“பற்று” உள்ளவன்தான் மனிதன் . இந்தப் ”பற்று” கட்டாயம் தேவை !
----------------------------------------------------------------------------------
நண்பர்களே ! தமிழ்ப் பணி மன்றத்தில் நான் எழுதிய இரண்டொரு கட்டுரைகளையும் அதற்கு நிகழ்ந்த எதிர் வினைகளையும் கண்ணுற்று இருப்பீர்கள். நான் தெரிவித்த கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து உடைய சில நண்பர்கள் தங்கள் உணர்வுகளை உடனடியாகப் பின்னூட்டங்கள் மூலம் வெளியிட்டு இருந்தார்கள் !
மாற்றுக் கருத்து உடைய நண்பர்கள் இன்னும் பலர் இருக்கலாம். அவர்கள்
எல்லாம், தங்கள் உள்ளக் கிடக்கையை
வெளிப்படுத்தாமல் அமைதி காத்து இருக்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன் !
மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. அவற்றுள்
ஒன்றுதான் ”பற்று” என்பது. கால்நடைகள், பறவைகள் போன்றவை தமது குட்டிகள் அல்லது
குஞ்சுகள் மீது “பற்று” வைத்திருக்கும். ஆனால் இந்தப் “பற்று” குறைந்த காலத்திற்குத் தான்
நீடிக்கும். குட்டிகளோ அல்லது குஞ்சுகளோ, தாமாக இரை
தேடிக் கொள்ளும் காலம் வரும் வரை மட்டுமே தாயின்
“பற்று” அவற்றின் மீது
நிலைத்திருக்கும். பின்பு அவை ஒவ்வொன்றும் தனித்து இயங்கத் தொடங்கி விடும் !
மனிதப் பிறவி அப்படி அன்று ! பெற்றோரின் “பற்று” (பாசம்),என்பது இறுதி வரை நிலைத்திருக்கும். தமது பிள்ளைகள் வளர்ந்து,
தனித்து இயங்கத் தொடங்கிவிட்டார்கள் என்று
தெரிந்த பின்பும் கூட அது தொடர்கிறது. இது தான் மனிதப் பிறவியின் தனித்தன்மை !
நான் “பற்று” இல்லாதவன் என்று எந்த மனிதனும் சொல்ல முடியாது. முற்றும் துறந்த
துறவிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட அவ்வப்போது அரசியல் கருத்துகளை உதிர்த்து,
தாம் துறவி அல்ல என்பதை மெய்ப்பித்துக்
கொண்டிருப்பதைக் காணமுடிகிறது !
“பற்று” உள்ளவன் தான் மனிதன். இந்தப் ”பற்று” கட்டாயம் தேவை. தன் பிள்ளைகள் மீது
பெற்றோருக்குப் “பற்று” இருக்க வேண்டும். பிள்ளைகளுக்குப் பெற்றோர் மீது “பற்று” இருக்க வேண்டும். இந்தப் “பற்று”தான் மனித இனத்தைச் சிதறுண்டு போகாமல் பாதுகாத்து வைத்திருக்கிறது !
ஒவ்வொரு மனிதனுக்கும் தன் குடும்பத்தின் மீது “பற்று” இருப்பது போல அக்கம் பக்கத்தார் மீதும்
“பற்று” இருக்க
வேண்டும். உறவினர்கள் மீது “பற்று” இருக்க வேண்டும். ஊர் மக்கள் மீது “பற்று” இருக்க வேண்டும். மாவட்டம் என்ற “பற்று” இருக்க வேண்டும். மாநிலம் என்ற “பற்று” இருக்க வேண்டும். நாடு என்ற “பற்று” இருக்க வேண்டும். எல்ல உயிரகளையும்
தாங்கி நிற்கின்ற இந்த உலகத்தின் மீதும் “பற்று” இருக்க வேண்டும் !
இவற்றுக்கு அப்பாற்பட்டு “தாய்மொழி”
மீதும் பற்று இருக்க வேண்டும். பல்வகைப்பட்ட
இந்தப் “பற்று” எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை நாம் தான் சிந்தித்துக்
கைக்கொள்ள வேண்டும். ”அளவுக்கு விஞ்சினால் அமுதமும் நஞ்சு”
என்னும் சொலவடையைக் கேள்விப்பட்டு
இருப்பீர்கள். பிள்ளைகள் மீது உள்ள ”பற்று” அளவுக்கு விஞ்சினால், பிள்ளைகளுக்கு நன்மையைத் தராமல்,
அவர்கள் கெட்டுப் போகவே வழி வகுக்கும் என்பதை
நாம் அறிவோம் !
இப்படி, குடும்பம் தொடங்கி நாடு வரை விரிந்து
செல்லும் “பற்று” என்னும் உணர்வு, நமக்குப் பிடித்த தலைவர், நமக்குக்
பிடித்த கட்சி, நமக்குப் பிடித்த நடிகர், நமக்குப் பிடித்த விளையாட்டு வீரர் என்று அதன் எல்லை விரிகிறது.
இங்கெல்லாம் “பற்று” என்னும் உள்ளார்ந்த உணர்வு மறைந்து “பிடிப்பு” என்னும் மேலோட்டமான உணர்வு தான்
வெளிப்படுகிறது !
“பிடிப்பு” என்னும் உணர்வு மாறக் கூடியது; மாற்றிக் கொள்ளக் கூடியது. ஆனால் “பற்று” என்னும் உணர்வு மாறக் கூடாதது; மாற்றிக் கொள்ளக் கூடாதது. பிள்ளைகள் மீது நமக்கு உள்ள “பற்று”தனை நாம் மாற்றிக் கொள்ள முடியாது.
ஆனால் கட்சி மீது நமக்கு உள்ள “பிடிப்பு” நாம் விரும்பும் போது மாற்றிக் கொள்ளக் கூடியது !
நாம் விரும்பும் கட்சி மீது நமக்கு “பிடிப்பு” இருக்கலாமே தவிர “பற்று” இருக்கலாகாது. நாம் அனைவருடனும்
நல்லுறவு பேணி வரும் நிலையில், நமக்கு ஒரு இடையூறு ஏற்படும் போது நாம்
“பற்று” வைத்திருக்கும்
பிள்ளைகளோ, தெருவினரோ, ஊராரோ நமக்குக் கட்டாயம் உதவிக்கு வருவர். “பிடிப்பு” வைத்திருக்கும் கட்சியின் தலைவர்
உதவிக்கு வரமாட்டார். அவருக்கு ஆயிரம் வேலைகள்; நமக்கு உதவி செய்ய அவர் வருவார் என எதிபார்க்கலாகாது. ”பற்று”க்கும் “பிடிப்பு”க்கும் இது தான் வேறுபாடு !
“பற்றும்” “சினமும்” ஒட்டிப் பிறந்தவை. ஒன்றையொன்று பிரிக்க முடையாது. நாம் “பற்று” வைத்திருக்கும் ஒருவர் மீது வேறொருவர்
தாக்குதல் தொடுத்தால் நமக்குச் சினம் வருவதற்குக் காரணம் அதுதான். நாம் ”பிடிப்பு” வைத்திருப்பவர் மீது தாக்குதல்
நடந்தால், அய்யகோ ! அவரைத் தாக்கி விட்டார்களே
என்று இரக்கம் தான் ஏற்படுமே தவிர சினம் ஏற்படாது !
அரசியல் கட்சிகள் மீது மனிதனுக்கு “பிடிப்பு” இருக்கலாம்; “பற்று” இருக்கலாகாது. நான் சார்ந்துள்ள கட்சி
மீது எனக்கு ”பற்று” இருக்கிறது என்று நான் சொன்னால், நான் தவறு செய்கிறேன் என்று பொருள். நான் சார்ந்துள்ள கட்சியைப்
பற்றி யாராவது குறை சொன்னால் எனக்குச் சினம் வருகிறது என்றால் நான் ”பிடிப்பு”க்குப் பதில் “பற்று” வைத்து, தவறு செய்து விட்டேன் என்று பொருள் !
நாம் நமது குடும்பத்தைப் பார்ப்போம்; பிள்ளைகளின் நலனில் கருத்தைச் செலுத்துவோம்; உற்றார் உறவினர்களுடன் நல்லுறவு பேணுவோம்; நண்பர்களின் துணையை இறுகப் பற்றிக் கொள்வோம்; இதற்கு மாறாக, நமக்குப் பிடித்த அரசியல் கட்சி மீது “பற்று” வைத்து, மாற்றுக் கருத்து உள்ளவர்கள் மீது கோபம் கொண்டு ”சொல்மாரி” பொழிவதால் நமக்கு என்ன பயன் ?
நான் நேசிக்கும் கட்சிக்காக என் நேரத்தையும், உழைப்பையும், பணத்தையும் செலவிடுகிறேன்; கட்சி எனக்கு என்ன செய்கிறது ? நான் நேசிக்கும் கட்சி ஆட்சிக்கு வந்தால், எனக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது ? யாரோ சிலர் பதவி பெறுவதற்காக நான் ஏன் உழைக்க வேண்டும் ?
கட்சி சார்புடைய அனைத்து நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன்; உங்கள் அகக் கண்களைத் திறந்து பாருங்கள் ! கட்சி மீது “பற்று”க் கொண்டு, உறவினர்களையும் நண்பர்களையும் இழந்து விடாதீர்கள். உங்கள் சொத்து
உங்கள் குடும்பமும், உறவினர்களும் நண்பர்களும் தான். தேர்தல் வரும் போது உங்கள் கட்சிக்கு
வாக்களியுங்கள்; மற்ற நேரங்களில் கட்சிகளை விட்டு
விலகியே இருங்கள் !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ச் சுரங்கம்”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
26]
{09-06-2022}
-----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக