வண்டியில் பாதுகாப்புக்கு காவலரும் இல்லை; கட்சித் தோழர்களுமில்லை !
எனது பிறந்த ஊரான கடிநெல்வயலில் அரசுத்
தொடக்கப் பள்ளியில் 1954
– ஆம் ஆண்டு வாக்கில்
ஐந்தாம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த காலம். அப்பொழுது காமராஜர் தமிழக
முதல்வர். பக்தவத்சலம் கல்வி அமைச்சர் என்பதாக நினைவு !
புதிதாகக் கட்டிய பள்ளிக் கட்டடத்தைத் திறந்து
வைக்க பக்தவத்சலம் வந்திருந்தார். அவருடன் ஒரேயொரு காவல் உதவி ஆய்வாளரும் இரண்டு
காவலர்களும் மட்டும் அன்று பாதுகாப்புக்கு
வந்திருந்தது இன்றும் எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது !
பள்ளி இறுதி வகுப்பை முடித்துவிட்டு
திருத்துறைப்பூண்டியில்,
வித்வான் மானைக்கால்
என்னுமிடத்தில் மாமாவின் மளிகைக்கடையில்
உதவிக்கு இருந்த காலகட்டம். பேருந்து செல்லும் தார்ச் சாலை ஓரத்தில் மாமாவின்
வீடும் கடையும் !
கடையில் நான் அமர்ந்திருக்கிறேன். சாலையில்
ஒற்றை மாட்டு வண்டியில் பேராசிரியர் க.அன்பழகன் தனியாக அமர்ந்திருக்க, வண்டி நெடும்பலம் நோக்கிச் செல்கிறது.
அப்போது அவர் தமிழகமெங்கும் நன்கறியப்பட்ட ஐம்பெரும் தலைவர்களுள் ஒருவர். கழகத் தோழர் கல்யாணசுந்தரம் வீட்டுக்கு அவரது
பயணம். அவருக்கு வண்டியில் பாதுகாப்புக்கு காவலரும் இல்லை; கட்சித்
தோழர்களுமில்லை !
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் கூட்டுறவு
இளநிலை ஆய்வாளராக நான் பணியிலிருந்தேன். இந்திரா காந்தி இந்தியத் தலைமை அமைச்சர். 1966-ஆம் ஆண்டில் ஒருமுறை தஞ்சைக்கு, அப்போதைய மைய அரசு அமைச்சரான சி.ஆர். பட்டாமிராமனுடன், வருகிறார். கும்பகோணத்தில் இருந்து பாபநாசம் வழியாக மகிழுந்தில் (CAR) பயணம். அவருடன் நான்கு அல்லது ஐந்து
மகிழுந்துகள் பின் தொடர்கின்றன !
பாபநாசத்தில் மகிழுந்திலிருந்து இறங்கி, கூடியிருந்த மக்களிடையே ஐந்து நிமிடம்
பேசுகிறார். இந்திராகாந்தியின் பாதுகாப்புக்கு ஒரேயொரு காவல் துறை ஊர்தி. பத்து
பேருக்கும் குறைவான காவலர்கள், ஒரு உதவி ஆய்வாளர்.
காவலர்கள் யாரும் இந்திராகாந்தியைச் சுற்றி அரண் அமைத்து நிற்கவில்லை !
அது அந்தக் காலம் ! இப்போது ?
மாநில அமைச்சர் ஒருவர் தஞ்சை வருகிறார்.
அவருடன் ஐம்பதுக்கும் குறையாத எண்ணிக்கையில் மகிழுந்து அணிவகுப்பு. அமைச்சரின்
ஊர்திக்கு முன்பாக காவல் துறை ஊர்தியில் காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் சில
அலுவலர்கள் அமைச்சரின் முன்புறப் பாதுகாப்புக்கு !
அமைச்சர் அமர்ந்துள்ள ஊர்தியின் பின்வரிசையில் நான்கைந்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள். அதை
அடுத்து கலவரத் தடுப்புப் படை ஊர்தி உள்பட நான்கைந்து காவல் ஊர்திகள். அவற்றில்
ஐம்பதுக்கும் குறையாத காவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள். அமைச்சர் மகிழுந்திலிருந்து
இறங்கியவுடன், காவலர்கள் அவரைச் சுற்றி அரண் அமைத்து
நிற்கிறார்கள் !
கையில் விண்ணப்பத்துடன் காத்திருக்கும்
மக்கள் அவற்றை அமைச்சரின் உதவியாளரிடம் தான் தர முடிகிறது. கட்சித் தலைவர்களைத்
தவிர பொது மக்கள் யாரும் அவரை நெருங்க முடியவில்லை !
ஒரேயொரு உதவி ஆய்வாளர், இரண்டு காவலர்கள் பாதுகாப்புடன் வருகை தந்த அன்றைய அமைச்சர்
பக்தவத்சலத்துடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், துணைக்
கண்காணிப்பாளர், புடை சூழ வருகை தரும் இன்றைய அமைச்சரையும்
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்;
காலம் தான் எவ்வளவு
மாறிவிட்டது !
பாதுகாப்புக்கு யாருமின்றித் தனியாக ஒற்றை
மாட்டு வண்டியில் அன்று பயணம் செய்த பேராசிரியர் அன்பழகனையும் இன்றைய அரசியல்
கட்சிகளின் முதல் வரிசைத் தலைவர்களின்
இப்போதைய பயண ஏற்பாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; காலம் தான்
எவ்வளவு மாறிவிட்டது !
காவலர்கள் ஓரமாகத் தள்ளி நிற்க, , மக்கள் கூட்டத்திடையே பாபநாசத்தில் ஐந்து நிமிடம் உரையாற்றிய அன்றைய
இந்தியத் தலைமை அமைச்சர் இந்திரா காந்தியையும், புது டில்லி
செங்கோட்டையில் குண்டு துளைக்க முடியாத கண்ணாடிக் கூண்டுக்குள் நின்று கொண்டு
உரையாற்றும் இன்றைய தலைமை அமைச்சரையும் ஒப்பிட்டுப் பார்க்கிறேன்; காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது !
அன்று அமைச்சர் பெருமக்களும், இந்தியத் தலைமை அமைச்சரும் மக்களோடு மக்களாக
நெருங்கி நின்றனர்; இன்று அமைச்சர் பெருமக்களும், இந்தியத் தலைமை அமைச்சரும் மக்கள் நெருங்க முடியாத வெகு
தொலைவில் ! காலம் தான் எவ்வளவு மாறிவிட்டது !
இந்த நிலை மக்களாட்சிக் கோட்பாட்டின்
எழுச்சியா ? வீழ்ச்சியா ?
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 31]
{14-06-2022}
----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக