விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 13 அக்டோபர், 2023

சிந்தனை செய் தமிழா (88) அறியாப்பிழைகள் !

 

நமது அன்றாட வாழ்வில் நாம் பேசுகையிலும் எழுதுகையிலும் நம்மை அறியாமலேயே சில பிழைகள் நேர்ந்துவிடுகின்றன ! யாராவது விளக்கினால் தவிர அவை பிழையான சொற்கள் என்பது நமக்குத் தெரியாமலேயே போய்விடுகிறது !

 

சாலையில் இடது புறமாகச் செல்ல வேண்டும் என்று சொல்கிறோம். இந்தச் சொற்றொடரில் என்ன பிழை இருக்கிறது ? யாராவது சொல்ல முடியுமா ? சொல்லமுடியாது; ஆனாலும் அதில் பிழை இருக்கிறது ! என்ன பிழை ?


இடம் + புறம் = இடப்புறம்; இடம் + கை = இடக்கை; இடம் + கண் = இடக்கண். இடம்என்றால் ஆங்கிலத்தில் LEFT ! ”இடம்என்பது தான் சரியான சொல்லே தவிர இடதுஎன்பது பிழையான வடிவம். அதுபோன்றே வலம்என்பது தான் சரியான சொல்; “வலதுஎன்பது பிழையான வடிவம் !

 

ஆனாலும், “இடதுவலதுஎன்னும் சொற்கள் நம்மோடு ஒன்றிவிட்டன ! இடது புறம்”, “இடது கை”, “இடது கண்” ”வலது சாரி”, ”வலது புறம்”, “வலது கம்யூனிசிட்என்பன போன்ற சொற்கள் நம்மை விட்டுவிடுமா என்ன ?


எனக்கு ரொம்ப நாளாக ஒரு ஆசைஎன்று சொல்லக் கேட்கிறோம். தமிழில் எந்தச் சொல்லும் கரத்தில் தொடங்காது ! அப்படி இருக்கையில் ரொம்பஎப்படி நம் நாவில் இடம் பிடித்து விட்டது ? “நிரம்பஎன்னும் சொல் தான் ரொம்பஎன்று பிழையாக உச்சரிக்கப்படுகிறது ! ரொம்பஎன்னும் பிழையான வடிவத்திற்கு விடை கொடுத்து அனுப்புதல் தானே சரி !\\

 

அவைகள் எப்படிக் கெட்டுப் போயின ?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் பேச்சில் உள்ள பிழையை அவர் அறியவில்லை ! இதைப் படிக்கும் பலருக்கும் பிழை தெரியாமல் இருக்கலாம் ! ஒற்றைப் பொருளைக் குறிக்கும் போது அதுஎன்கிறோம். பல பொருள்களைக் குறிக்கும் போது அவைஎன்கிறோம். அவைஎன்பதே பன்மை; அப்புறம் அவைகள்என்பது ? பன்மைக்குப் பன்மையா ?

 

அதுகள்என்பதும் தவறு; “அவைகள்என்பதும் தவறு ! அது”, “அவைஎன்னும் சொற்களுடன் 2-ஆம் வேற்றுமை உருபான சேரும்போது அதை”, “அவற்றைஎன்று தான் வடிவம் பெறும் ! அது + ஐ = அதை; அவை + ஐ = அவற்றை ! அவைகள்”, “அவைகளை”, “அவைகளுக்கு”, ”அவைகளில்”, என்பன போன்ற பிழையான வடிவங்களை இனிப் புறந்தள்ளுவோம் !

 

நாம் பேசுகின்ற சொற்கள் பலவகைப்படும். இலக்கணத்தில் அவற்றைப் பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல், பெயரெச்சம், வினையெச்சம், வினையாலணையும் பெயர் என்றெல்லாம் வகைப்படுத்திச் சொல்வார்கள் ! அவற்றுள் தொழிற் பெயர்என்பதும் ஒன்று ! தொழில், வினை இரண்டுக்கும் பொருள் ஒன்றே தான் ! படித்தான்என்னும் சொல்லைப் பகுத்தால், படி + த் + த் + ஆன் என்று அமையும். இவற்றுள் படிஎன்பது பகுதிஎனச் சொல்லப்படும் !

 

படிஎன்னும் பகுதியிலிருந்து தோன்றுவது படிப்புஎன்னும் தொழிற் பெயர்” ! “காண்என்னும் பகுதியிலிருந்து தோன்றுவது காட்சிஎன்னும் தொழிற் பெயர்” ! “வற்றுஎன்னும் பகுதியிலிருந்து தோன்றுவது வற்றல்என்னும் தொழிற் பெயர்” !

 

சுண்டுஎன்னும் பகுதியிலிருந்து தோன்றுவது சுண்டல்என்னும் தொழிற் பெயர் !” “மறஎன்னும் பகுதியிலிருந்து தோன்றுவது மறதிஎன்னும் தொழிற் பெயர்” ! ”படிப்பு”, “காட்சி”, “வற்றல்”, “சுண்டல்”, ”மறதிஎன்னும் தொழிற் பெயர்களைப் போல முயல்என்னும் பகுதியிலிருந்து தோன்றுவது முயற்சிஎன்னும் தொழிற் பெயர்” !

 

படித்தான்”, “படிக்கிறான்”, “படிப்பான்”, “படித்து”, “படித்த”, ”படிப்பு”, போன்ற எந்தச் சொல்லானாலும் படிஎன்னும் பகுதியில் இருந்துதான் உருவாகிறது ! படிஎன்னும் பகுதி தான் இந்தச் சொற்களின் வேர் ! இந்த வேரிலிருந்து தான் புதிய சொற்கள் உருவாகும். வேர் இன்றி எந்தச் சொல்லும் உருவாகாது ! படிப்புஎன்பது வேர்அன்று ! வேரிலிருந்து உருவான ஒரு கிளைச்சொல்” !


வேர்ச் சொல்அல்லாத படிப்புஎன்னும் கிளைச்சொல்லிலிருந்து புதிய சொற்கள் உருவாகாது ! யாராவது உருவாக்கினாலும் அதற்குப் பொருள் இருக்காது !

 

(“படிப்புஎன்னும் தொழிற் பெயர்ச் சொல்லிலிருந்து படிப்புத்தான், படிப்புக்கிறான், படிப்புப்பான், படிப்புத்து, படிப்புத்த என்று சொல் உருவாக்கினால் அவற்றுக்குப் பொருள் ஏது ? பொருளற்ற குருட்டுச் சொற்களன்றோ இவை ? இவ்விளக்கமே பிற தொழிற் பெயர்ச் சொற்களுக்கும் பொருந்தும் )


படிப்புஎன்பதைப் போன்ற பிற தொழிற் பெயர்ச் சொற்களான வற்றல்”, “சுண்டல்”, ”காட்சி”, “படைப்பு”, “நீச்சல்”, “இருமல்”, “துவையல்”, “உறக்கம்”, “பொரியல்”, “ஓட்டம்”, “ஆடல்”, “வாட்டம்”, ”கொலை,” ”பார்வை”,” “மறதி”, “உணர்ச்சி”, போன்ற எந்தவொரு சொல்லில் இருந்தும் புதிய சொல்லை உருவாக்க முடியாது ! யாராவது உருவாக்கினாலும் அதற்குப் பொருள் இருக்காது !

 

அதுபோன்றே, “முயல்என்னும் வேரிலிருந்து முயன்றான்”, “முயல்கிறான்”, “முயல்வான்”, “முயன்று”, “முயன்ற”, ”முயற்சி”, எனப் பல சொற்கள் தோன்றும். ஆனால், “முயற்சிஎன்னும் வேர்அல்லாத ஒரு கிளையிலிருந்து எந்தச் சொற்களையும் உருவாக்க முடியாது ! உருவாக்கினாலும் அவை பிழையானவையே ! முயற்சித்தான்”, ”முயற்சிக்கிறான்”, ”முயற்சிப்பான்”, ”முயற்சித்து”, “முயற்சித்தபோன்ற எந்தச் சொல்லும் பிழையானவையே ! ஆனால் இவை பார்வைக்குப் பிழையில்லாச் சொற்களாகத் தோன்றுவதே மதி மயக்கத்திற்கு இடம் தந்துவிட்டது !

 

முயற்சிஎன்னும் தொழிற் பெயரிலிருந்து முயற்சித்தான்”, ”முயற்சிக்கிறான்”, ”முயற்சிப்பான்”, ”முயற்சிக்கிறேன்”, “முயற்சிப்போம்என்பன போன்ற பிழையான சொற்களை உருவாக்கிப் பயன்படுத்துவது தவறாகாது என்றால், ”சுண்டல்என்னும் தொழிற் பெயரிலிருந்து சுண்டலித்தான்”, ”சுண்டலிக்கிறான்”, ”சுண்டலிப்பான்”, “சுண்டலிக்கிறேன்”, “சுண்டலிப்போம்”, போன்ற பொருளற்ற சொற்களும் உருவாகும் ! மறதிஎன்னும் தொழிற் பெயர்ச் சொல்லிலிருந்து மறதித்தான்”, ”மறதிக்கிறான்”, “மறதிப்பான்”, “மறதித்து”, “மறதித்த”, போன்ற பொருளற்ற சொற்களும் உருவாகும் !

 

இப்படித்தான், “மரணித்தாள்என்று எழுதுகிறார்கள். இச்சொல்லைப் பகுதி, விகுதி, இடைநிலை என்று யாராவது பகுத்துக் காண்பிக்க முடியுமா ? முடியாது ! ஏனென்றால் மரணம்என்பதே தமிழ்ச் சொல் அன்று ! இறப்புஎன்பதே இதன் சரியான வடிவம். இறந்தாள் என்பதை இற + (ந்)த் + த் + ஆள் என்று பகுக்கலாம்; ஏனெனில் இதுதமிழ் சொல் ! வாதத்திற்காக, மரணித்தாள் என்பதை மரணி + த் + த் + ஆள் என்று பகுத்துக் காட்டலாம்; ஆனால் மரணிஎன்று எந்தச் சொல்லும் தமிழில் இல்லை ! மர்என்னும் வடசொல்லின் திரிபு வடிவே மரணம்” !

 

ஒரு மாணவன் சுவற்றில் பல்லி ஓடுகிறது என்று எழுதியிருந்தான். இதில் என்ன தவறு ? சரியாகத் தானே தோன்றுகிறது ! இல்லை ! தவறு தான் ! எப்படி ? சுவர் + இல் = சுவரில் என்பது தானே சரியாகும் ! எப்படியா ? சுவரில் என்பதை வேறு வகையாகப் பகுத்துப் பார்ப்போம் ! சுவ + ர் + இல் ! முதலாவதாக ர் + இல்என்பதைச் சேர்த்தால் என்னவாகும் ? “ர் + இல் = ரில்சரிதானே ! அடுத்து, “ரில்என்பதுடன் சுவஎன்பதைச் சேருங்கள். சுவ + ரில் = சுவரில் ! இதிலிருந்து என்ன தெரிகிறது ? “சுவரில்என்பதே சரி ! சுவற்றில்என்பது பிழை !

 

(தேவர் + இல் = தேவரில்; மூவர் + இல் =மூவரில்; தாயர் + இல் = தாயரில்: மலர் + இல் =மலரில்; துயர் + இல் = துயரில்; சிலர் + இல் = சிலரில்; சுவர் + இல் = சுவரில்)

 

இனிமேல், வாடகைக்கு வீடு விடும்போது சுவரில் ஆணி அடிக்கக் கூடாதுஎன்று சொல்லுங்கள் ! சுவற்றில் ஆணி அடிக்கக் கூடாதுஎன்று பிழையாகச் சொல்ல மாட்டீர்களே ?

 

----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம்+இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ச்சுரங்கம் வலைப்பூ.

[திருவள்ளுவராண்டு, 2054, கன்னி (புரட்டாசி),26]

{12-10-2024}

---------------------------------------------------------------------------------------------------

 

திங்கள், 9 அக்டோபர், 2023

சிந்தனை செய் தமிழா (87) தமிழ் நாட்டில் தமிழில் பெயர் வைப்பதில்லை - ஏன் ?

 

தமிழ் இலக்கியங்கள் பொதுவாக ”சங்க கால இலக்கியங்கள்” என்றும் “சங்கம் மருவிய கால இலக்கியங்கள்” என்றும் வகைப் படுத்தப்படுகின்றன !

 

சங்க காலம் என்பது கி.மு 5 ஆம் நூற்றாண்டு தொடங்கி கி,பி 2 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்கும் காலம். சங்கம் மருவிய காலம் என்பது கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டு கி.பி 7 ஆம் நூற்றாண்டு வரை விரிந்து நிற்பவை !

 

எட்டுத் தொகை நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை சங்ககால நூல்களாகக் கருதப்படுபவை ! இவை கி.மு 500 தொடங்கி கி,பி 200 வரையுள்ள காலத்தைச் சேர்ந்தவை என அறிஞர்களால் கணிக்கப்பட்டுள்ளன !

 

கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே ஆரியர்களின் வருகை தமிழ்நாட்டுக்குள் நிகழ்ந்திருக்கிறது என வரலாற்று அறிஞர்கள் கணிக்கின்றனர். சங்க கால இலக்கியங்களில் உள்ள பாடல்களில் ஒரு சில ஆரியர் வருகையையொட்டி இயற்றப்பட்டிருக்கலாம். அதனால் தான் அதன் தாக்கம் புறநானூறு, பரிபாடல், பதிற்றுப்பத்து மற்றும் கலித்தொகைப் பாடல் வரிகளில் எதிரொலிக்கிறது !

 

ஒரு சில பாடல் வரிகளைக் காண்போம் !

---------------------------------------------------------------

(01) ஆலமர் கடவுள் அன்ன நின் செல்வம் (புறநானூறு198)

(02) ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் (புறநானூறு.9)

(03) ஈப்பாய் அடுநறாக் கொண்டது இவ்யாறெனப் 

        பார்ப்பார் ஒழிந்தார் படிவு. (பரி.திர.2:59)

(04) ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய 

        (புறநாநூறு.2)

(05) உண்டால் அம்ம, இவ்வுலகம் இந்திரர் (புறம்.182)

(06) ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறைய (புறம்.367)

(07) ஐந்தலை சுமந்த வேக வெந்திறல் நாகம் (புறம்.37)

(08) ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் (கலி.130:9)

(09) ஐயிரு தலையின் அரக்கர் கோமான்(கலி.38:3,)

(10) ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தரா (கலி.25:3)

(11)கைபுனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்தாங்கு (கலி.25:3)

(11) கடுந்தெறல் இராமனுடன் புணர் சீதையை (புறம்.378)

(12) கறை மிடற்று அண்ணல் காமர் சென்னி (புறம். 55)

(13) கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு (புறம்.361)

(14) சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் (புறம்.23)

(15) தாலி களைந் தன்றும் இலனே ; பால்விட்டு (புறம்.77)

(16) தேவர் உலகம் எய்தினன் ஆதலின் (புறம்.228)

(17) தைஇத் திங்கள் தண் கயம் போல (புறம்.70)

(18) நல் பனுவல் நால் வேதத்து (புறம்.15)

(19) நீல மணி மிடற்று ஒருவன் போல (புறம்.91)

(20) நீல் நிற உருவின் நேமியோனும் (புறம்.58)

(21) நெய்ம் மலி ஆவுதி பொங்க பல் மான் (புறம்.15)

(22) பனி பொழி சாரலும்,பார்ப்பாரும் (பரி.8:52,)

(23) பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்த (கலி.15:17)

(24) பார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய (நற். 321:5,)

(25) பார்ப்பன மகனே ! பார்ப்பன மகனே ! குறு. 156.

(26) பார்ப்பார் தப்பிய கொடுமை யோர்க்கும் (புறம்.34)

(27) பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது (புறம்.43)

(28) பால் நிற உருவின் பனைக் கொடியோனும் (புறம்)

(29) பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல (புறம்.55)

(30) போர் தலைமிகுத்த ஈர்-ஐம்பதின் மரொடு (பதிற். 14:5)

(31) மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனை (கலி.52:2)

(32) மாற்று அருங் கணிச்சி மணி மிடற்றோனும் (புறம் )

(33) முதுபார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து (கலி. 65:20)

(34) வடமீன் புரையும் கற்பின், மடமொழி (புறம்.122.)

(35) வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற 

       முகத்தவன்  (திருதராட்டிரன்) (கலி.25:1)

(36) வல் வேற் கந்தன் நல் இசை அல்ல (புறம்.380)

(37) வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும் (புறம்.183)

--------------------------------------------------------------------

ஆரியர்களின் அறிமுகமான ஆலமர் கடவுள் (தெட்சணாமூர்த்தி), இந்திரன், இராமன், சீதை, தேவர் உலகம், மணிமிடற்று ஒருவன் (பரமசிவன்) நேமியோன் (திருமால்), பனைக்கொடியோன், நுதல் விளங்குமொரு கண் (பரமசிவன்), கந்தன் ஆகிய கடவுளர் பெயர்கள் புறநானூற்றுப் பாடல்களில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

ஈரைம்பதின்மர் (கௌரவர்கள்), ஐந்தலை நாகம், ஐயிரு தலையின் அரக்கர் கோமான் (இராவணன்), நால்வேதம், வேள்வி அந்தணர், தாலி களைதல், நெய்ம்மலி ஆவுதி, பாம்பு சேர் மதி (சந்திர கிரகணம்), வடமீன் கற்பு ஆகிய ஆரியர்களின் கருத்துகள் புறநானூற்றில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

ஆரியர்களின் கான்முளைகளாகக் கருதப்படும் ஒரு பிரிவினரைக் குறிக்கும் வகையில் “பார்ப்பனர்” என்னும் சொல் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி ?

 

வேறு எந்தப் பிரிவினரையும், எடுத்துக் காட்டாக “சத்திரியர்”, “வைசியர்”, “சூத்திரர்” ஆகியோரைக் குறிக்கும் எந்தச் சொல்லும் புறநானூற்றில் காணப்படாத போது “பிராமணர்”களைக் குறிக்கும் “பார்ப்பனர்” என்ற சொல் மட்டும் ஒன்பது பாடல் வரிகளில் இடம் பெற்றிருப்பது எப்படி?

 

பத்துப் பாட்டு நூல்களான, திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம் ஆகியவை கி.பி. 2 ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை. இவற்றில் ஆரியக் கலப்பு இருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை !

---------------------------------------------------------------

1).ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய (பெரும்.415.)

2).பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் (பெரும்.373)

----------------------------------------------------------------

திருமுருகாற்றுப்படை கி.பி. 7 ஆம் நூற்றாண்டு இலக்கியம். இதில் தான் திருமால், சிவன், இந்திரன், பிரம்மா, பார்ப்பனர் பற்றிய குறிப்புகள் வருகின்றன !

----------------------------------------------------------------

(01) புள் அணி நீள் கொடிச் செல்வன் ( திருமால்),

(02) உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் (சிவன்),

(03) யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் (இந்திரன்),

(04) நான்முக ஒருவற் சுட்டி (பிரம்மா)

(05) ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் (பார்ப்பனர்)

-----------------------------------------------------------------

சங்க கால நூல்களில் தொடங்கி இன்று வரை ஆரியர்களின் மேலாளுமை முனைப்பாக இருந்தே வருகிறது. தங்கள் மொழியையும், பண்பாட்டையும் தமிழர்கள் மீது திணிப்பதற்கு அவர்கள் கையில் எடுத்த ஆயுதம் தான் ‘”கடவுள்” !

 

கடவுளின் பெயரால் தான், தமிழ் நாட்டில் மாந்தர்களின் பெயர்களெல்லாம் “வடமொழி”ப் பெயர்களாகவே இருக்கின்றன. மாந்தர்களுக்குப் பெயர் சூட்டுவதில் தமிழை அடியோடு ஒதுக்கி வைத்து விட்டது ஆரியம் !

 

இது புரியாமல் நாம் இன்னும் ஆரியத்துக்கு அடிமைப்பட்டு, வடமொழிப் பெயர்களாகவே வைத்துக் கொண்டிருக்கிறோம் !

------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[திருவள்ளுவராண்டு 2054, கன்னி (புரட்டாசி) 22]

{09-10-2023}

----------------------------------------------------------------------------------------