் தொடர்ச்சியாகவோ வரலாம் !

 

கண்ணில் அடிபடுவதால் ஏற்படும் புரை:- இந்தப் புரை (CATARACT) எந்த அகவையினருக்கும் ஏற்படலாம். பலமான அடி, ஊசி முனைக் காயம், வெட்டுக் காயம், தாங்கமுடியாத வெப்பத்தின் தாக்கம், வேதிப் பொருள் கண்ணில் படுதல் ஆகிய காரணங்களால் கண் வில்லை (LENS)  பாதிக்கப்பட்டு புரை உண்டாகலாம் !

 

பிற நோய்களால் ஏற்படும் புரை:- கண் கோளத்திற்குள் ஏற்படும் நீர் அழுத்த நோய், கண்ணின் கரும் படலத்தில் ஏற்படும் அழற்சி, நீரிழிவு நோய், கண்ணுக்குள் வளரும் கட்டி போன்ற காரணங்களால் புரை (CATARACT) உண்டாகலாம் !

 

மருந்துகளால் ஏற்படும் புரை:- நீண்ட நாள்கள் வலிமரப்பு (STEROIDS) சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதாலும், மாத்திரைகளாக உட்கொள்வதாலும் கண் புரை (CATARACT) ஏற்படும்.  குறிப்பாக இரைப்பிருமல் (ஆஸ்த்துமா) மற்றும் மாற்றுச் சிறுநீரகம் பொருத்திய நோயாளிகளுக்கும் இப்புரை வர வாய்ப்பு மிகுதி !

 

உங்களுக்கோ உங்கள் குடும்பத்தினருக்கோ கண்ணில் ஏதேனும் கோளாறு இருப்பதாகக் கருதினால், உடனடியாக அருகில் உள்ள கண்  மருத்துவரை அணுகுங்கள். ஒரு கண் மருத்துவரால் மட்டுமே உங்கள் பார்வையை சிறந்த முறையில் பாதுகாக்க முடியும். இது உங்கள் பார்வை ! அதைப் பேணிக் காப்பது உங்கள் கையில் உள்ளது !

 

-------------------------------------------------------------------------------------

 ஆதாரம்: மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனையின் கையேடு.

-------------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ’

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

--------------------------------------------------------------------------------------

சிந்தனை செய் தமிழா (29) மலிவு விலை மரணங்கள் !

நொறுக்குத் தீனிகளும்  நோய் விளைவிக்கும் காரணிகளும் !

 -----------------------------------------------------------------------------------

 

உணவுகளைச் சுவைப்பதில் தமிழர்களை விஞ்சும் குடிமக்கள் உலகத்தில் இல்லை எனலாம். நலம் தரும் உணவுகளால் வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர்களின் சிந்தனை இப்போது மேலை நாடுகளின் விரைவு உணவுகள் மீது திரும்பியுள்ளது. குறிப்பாக பீட்சா”, “பர்கர்மற்றும் பொதிகளில் அடைக்கப்பட்ட வறுத்த நொறுக்குத் தீனிகளின் மீது திரும்பத் தொடங்கியுள்ளது !

 

அளவுக்கு மிஞ்சினால் அமுதமே நஞ்சாகும் போது, இதுபோன்ற நொறுக்குத் தீனிகள் மட்டும் சும்மா இருக்குமா ? இரண்டாம் வகை சர்க்கரை (TYPE.2.DIABETES), இதய நாள அடைப்புகள் என்று பல சிக்கல்களை உருவாக்கி, உலக நாடுகளை அதிரச் செய்துள்ளது. நொறுக்குத் தீனிகள் மற்றும் வறுக்கப்பட்ட உணவுகளில் உள்ள டிரான்ஸ் பேட்என்னும் கெட்ட கொழுப்பு (L.D.L.CHOLESTEROL) ஆண்டுக்கு 5 இலட்சம் பேரை ஓசையில்லாமல் மரணத்தில் தள்ளிக்கொண்டிருப்பதாக உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகிறது !

 

அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகளும் இதுபோன்ற நொறுக்குத் தீனிகள், விரைவு உணவுகள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் பொதிகளில் அடைக்கப்பட்ட உணவுகளில், மேலட்டையில், “டிரான்ஸ் பேட் ஃப்ரீஎன்னும் சொற்களை அச்சிடுவதைக் கட்டாயமாக்கியுள்ளன !

 

ஒட்டுமொத்த மனிதர்களையும் அச்சுறுத்தும்  இந்த டிரான்ஸ் பேட்என்னும் கெட்ட கொழுப்பு எங்குதான் உள்ளது ? எந்த வடிவத்தில் உள்ளது ?

 

அரசு மருத்துவர் இராமராசு கூறுகிறார்: டிரான்ஸ் பேட் என்பது ஒருவகை கொழுப்பு. கொழுப்பில் இரண்டு வகை உள்ளன. கெட்ட கொழுப்பு ( L.D.L. CHOLESTEROL ) நல்ல கொழுப்பு (H.D.L CHOLESTEROL). இதில் நல்ல கொழுப்பு உடலுக்கு நன்மை செய்யக் கூடியது. கெட்ட கொழுப்பு தீமை செய்யக் கூடியது !

 

பொரிக்கப்பட்ட உணவுகள், நொறுக்குத் தீனிகள் ஆகியவற்றில் கெட்ட கொழுப்பு ஏராளமாக உள்ளது. வனஸ்பதி, பாமாயில் இரண்டிலும் இந்த கெட்ட கொழுப்பு அதிகம் உள்ளது. இறைச்சி, பால் ஆகியவற்றில் கெட்ட கொழுப்பு இருந்தாலும் இவற்றை நாம் அரிதாகவே உண்பதால் பாதிப்பு அதிகம் இராது. ஆனால் பாமாயில் எனப்படும் பசும்பனை எண்ணெய் மற்றும் வனஸ்பதி ஆகியவற்றில் இந்த கெட்ட கொழுப்பு மிக மிக அதிகம். இவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவுகளை ஒதுக்க வேண்டியது இன்றியமையாதது” !

 

சாலை ஓரங்களில் உள்ள உணவகங்களில் விலை மலிவு என்பதால்  பாமாயில் பயன்படுத்துகின்றனர். பாமாயில் கொண்டு வறுக்கப்படும் உணவுகள், பொரித்து எடுக்கப்படும் வடை, பச்சி, போண்டா போன்ற பலகாரங்களில் கெட்ட கொழுப்பு அளவுக்கு விஞ்சி இருக்கிறது. இந்த பலகாரங்களின் மணம் தூக்கலாக இருப்பதால், பாமாயில் பயன்படுத்தப் பட்டதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது” ! 

 

விரைவு உணவுகளில் சுவைக்காக வனஸ்பதியைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய உணவகங்களின் எண்ணிக்கையும் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன” !

 

குழந்தைகளுக்கு நாம் வாங்கித் தரும் லேஸ்”, “குர் குரே  போன்ற பொதிகளில் உள்ள நொறுக்குத் தீனிகளில் கெட்ட கொழுப்பு மிகுதி. இவற்றை வாங்கிச் சாப்பிடும் குழந்தைகள் விரைவில் குண்டாகிவிடுகின்றனர். ஒபேஸிட்டிஎனப்படும் உடல் பருமன், குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுவதற்கு இவ்வகை நொறுக்குத் தீனிகளே காரணம்” !

 

இவ்வாறு உடலில் ஓசையின்றி மிகுதியாகிவரும் கெட்ட கொழுப்பு, குருதி நாளங்களில் மெல்ல மெல்லப் படியத் தொடங்குகிறது. குறிப்பாக இதயத்திற்குச் செல்லும் குருதி நாளங்களில் படியும் கொழுப்பு, தடையற்ற குருதியோட்டத்தில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. மெல்லிய நெஞ்சு வலியில் தொடங்கி கதுமென (திடீரென) மாரடைப்பு வரை ஏற்படுத்தி விடுகிறது” !

 

தகவல் தொழில் நுட்பம் மற்றும் சேவைத் துறையில் உள்ள இளைஞர்களில் ஒரு பெரிய பகுதியினர் இதுபோன்ற கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு அடிமையாகி உள்ளனர் என்பது ஒரு ஆய்வில் தெரியவருகிறது. இவர்கள் 35 முதல் 40 வயதுக்குள் இதய நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்” !

 

சரி, இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. இதற்கான விடையை மிக எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் வீட்டில் பாமாயிலோ, வனஸ்பதியோ பயன் படுத்தாதீர்கள். தெருவோர உணவகங்களில் வறுத்த பண்டங்களையும், பொரித்த உணவுகளையும் வாங்கி உண்ணாதீர்கள் ஏன் எந்த உணவகத்திலும் வாங்கி உண்ணாதீர்கள். வீட்டில் தயாரித்து உண்ணுங்கள் !

 

வண்ண வண்ணப் பொதிகளில் அடைக்கப்பட்டு தெருவோரக் கடைகளில் தொங்கவிடப் பட்டிருக்கும் எதையும் உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கித் தராதீர்கள். பிள்ளைகள் விரும்புவதை வீட்டில் தயாரித்துக் கொடுப்பதை விட உங்களுக்கு வேறு என்ன தான் தவிர்க்க முடியாத வேலை ?

 

அது சரி ! மலிவு விலை மரணங்கள் என்று ஏன் பயமுறுத்துகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம் ? உண்மை தான் ! ஒரு வடை 5 ரூபாய், சாலையோரக் கடைகளில் வனஸ்பதி பயன்படுத்தப் பட்ட பிரியாணி 40 முதல் 50 ரூபாய், நீங்கள் விரும்பிச் சாப்பிடும் பீட்சா” 40 ரூபாயிலிருந்தும், “பர்கர்” 60 ரூபாயில் இருந்தும் கிடைக்கிறது.  இவ்வளவு குறைந்த விலையில் கிடைக்கும் கெட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு, உடலுக்குக் கேடு ஏற்படுத்திக் கொள்ளும் போது, வேறு எப்படித் தலைப்பு இடமுடியும் ?

 

------------------------------------------------------------------------------------

 [ நன்றி: திரு.அ.மகேந்திரன், கட்டுரையாளர், தினமலர்,

நாள் 06-01-2019 ]

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 17]

{31-05-2022}

-----------------------------------------------------------------------------------

திங்கள், 30 மே, 2022

சிந்தனை செய் தமிழா (28) ஈதென்ன நீண்ட பட்டியல் ?

இதோ  நாட்டுக்காக  உழைக்கும் நல்லவர்கள் !  ஆம் !  இவர்களை   நம்புங்கள் !

 --------------------------------------------------------------------------------------

இஃது என்ன பெரிய பட்டியல் ! வேறொன்றுமில்லை, நமக்காக உழைக்க, கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ள அரசியல் கட்சிகள் ! (டிசம்பர் 2018 நிலவரப் படி). வாழ்க இந்திய ஜனநாயகம் ! வளர்க வீதி தோறும் கொடிக்கம்பங்களின் எண்ணிக்கை !!

 

----------------------------------------------------------------------------------------

1.      அகில இந்திய  இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம்

2.      அகில இந்திய ஏழை மக்கள் முன்னேற்றக் கழகம்

3.      அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

4.      அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி

5.      அகில இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம்

6.      அகில இந்திய முன்னேற்றக் கட்சி (சுபாஷ் பிரிவு)

7.      அகில இந்திய முஸ்லிம் லீக் (2002)

8.      அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம்

9.      அகில இந்திய வேலையில்லாத இளைஞர்கள் கட்சி

10.     அம்பேத்கார் மக்கள் இயக்கம்

11.     அம்பேத்கார் மக்கள் கட்சி

12.     அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்

13.     இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி

14.     இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

15.     இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிஸ்ட்) கட்சி

16.     இந்திய தேசிய காங்கிரஸ்

17.     இந்திய ஜனநாயகக் கட்சி

18.     இந்தியக் கிறித்தவர்கள் முன்னணி

19.     இந்து மக்கள் கட்சி

20.     உழவர் உழைப்பாளர் கட்சி

21.     எதிர்கால இந்தியர்கள் கட்சி

22.     எம்.ஜி.ஆர். கழகம்.

23.     காமராஜர் ஆதித்தனார் கழகம்

24.     காமராஜர் தேசியக் காங்கிரஸ்

25.     கொங்கு இளைஞர் முன்னணி

26.     கொங்கு தேச மக்கள் கட்சி

27.     கொங்கு நாடு மக்கள் கட்சி

28.     கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி

29.     கொங்கு நாடு முன்னேற்றக் கழகம்

30.     தந்தை பெரியார் திராவிடர் கழகம்

31.     தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்

32.     தமிழக முன்னேற்றக் கழகம்

33.     தமிழக வாழ்வுரிமைக் கட்சி

34.     தமிழக ஜனதாக் கட்சி

35.     தமிழகத் திராவிட மக்கள் கட்சி

36.     தமிழர் பூமி

37.     தமிழ் தேசியக் கட்சி

38.     தமிழ் மாநிலக் காங்கிரஸ்

39.     தமிழ் மாநிலக் காமராஜ் காங்கிரஸ்

40.     தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி

41.     தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி

42.     தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

43.     தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி

44.     தமிழ்நாடு மக்கள் கங்கிரஸ்

45.     தமிழ்நாடு மக்கள் கட்சி

46.     தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

47.     தமிழ்நாடு முஸ்லிம் லீக்

48.     தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி

49.     தலித் மக்கள் முன்னேற்றக் கழகம்

50.     திராவிட முன்னேற்றக் கழகம்

51.     திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம்

52.     திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம்

53.     திராவிடர் கழகம்

54.     திராவிடர் விடுதலைக் கழகம்

55.     தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம்

56.     தேசிய முன்னேற்றக் கட்சி

57.     நாம் தமிழர் கட்சி

58.     பாட்டாளி மக்கள் கட்சி

59.     பாரதிய ஜனதாக் கட்சி

60.     புதிய தமிழகம்

61.     புதிய நீதிக் கட்சி

62.     பெருந்தலைவர் மக்கள் கட்சி

63.     மக்கள் சக்தி

64.     மக்கள் தமிழ் தேசம் கட்சி

65.     மக்கள் தேசிய முற்போக்குத் திராவிடர் கழகம்

66.     மக்கள் நல முன்னணி

67.     மக்கள் நலக் கூட்டணி

68.     மக்கள் நீதி மையம்

69.     மக்கள் மாநாடு கட்சி

70.     மக்கள் விழிப்புணர்வு இயக்கம்

71.     மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம்

72.     மனித நேய மக்கள் கட்சி

73.     மனித நேய ஜனநாயக கட்சி

74.     மார்க்சீய பெரியாரிய கம்யூனிஸ்ட் கட்சி

75.     மூவேந்தர் முன்னேற்றக் கழகம்

76.     விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

77.     விவசாயி அன்புக் கட்சி

78.     ஜனநாயக முன்னேற்றக் கட்சி

 

இவையன்றி கீழ்க்கண்ட கட்சிகளும் தமிழகத்தில் இயங்குகின்றன !

 

01.     திரிணாமுல் காங்கிரஸ்

02.     சிவசேனைக் கட்சி

03.     மதச் சார்பற்ற ஜனதா தளம்

04.     தேசியவாத காங்கிரஸ்

05.     ராஷ்ட்ரீய ஜனதா தளம்

 

தமிழனை முன்னேற்றுவதில் இவர்களுக்கு உள்ள ஆர்வத்தை எண்ணுகையில் கண்களில் இன்பக் கண்ணீர் துளிர்க்கிறது !

 

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

---------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 29 மே, 2022

சிந்தனை செய் தமிழா (27) நான் அரசியல் பாடம் படித்த பள்ளிக்கூடங்கள் !

திருத்துறைப்பூண்டி தெற்கு வீதி எனக்கு அரசியல் அறிவை வாரி வழங்கும் பள்ளியாக அப்போது திகழ்ந்தது !

 -------------------------------------------------------------------------------------

 

நண்பர்களே ! தமிழ்ப் பணி மன்றத்திற்கெனச் சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு அதன்படி அனைவரும் செயல்பட்டு வருகிறோம். இந்த விதிமுறைகள் அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்காக அறிவிப்புப் (ANNOUNCEMENT) பகுதியில், நிலைப்புச் செய்யப்பட்டுள்ளது!

 

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மன்றத்தின் விதிமுறைகளை 9-04-2019 முதல்  31-05-2019 வரை நிறுத்தி வைத்து ஆட்சியர் என்ற முறையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.  நண்பர்கள் தங்கள் அரசியல் கருத்துகளை, எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி, ஆனால் கண்ணியத்தோடு, மன்றத்தில் பதிவிடலாம் என்றும் அதில் தெரிவித்திருந்தேன். தமிழ்ப் பணி மன்றத்திற்குரிய பக்கத்தில் அறிவிப்புப் (ANNOUNCEMENTS) பகுதியில் அதை இப்போதும் கூடக் காணலாம் !

 

இந்த வகையில் நான் என் கருத்துகளைச் சில  கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டிருந்தேன். என் கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தமிழ், தமிழர் நலன், தமிழக நலன் சார்ந்தே வடிவமைக்கப்பட்டிருந்தன. விதிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்ணுறாத சில நண்பர்கள், சில வினாக்களை எழுப்பி இருக்கின்றனர். விதிகள் நிறுத்தி வைக்கப்பட்டதை அவர்கள் அறிந்திருந்தால், இந்த நண்பர்களுக்கு எத்தகைய  ஐயமும் வந்திருக்காது என்று எண்ணுகிறேன் !

 

என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்வது சிறப்பாகாது என்பதால், என்னை நான் அதிகமாக வெளிப்படுத்திக் கொள்ள வில்லை. தேவை எழும்போது அதை வெளிப்படுத்துவதால் தவறும் இல்லை எனக் கருதுகிறேன்!

 

தமிழ் சார்ந்த பின்புலம் இல்லாத குடும்பத்தில் தான் பிறந்தேன். எனினும், பள்ளியில் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் பயிற்றுவிப்பு முறையால், தமிழுணர்வு என்னைப் பற்றிக் கொண்டது. 1958 ஆம் ஆண்டு, எனது 14 ஆம் அகவையில் திருமறைக்காடு என்னும் வேதாரணியத்தில் திரு. சி.என்.அண்ணாதுரை அவர்களின் சொற்பொழிவை நேரில் கேட்டதிலிருந்து, தமிழ் வேட்கை என்னுள் கிளர்ந்து எழுந்தது !

 

பிறந்த ஊரான கடிநெல்வயலை விடுத்து, 1959 ஆம் ஆண்டு திருத்துறைப் பூண்டிக்கு இடம் பெயர்ந்த காலத்திலிருந்து தமிழகம் மற்றும் இந்திய அரசியலை உற்று நோக்கி உள்வாங்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. திருத்துறைப்பூண்டி தெற்கு வீதி எனக்கு அரசியல் அறிவை வாரி வழங்கும் பள்ளியாக அப்போது திகழ்ந்தது !

 

தந்தை பெரியார், மு.கருணாநிதி, பி.இராமமூர்த்தி, கு.காமராஜர், முகமது இஸ்மாயில், ம.பொ.சிவஞானம், சி.பா.ஆதித்தனார், சி.பி.சிற்றரசு, என்.வி.நடராஜன், ஈ.வெ.கி.சம்பத், எம்.கல்யாணசுந்தரம், புலவர் அறிவுடைநம்பி ,சி.அ.வரதராஜன்,  போன்ற அரசியல் தலைவர்களின் சொற்பொழிவை நேரில் கேட்டு என் அரசியல் அறிவை விரிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பை இங்குதான் பெற்றேன்!

 

பின்பு அரசுப் பணியின் நிமித்தம் தஞ்சை மாவாட்டம் பாபநாசத்தில் தங்கிய நேரத்தில், மீண்டும் தந்தை பெரியார், நடிகவேள் எம்.ஆர்.இராதா, எஸ்.எஸ்.இராஜேந்திரன், நாவலர் நெடுஞ்செழியன், காமராஜர், பக்தவத்சலம், இந்திரா காந்தி, போன்ற தலைவர்களின் உரையை நேரில் கேட்டு, வியந்து போயிருக்கிறேன் !

 

இதையடுத்து, புதுக்கோட்டையில் நான் பணியாற்றுகையில் என் தமிழறிவும், அரசியல் அறிவும் ஒருங்கே விரிவடைந்தன. திருவள்ளுவர் ஈராயிரத்தாண்டு விழா 1969 ஆம் ஆண்டு மூன்று நாள் நடைபெற்றது.. புலவர் அன்பு கணபதி, புலவர் தி.சு.மலையப்பன், புலவர்.ந.கந்தசாமி ஆகியோருடன் நானும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தோம் !

 

மூன்று நாள் நடந்த இவ்விழாவில், அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், இராய.  சொக்கலிங்கனார், பேராசிரியர்கள் சோ. சத்தியசீலன், அ.வ.இராஜ கோபாலன், க.நமச்சிவாயம், அ.சீனிவாச ராகவன் போன்றோர் பங்கேற்றனர் !

 

திருச்சி, செல்வேந்திரன், பி.இராமமூர்த்தி, ஈரோடு சின்னச்சாமி, கோ.பெ.வையகம், எழும்பூர் இளம்பரிதி, நெல்லை. ஆ.திராவிடமணி. திருச்செங்கோடு செ.கந்தப்பன், ஆர்.வெங்கட்ராமன், எஸ். எஸ். தென்னரசு, எம்.எஸ்.சிவசாமி, குத்தூசி குருசாமி, நெ. து. சுந்தரவடிவேலு, மதுரை முத்து, கருத்திருமன், எம்.கே. சுப்பிரமணியம்  மற்றும் பலரது சொற் பொழிவுகளைக் கேட்கின்ற வாய்ப்பு இங்குதான் எனக்குக் கிடைத்தது !

 

ஏறத்தாழ 60 ஆண்டுகளாக அரசியல் நிகழ்வுகளை உள்வாங்கி வளர்ந்து வந்திருந்தாலும் எந்தக் கட்சியினுடனும் என்னை இணைத்துக் கொண்டதில்லை. எனது உள்ளமும் உணர்வும் தமிழில் திளைத்தது. அதில் எந்த அரசியல் கட்சிக்கும் இடமில்லை. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு என்னும் வள்ளுவரின் கோட்பாடு தான் எனக்கு வழிகாட்டி !

 

தமிழ், தமிழர் நலன், தமிழக நலன் என்று வரும்போது, சில கட்சிகளின் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன். சில கட்சிகளுடன் முரண்படுகிறேன். இன்று தமிழகத்தில் இயங்கும் எந்தக் கட்சிக்கும் நற்சான்றளிக்க என்னால் இயலாது. எனது நற்சான்றும் அவர்களுக்குத் தேவையில்லை !

 

தமிழகம் மதுவால் சீரழிகிறது; ஒற்றுமை இன்மையால் சீரழிகிறது; பேராசை பிடித்த அரசியல்வாதிகளால் சீரழிகிறது; மக்கள் நலன் கருதாத மணற் கொள்ளையர்களால் சீரழிகிறது;  அரசியல் கோமாளிகளுக்குத் துணைபோகும் அதிகாரிகளால் சீரழிகிறது !


திரையுலகப் பித்துப் பிடித்த இளைஞர்களால் சீரழிகிறது; கடவுள் பெயரால் கலவரம் செய்யும் கயவர்களால் சீரழிகிறது; மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் பேதைகளால் சீரழிகிறது; தொலைகாட்சித் தொடர்களில் மூழ்கிக் கிடக்கும் மகளிரால் சீரழிகிறது; இரட்டை நிலை எடுக்கும் அரசியல் கட்சிகளின் கயமைத் தனத்தால் சீரழிகிறது !

 

இத்தகைய சீரழிவுகளுக்கு இடையே, உங்களைக் காப்பாற்ற வந்திருக்கும் தேவதூதன் என்று பறைசாற்றிக் கொள்ளும் விஜயகாந்த், சரத்குமார், சீமான், கமலகாசன் போன்றோரின் திருவாய்மொழி ஒருசிலரைக் கவர்ந்து இழுக்கலாம். ஆனால் எனது அரசியல் பட்டறிவு அவர்களது உள்நோக்கத்தை உணர்த்துவதால், இளைஞர்களே ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறேன் ! ஏமாறுவது எனது பிறப்புரிமை என்று வாதிட முனைந்தால், அது உங்கள் விருப்பம் என்று விட்டுவிடவே விரும்புகிறேன் !

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 15]

{29-05-2022}

-------------------------------------------------------------------------------------