அரசு அலுவலர்கள் தொழில்
எதுவும் செய்யக் கூடாது, பகுதி நேரப் பணியில் சேரக்
கூடாது !
அரசுப் பணியில் அமரும் ஒவ்வொரு ஊழியரும் அரசு அலுவலர் நடத்தை
விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். நடத்தை விதிகளை மீறுபவர்கள் ஒழுங்கு
நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, பணியிலிருந்து நீக்கப்படத் தக்கவர்கள்
ஆவர். அரசு அலுவலர் நடத்தை விதிகள் மொத்தம் 20 உள்ளன !
ஒரு அரசு அலுவலர் என்னென்ன செய்யலாம், என்னென்ன செய்யக் கூடாது, எப்படியெப்படி இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்
கூடாது, எதையெதைப் பணம் கொடுத்து வாங்கலாம்,
எதையெதை வாங்கக் கூடாது என்றெல்லாம்
கட்டுப்படுத்துபவை இந்த விதிகள் !
ஒரு அலுவலர் 28 அகவை ஆகும் போது பணியில் சேர்வதாக
வைத்துக் கொள்வோம். பணியில் சேர்ந்தவுடன், தன்னிடமுள்ள
அசையும் சொத்து, அசையாச் சொத்து விவரங்களைப்
பட்டியலிட்டு, அலுவலகத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ஒப்படைத்த பின்பு,
அவர் எந்தச் சொத்து வாங்கினாலும், அதை வாங்குவதற்குப் பணம் ஏது என்று கணக்குக் காட்டி, துறைத் தலைமை அலுவலரிடம் இசைவாணை பெற்ற பின்பே அதை வாங்க முடியும் !
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊர்விட்டு ஊர் மாற்றுவார்கள்.
தூத்துக்குடியில் இருந்து மிகத் தொலைவில் உள்ள
செங்கற்பட்டுக்கும், நாகப்பட்டினத்தில் இருந்து நெடுந்
தொலைவில் இருக்கும் ஓசூருக்கும், இடமாறுதல் செய்யப்படும் நேர்வுகளும்
உண்டு. சில துறைகளில் மட்டும் 10 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்
இடமாறுதல் பெறும் வாய்ப்பு இருக்கிறது. அந்த ஊருக்கு அவர் தன் குடும்பத்தினருடன்
இடம்பெயர வேண்டும். அங்கு சென்று தன் பிள்ளைகளுக்கு பள்ளியில் இடம் தேடி அலைந்து,
நன்கொடை தந்து, பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்க வேண்டும் !
தனது சம்பளத்திலிருந்து தான் அவர் மருத்துவச் செலவு, உறவினர் வீட்டுத் திருமணச் செலவு, திருமண மொய்ச் செலவு, பிள்ளைகளின் படிப்புச் செலவு, தாய் மாமன் சீர் செலவு, கோவில்
நேர்த்திக் கடன் செலவு, ஆடை அணிகலன்கள் செலவு, வீட்டுவாடகைச் செலவு, உள்பட அனைத்தையும் சமாளித்து, குடும்பச் செலவுகளையும் கவனிக்க வேண்டும் !
ஒரு அலுவலரின் பதவி நிலை உயர உயர அவருக்குச் செலவுகளும் கூடிக்
கொண்டே வரும். ஏனெனில் பதவி நிலைக்குத்
தக்கவாறு மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் (TO KEEP UP THE
STATUS) அவருக்கு ஏற்படுகிறது. !
இந்த நிலையில் அவரது சம்பளத்திலிருந்து சிறிய தொகையாவது சேமிக்க அவர்
முயன்றாலும் முடிவதில்லை. அவர் வாங்கும் சம்பளம் ஒரு குடும்பத்தை நல்ல முறையில்
பேணுவதற்குப் போதுமானதாக இராது. இந்தச் சூழ்நிலையில் அவரது சம்பளத்திலிருந்து ஒரு
பகுதி வருமான வரியாக மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் அல்லது பிப்ரவரி மாதச்
சம்பளத்திலுருந்து ஒரே தடவையாகப்
பிடித்தம் செய்யப்பட்டு சம்பளமின்றி வெறுங்கையுடன் வீட்டுக்குச் செல்லும்
நேர்வுகளும் உண்டு !
அரசு அலுவலர்கள் தமக்கு இடப்பட்ட பணிகளைத் தான் செய்கிறார்கள்.
தொழில் ஏதும் செய்வதில்லை. எனினும்
ஆண்டுக்கு இருமுறை தொழில்வரி என்று ஒரு தொகையை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கிறது.
இந்தத் தருணத்தில் ஒன்றைச் சொல்லியாக வேண்டும் !
அரசு அலுவலர்கள் நடத்தை விதிகள் பற்றிச் சொன்னேன் அல்லவா ? அந்த நடத்தை விதித் தொகுப்பில் உள்ள விதி எண் 8 , அரசு அலுவலர்கள் தனியாகத் தொழில் எதுவும் செய்யக் கூடாது, வேறு யாரிடத்திலும் பகுதி நேரப் பணியில் சேரக் கூடாது, பகுதிநேரமாக வருமானம் ஈட்டும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்று முற்றிலுமாகத் தடை
செய்கிறது. இதை மீறினால் அரசுப்
பணியிலிருந்து அவர் நீக்கப்படுவார் என உரைக்கிறது
அரசு வகுத்துள்ள விதிகள் !
சுருங்கச் சொன்னால், ஆசிரியர்கள் உள்பட அரசு அலுவலர் எவரும்,
அரசுப் பணியில் சேர்ந்தநாள் முதல்
பணியிலிருந்து ஓய்வு பெறும் நாள் வரை, அவரது சம்பளத்தை
மட்டுமே நம்பிப் பிழைப்பை நடத்த வேண்டும் என அரசு
எதிர்பார்க்கிறது. அரசின் இத்தகைய கடுமையான விதிகளினால், பணி ஓய்வு பெற்ற பின்பும் சொந்த வீட்டுக்கு வாய்ப்பின்றி வாடகை
வீட்டிலேயே காலம் தள்ள வேண்டிய துன்ப நிலை 60 % ஓய்வூதிய ஆளிநர்க்கு இன்றும் இருக்கவே செய்கிறது !
சரி ! ஒரு அலுவலர் தன் சம்பளத்திலிருந்து குருவி சேர்ப்பது போல்
சிறுகச் சிறுகச் சேர்த்து, தனது பிள்ளைகளின் படிப்புத் தேவையை
நிறைவேற்றுகிறார். பெண்ணுக்கும் பிள்ளைக்கும் திருமணத்தையும் தட்டுத் தடுமாறி
நடத்திவிடுகிறார். அவர் பணி ஓய்வு பெறும் நாள் வரை அவரது பிள்ளைக்கு வேலை கிடைக்க
வில்லை. [அல்லது வேலைக்குச் சென்ற பிள்ளை
தாய் தந்தையரைத் தவிக்க விட்டுவிட்டு, மனைவியுடன்
தனிக் குடித்தனம் சென்று விடுகிறான்;] அந்த அவல
நிலையில் அவரது சாப்பாட்டுக்கு, அவர் மனைவியின் சாப்பாட்டுக்கு வருமானத்திற்கு அவர் எங்கு போவார் ?
குடும்பத்தில் அவர், அவரது மனைவி, படித்தும் வேலை கிடைக்காத அவர் மகன் மூவரும், உணவு உள்படத் தமது அன்றாடத் தேவைக்குப் பணமின்றி என்ன செய்வார்கள் ? அரசுப் பணியில் இருக்கும் வரை எந்தத்
தொழிலும் செய்யக் கூடாது, வருமானம் ஈட்டும் எந்தப் பணியிலும்
ஈடுபடக் கூடாது என்று சட்டத்தின் மூலம் அரசு அவரைத் தடுத்துவிட்ட நிலையில்,
அவரது தேவைகளுக்கு அரசு தானே பண உதவி செய்தாக
வேண்டும். இத்தகையப் பண உதவி தான் அரசு அவருக்குத் தரும் ஓய்வூதியம் !
ஐம்பத்து எட்டு வயதில் பணிலிருந்து ஓய்வு பெற்ற பின், மாதாமாதம் அவர் பெற்று வந்த சம்பள வருமானம் கதுமென (திடீரென) நின்று
போகிறது. பணி ஓய்வுக்குப் பின் கிடைக்கும் பணிக் கொடைத் தொகையை வைத்து ஒரு வீட்டை வாங்க முடிகிறது என்று வைத்துக்
கொள்வோம். கையில் வேறு பணமில்லை. உடல் தளர்ந்த நிலையில் அவர் வேறெங்கும்
வேலைக்குச் செல்லவும் முடியாது; சென்று குடும்பத் தேவைக்கான பணத்தை
ஈட்டவும் முடியாது !
உடலில் உயிர் இருக்கும் வரை அவர் வாழ்ந்தாக வேண்டுமே ! உயிர்வாழ
அவரால் இனிமேல் ஓடியாடிச் சம்பாதிக்க முடியாது.
அவருக்கு உயிர்வாய்த் தண்ணீர் ஊற்றும் கடமை அரசுக்கு இல்லையென யாரும்
மறுக்க முடியாது – ஏனெனில் அவர் அரசுப் பணியில் இருக்கும்
வரை வேறு சம்பாத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று சட்டத்தின் மூலம் தடுத்தது அரசு
தானே !
ஆகையால், ஓய்வு பெற்ற அலுவலருக்கு அரசு
ஓய்வூதியம் தருவது கட்டாயக் கடமை மட்டுமல்ல 100 % ஞாயமும் கூட ! ஓய்வூதியம் என்பது அவருக்கு அரசு தரும் சலுகை அல்ல;
அவரது உரிமைத் தொகை !
--------------------------------------------------------------------------------------
[ சம்பளம் மட்டுமல்ல, அன்றாடம் கையூட்டு வாங்கி பைநிறையக்
காசுடன் வீட்டுக்குச் செல்லும் அலுவலர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
அவர்களுக்கும் ஓய்வூதியம் தேவையா என்று நீங்கள் கேட்பது தெரிகிறது ! அதைப்பற்றி
இன்னொரு நாள் சொல்கிறேன்.]
-------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(vedarethina70@gmai.com)
ஆட்சியர்,
”தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி)
05]
{19-06-2022}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக