மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உந்தலுணர்வு பீறிட்டுக்
கிளம்புகிறதா ?
------------------------------------------------------------------------------------
இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்
பட்டுக் கிடந்த போது, நாட்டு விடுதலையை நோக்கமாகக் கொண்டு
இந்தியப் பேராயக் கட்சி (காங்கிரஸ் கட்சி) தொடங்கப்பட்டு, விடுதலைப்
போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது !
உழைக்கும் தொழிலாளர்கள் முதலாளிகளால்
சுரண்டப்படுவதை எதிர்த்து,
அவர்களுக்குப்
பாதுகாப்புக் கேடயமாக விளங்கும் பொருட்டு பொதுவுடைமைக் கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி)
தொடங்கப்பட்டது !
குறிப்பிட்ட வகுப்பினர் ஏனைய மக்களை இழிவுபடுத்தி, அரசியலிலும், ஆட்சியிலும், சமுதாயத்திலும்
மேலாண்மை செலுத்தும் போக்கினைக் கண்டித்து, பிற்பட்ட
மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் காவலனாகத் திகழும் பொருட்டுத் திராவிடர் கழகம்
தோன்றியது !
வடமாநிலத்தவர் தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதை
எதிர்த்தும், இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழுக்கு உரிய பெருமையை மீட்டெடுக்கும்
வகையில் போராடுவதற்கும் அடித்தளமாக விளங்க திராவிட முனேற்றக் கழகம் தோன்றியது !
இந்த நான்கு இயக்கங்கள் தான் ஒரு
குறிப்பிட்ட கொள்கை நிறைவேற்றத்திற்காக, குறிப்பிட்ட
நோக்கத்தை அடைவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட அரசியல் இயக்கங்கள் !
இந்த நான்கு அரசியல் கட்சிகள் அல்லாமல்
நூற்றுக்கும் மேற்பட்ட வேறு பல அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டில் இயங்கி
வருகின்றன. சில கட்சிகள் மதம் சார்ந்தும், வேறு சில
கட்சிகள் சாதிகள் சார்ந்தும், இன்னும் சில
கட்சிகள் வட்டாரம் சார்ந்தும், வேறு சில
கட்சிகள் வேளாண்மை போன்ற தொழில் சார்ந்தும்
எஞ்சியவை பெயரளவுக்கும் இயங்கி வருகின்றன !
இப்படிப்பட்ட சூழ்நிலையில் திரையுலக
மின்மினிகளான நடிகர்கள் சிலரும் சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் களத்திற்கு
வந்துள்ளனர். அண்மையில் ஒரு நடிகர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்து
நாடாளுமன்றத் தேர்தலிலும் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தார் !
அடுத்து நானும் வருவேன் என்று பூச்சாண்டி
காட்டிக் கொண்டிருக்கிறார் இன்னொரு நடிகர். அவ்வப்போது தமது அரசியல் ஆசைகளை தமது
படங்கள் வாயிலாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் வேறு சில நடிகர்கள்!
அண்மைக் காலமாகத் திரையுலகிலிருந்து
அரசியலுக்கு வரும் போக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் என்ன ? மக்களுக்குத் தொண்டு செய்ய அவர்களுக்கு அளவு
கடந்த ஆர்வம் இருக்கிறதா ?
ஆட்சிக்கு வந்து
அடித்தட்டு மக்களுக்குச் சேவை செய்ய
வேண்டும் என்ற உந்தலுணர்வு பீறிட்டுக் கிளம்புகிறதா ?
மக்களுக்குச் சேவை செய்வது தான் இவர்களது
நோக்கமென்றால், ஓகிப்புயலால் தென் தமிழக மக்கள் இன்னலுக்கு
ஆட்பட்டபோது ஓடோடிச் சென்று அவர்களுக்கு உதவி இருக்க வேண்டும். கஜா புயல்
தாக்கியபோது வீடு வாசல் மாடு மனை
அத்தனையையும் இழந்து துன்பத்தில் துவண்டு நின்ற மக்களை நேரில் சந்தித்து ஆறுதல்
கூறி, உதவிகளைச்
செய்திருக்க வேண்டும் !
புயலால் சூறையாடப்பட்டு, மக்கள் துன்பத்தில் துவண்டு கிடந்தபோது
அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி உதவி செய்ய ஓடிவராத விஜயகாந்தும், சரத்குமாரும், சீமானும், கமலகாசனும், இப்போது ஓடி
வருகிறார்கள்; தங்கள் கட்சி / அணி வேட்பாளார்களுக்கு
வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று மன்றாடிக் கேட்கிறார்கள் !
அரசியல் கட்சி தொடங்கிய இந்த நடிகர்கள், முதலில் கட்சியின் கொள்கைகளை அறிவிக்க
வேண்டும்; குளு குளு அறைகளிலிருந்து இறங்கி வந்து
வெயிலென்றும் பாராது, மழையென்றும் தளராது மக்களோடு மக்களாகப் பழக
வேண்டும். துன்பப்படும் மக்களுக்கு அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது
கொடுக்கும் இளகிய மனம் இருக்க வேண்டும். இதற்கு இந்த நடிகர்கள் அணியமாக (தயாராக)
இருக்கிறார்களா ? இல்லையே !
நண்பர்களே ! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் !
இந்தத் திரையுலக மின்மினிகளின் நோக்கம் அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியப்
பிடிப்பதன்று ! தங்களிடமுள்ள கறுப்புப் பணக் குவியல்களை வெள்ளையாக்குவதற்கு
அரசியல் களத்தை ஆதாரக் களமாக்கிக் கொள்ளத்
துடிக்கிறார்கள் ! அவ்வளவு தான் !
கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கும் கலைக்கூடமாக
அரசியல் களத்தை இவர்கள் கணித்து வைத்திருக்கிறார்கள். கட்சி
உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்பாண்மைக் கட்டணம், கட்சி
வளர்ச்சி நிதி, தேர்தல் நிதி, கட்சித்
தலைமைக்குத் தொண்டர்களால் தரப்படுகின்ற வெள்ளி வாள், கேடயங்கள், பிறந்த நாள் பரிசுப் பொருள்கள் என்று அத்துணையும் கறுப்புப் பணம்
வெள்ளையாகும் விளைச்சல் நிலங்கள் அல்லவா? இதற்காகத்
தானே கறுப்புப் பணத்தில் திளைக்கும் மின்மினிகள் அரசியலுக்கு வருகின்றன !
முப்பது
ஆண்டுகள் தொண்டரோடு தொண்டராகக் களத்தில் நின்று உழைத்த பின்பே குடியாத்தம்
தொகுதியில் தேர்தலில் நின்று வென்றார் காமராஜர். அரசியல் கட்சி தொடங்கி 12 ஆண்டுகளுக்குப் பிறகே தேர்தலில் நின்றார்
அண்ணா ! எட்டு ஆண்டுகள் கட்சிக்காக
உழைத்து, அதன் பின்னரே தேர்தல் களத்திற்கு வந்தார்
கலைஞர். ஆனால், இந்தத் திரையுலக மின்மினிகளோ நேற்று
கட்சியைத் தொடங்கிவிட்டு,
இன்று தேர்தலில்
நிற்கத் துணிகின்றனர். நோக்கம் வேறு, செயல் வேறு
என்பதால் தான் இந்த கதிப்போ ?
தம்மிடமுள்ள கறுப்புப் பணத்தை
வெள்ளையாக்கும் வரை இந்தத் திரையுலக மின்மினிகள் அரசியல் அரங்கில் தங்கள்
நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி மக்களைக் கவர்ச்சியால் கட்டிப் போட்டு
வருவார்கள். அதுவரைத் தம்மை நல்லவர்களாகக்
காட்டிக் கொண்டு நாடகமாடிக் கொண்டே இருப்பார்கள் !
விஜயகாந்த், சரத்குமார், சீமான், கமலகாசன்,
அனைவருமே தங்களிடமுள்ள
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க அரசியல் களத்தைப் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள்; இவர்களது நோக்கம் மக்களுக்குச் சேவை
செய்வதன்று ! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி, உண்மையை
ஒளித்து வைக்கும் கொள்கையாளர்கள் !
இந்த வரிசையில் இரஜனிகாந்தும் சேர்வதற்கு
நாள் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழன் ஏமாளியாக இருக்கும் வரை இன்னும் பல
திரையுலக மின்மினிகள் அரசியல் அரங்கிற்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 15]
{29-05-2022}
-------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக