மனிதன் ஓய்வின்றி உழைக்க அவன், மனம் என்னும் சிந்தனைக் களத்தைக் கழற்றி வைத்துவிட்டு இயங்கும் எந்திரமன்று !
பல ஆண்டுகளாகவே காவல் துறையின் நடவடிக்கைகள் குறையுரைகளுக்கு இலக்காகி வந்திருக்கிறது. அண்மையில் நடந்த சாத்தான்குளம் நிகழ்வுகள், காவல் துறையைப் பற்றிய மக்களின் மதிப்பீடுகளை உண்மையென உறுதிப் படுத்தி இருக்கிறது !
மக்களிடம் பரிவுணர்வுடன் நடந்து, அவர்களை நேசிக்க வேண்டிய காவல் துறை ஏன் இப்படிக் கொடுமையான அருவருப்பான முகத்துடன் காட்சி அளிக்கிறது ? குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல் துறை, குற்றவாளிகளின் கூடாரமாக மாறிப் போனது ஏன் ? இதைப் பற்றிச் சற்று ஆய்வு செய்வோம் !
உழைக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஓய்வும் தேவை ! ஓய்வற்ற உழைப்பு அவனை உடலாலும், உணர்வாலும் களைப்படையச் செய்து விடுகிறது. களைத்துப் போய் கைகால்கள் சோர்வடைந்து, வீட்டிற்கு வரும் மனிதனை மீண்டும் அழைத்து அவனுக்கு இன்னொரு பணியைக் கொடுத்தால், அவன் என்ன செய்வான் ? அவன் மனம் சமநிலையினின்று வழுவுகிறது. எரிச்சலுணர்வுப் பொங்கி எழுகிறது !
எரிச்சலின் உச்சத்தில் இருப்பவனிடம் மனிதப் பண்பாடுகளை எதிர்பார்க்க முடியாது ! எதிர்ப்படுவது தன் குழந்தையாக இருந்தாலும் கூட அதனிடம் தன் எரிச்சலை வெளிப்படுத்துகிறான்; அந்தக் குழந்தையை அடிக்கவும் செய்கிறான் !
அரசு அலுவலர்கள் தம் பணி நேரம் முடிந்த பிறகு வீட்டுக்குச் செல்கிறார்கள். ஓய்வெடுக்கிறார்கள்; மனக்களைப்பு நீங்க, தொலைகாட்சியில் இசை ஒளி பரப்பைச் செவிமடுக்கிறார்கள்; குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்கிறார்கள் !
தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் அன்றாட வாழ்வும் கிட்டத்தட்ட இவ்வாறே அமைகிறது. பெரு வணிகம் செய்பவர்கள், மேலாளர் போன்ற மாற்றாள் மூலம் இடையிடையே ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். சிறுவணிகம் செய்பவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு என்றாலும், வீட்டிற்கு வந்த பிறகு மன இறுக்கம் (TENSION) இன்றி ஓய்வெடுக்கிறார்கள் !
வேளாண் பெருமக்கள் தம் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பியதும், களைப்பு தீர நீராடி, உணவருந்தி ஓய்வு எடுக்க முடிகிறது. மக்கள் குமுகாயத்தில், எந்த மனிதன் எந்தப் பணியில் ஈடுபட்டு இருந்தாலும், அவனுக்கு ஓய்வு என்பது கட்டாயத் தேவை ! ஓய்வின்றி உழைக்க அவன், மனம் என்னும் சிந்தனைக் களத்தைக் கழற்றி வைத்துவிட்டு இயங்கும் எந்திரமன்று !
பள்ளிப் படிப்பு அல்லது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டுக் காவல் துறைப் பணியில் சேர்கிறான் ஒருவன். தன் வருவாயை நம்பி இருக்கும் தாய், தந்தை, உடன்பிறப்புகள் என்று நான்கைந்து பேர் அவனுக்காக இல்லத்தில் காத்திருக்கிறார்கள் !
உடன்பிறப்புகள் இல்லாவிட்டாலும் மனைவி குழந்தைகள் என்று அவனது அன்புக்காக வீட்டில் சில உயிர்கள் காத்திருக்கவே செய்கின்றன. மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஓய்வு நேரத்தைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கவே அவன் விரும்புகிறான் !
ஆனால் அவன் பணி நிலைமை எவ்வாறு அமைகிறது ? எட்டு மணி நேர வேலை என்பது காவல் துறை வரலாற்றில் அன்றும் இல்லை; இன்றும் இல்லை ! காலையில் பணிக்கு வந்த ஒரு காவலர், எட்டு மணி நேரம் பணி செய்த பிறகு, வீட்டிற்குச் செல்லலாம், மனைவி மக்களை அழைத்துக் கொண்டு, பொழுதுபோக்காக எங்காவது சென்று வரலாம் என்று எண்ணத்தில் இருக்கிறார் !
ஆனால், உயர் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்கையில், எந்த ஒரு காவலரும் பணி நேரம் முடிந்தாலும் வீட்டிற்குச் செல்ல முடியாது. உதவி ஆய்வாளர், ஆய்வாளர் யாராக இருந்தாலும் சரி, அவர்களது உயர் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்கும் வரைக் கட்டாயம் இருந்தே தீர வேண்டும். காவல் துறையில் நடைமுறையில் இருக்கும் எழுதப்படாத விதி இது !
காலையில் ”ரோல் கால்” எனப்படும் வருகைப்பதிவு வகுப்பிற்காக ஏழு மணிக்கு வீட்டை விட்டு அலுவலகத்திற்குப் புறப்படும் ஒரு காவலர், இரவு எட்டு மணிக்கு முன்னதாக இல்லம் திரும்புதல் என்பது நடவாத செயல் !
கீழ்நிலை அலுவலர்களை மனிதப் பண்புடன் விளிப்பதோ, நடத்துவதோ காவல் துறையில் அரிதாகிப் போய்விட்டது. ஒவ்வொரு அலுவலரும் தனது மேல் நிலை அதிகாரிகளின் பேச்சுகளாலும், செயல்களாலும் மனம் நொந்து நலிந்து போவது என்பது காவல் துறையின் அன்றாட நிகழ்வு !
எட்டு மணி நேரம் அல்லது பத்து மணி நேரம் என்று பணி நேர உச்ச வரம்பு இல்லாமையே காவல் துறையினரின் மனம் மரத்துப் போவதற்கு அடிப்படைக் காரணம். பத்து மணி நேரமாகப் பணியிலிருந்த ஒரு காவலரை இராச் சுற்றுப் பணிக்கு (NIGHT PATROL) அனுப்புவதும் அல்லது, ஒரு கட்சிப் பொதுக் கூட்டத்திற்குக் காவல் பணிக்கு அனுப்புவதும், அல்லது கலவரம் நிகழ்விடத்திற்கு அனுப்புவதும் காவல் துறையில் தவிர்க்கவியலா நிகழ்வாகிவிட்டது !
ஒவ்வொரு மனிதனும் தன்மதிப்புக்கு (சுய கௌரவத்துக்கு) ஊறு விளைவதை ஏற்கமாட்டான். ஆனால் காவல் துறையில் ஒவ்வொரு அலுவலரின் தன்மதிப்பும் ஊறுக்கு இலக்காகிறது. குற்றச் செயல்கள் நிகழ்விடத்தில் கால் கடுக்க நின்று காவல் புரிய வேண்டி இருக்கிறது. கொலை நடந்துவிட்டால், தடய அறிவியல் துறையினர் வரும் வரைப் பிணத்திற்கும் கூடக் காவல் இருக்க வேண்டி இருக்கிறது !
அமைச்சர் வீட்டு நாய் ஒய்யாரமாக வீட்டிற்குள் பஞ்சு மெத்தை இருக்கையில் படுத்திருக்கும்; ஆனால் காவலர் கையில் துமுக்கியுடன் (துப்பாக்கி) வீட்டிற்கு வெளியே பனியென்றும் பாராமல், குளிரென்றும் கூசாமல் நடந்து கொண்டே காவல் பணியில் ஈடுபட வேண்டும் ! என்ன கொடுமை இது ?
தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று சொல்லி அரசியல்வாதியோ, நடிகரோ, அல்லது ஒரு பணக்காரப் போக்கிலியோ (ரவுடி) யாராவது, காவல் துறை அதிகாரிகளை அணுகிவிட்டால் போதும், அவர் வீட்டிற்குக் காவலரோ, உதவி ஆய்வாளரோ, இரண்டு மூன்று பேராகக் காவல் பணிக்குச் சென்றாக வேண்டும்; வீட்டுக்காரர் உள்ளே உறங்குவார், காவல் பணிக்கு வந்தோர் வெளியே விழித்திருந்து காவல் காக்க வேண்டும் !
உள்ளே உறங்குபவரும் மனிதர் தான்; வெளியே காவல் காப்பவரும் மனிதர் தான் ! ஆனால் மதிப்பு அளவில் வெளியே காவல் பணியில் இருப்பவர், இரண்டு மூன்று படிகள் கீழே அல்லவா தள்ளி வைக்கப் படுகிறார் ! காவல் துறையைச் சார்ந்தவர், இவ்வாறு மதிப்புக் குறைவாக நடத்தப்படுவது, அவர்களை மனதளவில் காயப்படுத்திக், கூனிக் குறுக வைத்துவிடுகிறது !
ஏதோ ஒரு ஊரில் சாதிக் கலவரம் நடக்கிறது. முதல் அமைச்சர் காவல் துறை உயர் அதிகாரியை அழைத்துக் கலவரத்தை ஏன் அடக்கவில்லை என்று தன் சினத்தை வெளிப்படுத்துகிறார். உயர் அதிகாரி தன் கீழ்நிலை அதிகாரியை அழைத்துக் கடுமையாகப் பேசுகிறார். இந்தச் சினம் படிப்படியாகக் கீழ் மட்டம் வரை வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது. இந்தச் சினத்தின் வெளிப்பாட்டில், ஒவ்வொரு மட்டத்திலும் காவல் துறை அதிகாரிகளின் தன்மதிப்பு (சுயகௌரவம்) வருத்தப்படும் அளவுக்குப் பாதிக்கப்படுகிறது !
இந்தப் பாதிப்பு, அவர்களை மன இறுக்கத்திற்கு (TENSION) அழைத்துச் செல்கிறது. மன இறுக்கம் அவர்களை, எரிச்சலுக்கும், கடும் சினத்திற்கும் உட்படுத்துகிறது. அப்போது யார் எதிர்ப்பட்டாலும், அவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் !
காவல் துறையில், களப் பணியாளர் எண்ணிக்கை மிகவும் குறைந்து போய்விட்டது. களப் பணியாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தாமல் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கையை அரசு அதிகப் படுத்திக் கொண்டே போகிறது ! காவல் துறைத் தலைமை இயக்குநர் நிலையில் 7 பணியிடங்களும் கூடுதல் தலைமை இயக்குநர் நிலையில் 24 பணியிடங்களும் இப்போது உள்ளன ! இதற்கு ஏற்றாற் போல் காவலர், தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர், போன்ற களப் பணி அலுவலர்களின் பணியிடங்கள் இப்போது இருப்பதைப்போல் இரட்டிப்பாக உயர்த்தப்பட வேண்டும் !
ஆள் பற்றாக் குறையால் ஒவ்வொருவரும் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை காவல்துறையின் கீழ்மட்டத்தில் நிலவுகிறது. இதற்குத் தீர்வு கண்டாக வேண்டும் !காவல் துறையில் எந்த ஒரு அலுவலரும் எட்டு மணி நேரம் வேலை செய்தால் போதும் என்ற நிலையைக் கொண்டு வரவேண்டும் !
அரசியல்வாதிகளினால் காவல் துறையினர் தரக்குறைவாக நடத்தப் படுவதும், ஏசப்படுவதும் நிறுத்தப் படவேண்டும். தரங்கெட்ட அரசியல்வாதிகளுக்கும், ஒழுக்கக் குறைவான நடிகர்களுக்கும், அரசியல் பின்புலமுள்ள போக்கிலிகளுக்கும் (ரவுடி) பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் அவல நிலையைக் காவல் துறையினருக்கு உண்டாக்கக் கூடாது !
சீண்டப்படும் பாம்பு மனிதனைக் கொத்தவருவது போல், காவல் துறையினரும், எங்கோ எதிர்கொண்ட இழிநிலையை, காவல் நிலயத்திற்கு வரும் மக்களிடம் காட்டுகின்ற துன்பநிலை நீக்கப்படவேண்டும் !
சாத்தான்குளம் நிகழ்வில் காவல் அதிகாரிகள் குற்றவாளிகள் என்பதில் ஐயமே இல்லை. அவர்களது செயலை ஒருபோதும் மன்னிக்கவே முடியாது. காட்டுமிராண்டித் தனமான இழிசெயலில் ஈடுபட்டவர்கள் சட்டப்படியான ஒறுப்புக்கு உரியவர்களே ! இதில் குற்றவாளிகள் இவர்கள் மட்டுமல்ல ! கூண்டில் நிறுத்தப்படவேண்டிய முதல் குற்றவாளி தமிழக அரசே !
காவல் துறையினரின் மனம் மரத்துப் போகக் காரணமானவர்கள் ஆட்சித் தவிசில் அமர்ந்திருப்போரே ! காவல் துறையினர் கொடுங் குற்றச் செயலில் ஈடுபடக் காரணமானவர்கள் அரசினரே !
பணிநேர உச்ச வரம்பின்றி வேலை செய்ய வேண்டும்; மதிப்புக் குறைவாக நடத்தப்படுவதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அரசியல்வாதிகளுக்கு எடுபிடி வேலை செய்ய வேண்டும்; மிகவும் இன்னற்பட்டுப் பிடித்து வந்த கயவாளிகளை, ஆளுங்கட்சியினர் சொன்னால் விட்டுவிட வேண்டும் ! எதிர்க்கட்சியினர் மீது பொய்வழக்குப் போட வேண்டும் !
சாதி ஊர்வலமானாலும் சவ ஊர்வலமானாலும் அதற்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும்! குழந்தையைக் காணவில்லை என்றாலும் கோவேறு கழுதையைக் காணவில்லை என்றாலும் வழக்குப் பதிவு செய்து கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் ! முச்சந்தியில் நிற்கும் சிலையை யாராவது மூளியாக்கிவிட்டால், அங்கு சென்று மூன்று நாள்களுக்காவது காவலுக்கு நிற்க வேண்டும் !
அமைச்சர்கள் வந்துவிட்டால், வேறு எந்த வேலைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட்டு விட்டுப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும் ! எந்தக் கோமாளியாவது உண்ணாநிலை என்று உட்கார்ந்துவிட்டால், அங்கு சென்று காவலுக்கு நிற்க வேண்டும். சாலையில் செல்லும் ஊர்திகள் மோதிக்கொண்டு உயிரிழப்பு எற்பட்டால், வண்டிகளையும், பிணத்தையும் அப்புறப்படுத்தும் வரை அங்கே இருந்தாக வேண்டும் ! தீப்பிடித்த இடத்திற்குச் சென்று கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் !
வீட்டில் பெண்டாட்டி பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற நினைவை ஒழித்து விட்டு மேல் அதிகாரிகள் இடும் கட்டளைகளை, வேலைகளை எத்தனை நாளானாலும் ஓய்வு ஒழிவின்றிச் செய்து முடிக்க வேண்டும் ! மொத்தத்தில் காவல் துறையினரின் கடமைப் பொறுப்புகளுக்கு வரம்பு என்பதே கிடையாது ! இவ்வாறு, அவர்களைத் துன்புறுத்தும்போது, அவர்கள் பொறுமை இழந்து, நெஞ்சில் இருக்கும் அன்பு, பரிவு போன்ற உணர்வுகளைத் துறந்துவிட்டு, விலங்குகளாக மாறிவிடுகிறார்கள் !
காவல் துறையினரின் இந்த அவல நிலைக்கு ஆட்சியில் இருப்போர் தான் காரணம். அவர்களின் துன்பத்தைத் துடைப்பது பற்றி என்றைக்காவது நினைத்துப் பார்த்திருப்பார்களா ? அவர்கள் மனித நிலையிலிருந்து விலங்கு நிலைக்குத் தாழ்ந்து போவதற்கு அரசே காரணம் ! எனவே சாத்தான்குளம் நிகழ்வில் முதல் குற்றவாளி அரசு தான் ! இரண்டாவது குற்றவாளிதான் காவல் துறை அதிகாரிகள் !
முதலில், எட்டு மணி நேர வேலை என்பதை நடைமுறைப் படுத்த வேண்டும் ! காவல் துறையினரையும் மனிதர்களாக மதித்து நடத்த வேண்டும் ! தனி மனிதப் பாதுகாப்புக்குக் காவல் துறையினரை அனுப்புவதை நிறுத்த வேண்டும் ! அமைச்சரின் வருகைக்காக மக்களை ஒழுங்கு படுத்துதல் என்ற பெயரில் ஐந்துமணி நேரம், ஆறு மணி நேரம் என்று காவலர்களை சாலையோரத்தில் நிற்கவைப்பதை நிறுத்த வேண்டும் !
அவர்களுக்கும் பனி என்றால் குளிரும், மழை என்றால் மேனி நடுங்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் ! அவர்களுக்கும் குடும்பம் உண்டு. மனைவி மக்கள் உண்டு, குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட அவர்களுக்கும் ஆசை இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் ! மக்களுக்குப் பாதுகாவலாக இருக்க வேண்டிய காவல் துறை அலுவலர்களை, மக்களுக்கு எதிராகத் திசை திரும்பும் போக்குக்கு முடிவு கட்ட வேண்டும் !
ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளே காவல் துறையினரை, மனித நிலையிலிருந்து இறங்கி விலங்கு நிலைக்கு இழுத்துச் செல்கிறது. ஆட்சியில் இருப்போர் இதை உணராதவரை, சாத்தான்குளம் நிகழ்வுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 04]
{20-07-2022}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக