விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 30 ஜூன், 2022

சிந்தனை செய் தமிழா (52) பெயருடன் “ஜி” இணைத்துப் பேசாதீர்!

மோடிஜிவடவர் பண்பாடு ! மோடி அவர்கள்தமிழர் பண்பாடு !

 

தமிழ்வாணன் : வாங்க அன்பழகன்ஜி ! சௌக்யமா ?

 

அன்பழகன் :: நலம்தான் தமிழ்வாணன் ! இது என்ன புதுப்பழக்கம், “ஜிபோட்டுப் பேசுகிறீர்கள் !

 

தமிழ்வாணன் : ஜிஎன்பது மரியாதையைக் குறிக்கும் சொல் ! காந்திஜி, நேருஜி, மோடிஜி மாதிரி அன்பழகன் ஜி ! ஏன் ? உங்களுக்குப் பிடிக்கவில்லயா ?

 

அன்பழகன் :: அடுத்து அம்மாஜி, அப்பாஜி, தாத்தாஜி, பாட்டிஜி, அண்ணாஜி அண்ணிஜி, அக்காஜி, மாமாஜி, மாமிஜி என்றெல்லாம் அழைப்பீர்களோ ?

 

தமிழ்வாணன்; எல்லோரும் மரியாதைக்கு உரியவர்கள் தானே ! ஜிபோட்டு அழைத்தால் என்ன ?

 

அன்பழகன் :: அம்மா, அப்பா, தாத்தா, மாமா என்பவை எல்லாம் மரியாதை இல்லாத சொற்கள் என்று உங்களுக்கு யார் சொன்னது ?  அம்மாவை அம்மாஜிஎன்று ஜிபோட்டு அழைப்பது தான் மரியாதை என்று எந்த முட்டாள் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்தான் ?

 

தமிழ்வாணன்: ஏன் கோபப்படுகிறீர்கள் அன்பழகன் ? அப்படி என்ன நான் தவறாகச் சொல்லி விட்டேன் ?

 

அன்பழகன் :: அம்மா ! சென்று வருகிறேன்என்று சொல்வது பண்புக் குறைவான கூற்று அன்று ! அம்மா !  சென்று வரேண்டி என்பது தான்  பண்பற்ற பேச்சு ! அம்மாஜி ! சென்று வரேண்டி !என்று சொல்வது பண்புடைய பேச்சாகுமா ? பெயர்ச் சொல் மற்றும் விளிச் சொல்லுடன் ஜிசேர்ப்பது இந்திக்காரர்கள் வழக்கம் !

 

தமிழ்வாணன்: இந்திக்காரர்களின் வழக்கத்தை நாம் பின்பற்றுவது தவறா ?

 

அன்பழகன் :: தவறு தான் ! அவர்கள் பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டுகிறார்கள்; குல்லா போட்டுக் கொள்கிறார்கள் ! நீங்களும் அவ்வாறு செய்வது தானே ! அந்தப் பெண்கள் தலையில் முக்காடு போட்டு, மூக்கிலும், காதிலும், கை, கால்களிலும்  வளையங்களைத் மாட்டிக் கொள்கிறார்கள் ! உங்கள் தாயாருக்கும், மனைவிக்கும் முக்காடு போட்டுக் கொள்ளத் துணியும், கை, கால், மூக்கு, காதுகளில் மாட்டிக் கொள்ள வளையங்களும் வாங்கித் தருவீர்களா ?

 

தமிழ்வாணன்: என்ன இப்படி தப்புத் தப்பாகப் பேசுகிறீர்கள் ? ”ஜிஎன்று அழைத்ததற்காக இவ்வளவு கோபமா ?

 

அன்பழகன் :: இந்தியில் ”, “எழுத்துகள் கிடையா ! அவர்களைப் பின்பற்ற விரும்பும் நீங்கள், இனிமேல் பெத்தபெருமாளை பேத்த பேருமாள்!என்று சொல்லுங்கள் ! வெங்காயத்தை, “வேங்காயம்என்று கடையில் கேட்டு வாங்குங்கள் ! புத்தகக் கடைக்குப் போய், ஐயா ! தோல்காப்பியம்இலக்கண நூல் இருக்கிறதா என்று கேளுங்கள் !

 

தமிழ்வாணன் : போதும் அன்பழகன் ! என்னைக் குழப்பாதீர்கள் !

 

அன்பழகன் :: தமிழ்வாணன் ! இந்தியில் மேசைஎன்பது பெண்பால் ! இனி, மேசை சுவர் ஓரத்தில் கிடக்கிறாள், என்று சொல்லிப் பாருங்கள் !

 

தமிழ்வாணன்: எனக்கு ஒன்றும் புரியவில்லை அன்பழகன் ! குழப்பமாக இருக்கிறது !

 

அன்பழகன் :  தமிழ்வாணன் ! ஒவ்வொரு நாட்டினருக்கும், ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் வெவ்வேறு விதமான பழக்க வழக்கங்கள் உள்ளன ! உணவுப் பழக்கம், பேச்சு, நடை, உடை, ஒப்பனை, பண்பாடு ஒவ்வொன்றிலும் நமக்கும் அவர்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன ! அவர்களுடன் நாம் அன்பாகப் பழகலாமே அன்றி, அவர்களிடமிருந்து எதையும் இரவல் வாங்கக் கூடாது !

 

தமிழ்வாணன் : அப்படியா ?

 

அன்பழகன் : புலியைப் பார்த்து தன் உடலிலும் வரிகள் இருந்தால் அழகாக இருக்குமே என்று எண்ணி பூனை சூடு போட்டுக் கொள்வது புத்திசாலித் தனமாகுமா ? இந்திக்காரர் ஜிபோட்டுப் பேசுகிறார் என்பதற்காக நாமும் ஜிபோட்டுப் பேச வேண்டுமா ? நாம் எதிரில் வருபவரைப் பார்த்து வணக்கம்என்கிறோம் ! எந்த இந்திக்காரராவது வணக்கம்என்று சொல்கிறாரா ? “நமஸ்கார்என்றல்லவா சொல்கிறார் !

 

தமிழ்வாணன்:  ஆமாம் !

 

அன்பழகன் : வணக்கத்தை அவர் நம்மிடமிருந்து இரவல் வாங்க மறுக்கிறார்; தேவையின்றி, தொடர்வண்டி நிலையங்களிலும், அஞ்சலகங்களிலும், அளகைகளிலும் (BANKS), இந்தியைக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள். நம் தமிழகப் போக்குவரத்துக் காவல்துறை வழங்கும் பற்றுச் சீட்டுகளில் கூட இந்தியைப் புகுத்திவிட்டனரே. !

 

தமிழ்வாணன்: நீங்கள் சொல்வது உண்மை தான் !

 

அன்பழகன் : நமது தமிழ், அவர்களுக்கு வேப்பங் காயாகக் கசக்கிறது ! அவர்களது ஜிஉங்களுக்கு இனிக்கிறதா ? தமிழ்வாணன் என்று பெயர் வைத்துக் கொண்டு, தமிழையும், தமிழ் உணர்வையும் மறந்து  நீங்கள் செயல்படலாமா ?

 

தமிழ்வாணன்: நீங்கள் சொல்வதில் ஞாயம் இருக்கிறது ! ஒப்புக் கொள்றேன் !

 

அன்பழகன் : தமிழ்வாணன் ! உங்கள் சிந்தனையில் தெளிவு ஏற்பட்டுள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன் ! தெரிந்தோ தெரியாமலோ, தங்கள் பெயருடன் அல்லது பிறர் பெயருடன் ஜிஇணைத்துக் கொண்டு பேசியும் எழுதியும் வருகின்ற தமிழ்நாட்டவர் எல்லோரும் திருந்த வேண்டும் ! தமிழுக்கு அணிசேர்க்க வேண்டுமேயன்றி  பிணிசேர்க்கக் கூடாது !

 

----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 17]

{01-07-2022}

-----------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக