என்ன ? ஏன் ? எப்படி ? எதற்கு ? எங்கே ? எவ்வாறு ?
மரத்திலிருந்து ஒரு அரத்திப் பழம் (Apple Fruit) தரையில் விழுவதைப் பார்த்தார் நியூட்டன். அவர் உள்ளத்தில் ஒரு வினா எழுந்தது. இந்தப் பழம் மரத்திலிருந்து
விடுபட்டு விண்ணை நோக்கிச் செல்லாமல், மண்ணை நோக்கி
வந்தது ஏன் ? இந்த வினா அவரைச் சிந்திக்கத் தூண்டியது. அதன் விளைவு தான் புவி
ஈர்ப்பு விசைக் கண்டு பிடிப்பு !
என்ன ?, ஏன் ?, எப்படி ?, எதற்கு ?, எங்கே ? எவ்வாறு ? என்னும் வினாக்கள் தான் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றன ! இத்தகைய
சிந்தனைகளின் விளைவு தான் அறிவியல் கண்டுபிடிப்புகள் ! கணினி (Computer), கணிகை (Calculator), காசுப் பொறி (A.T.M) எழினி (Mobile Phone), எறிபடை (Weapon)
ஏவுகணை (Rocket) எல்லாமே வினாக்களால் விளைந்த வெளிப்பாடு தான் !
வினாக்களால் தூண்டப்பெற்றுச் சிந்திக்கத் தொடங்கும் மனிதர்கள்
அறிவாளிகள் ஆகிறார்கள்; தொழிற்கூடங்களை அமைக்கிறார்கள்;
வணிக நிறுவனங்களை உருவாக்குகிறார்கள்; ஆதாயம் தரும் துறைகளில் முதலீடுகள்
செய்கிறார்கள் ! வாழ்க்கையில் உயர உயரப்
போகிறார்கள்; வாழ்வின் உச்சத்தை தொடுகிறார்கள் !
சிந்தனைக்கு இடம் தராமல் அனைத்தையும் வியப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டு வாய்
பிளந்து நிற்கும் ஏனைய மாந்தர்கள், முட்டாள்களாக உலா வருகிறர்கள் !
இறுதியில் முக்காடு போட்டுக் கொண்டு மூலையில் முடங்கிப் போகிறார்கள் !
நம் நாட்டில் இரண்டாவது நிகழ்வு தான் நடந்து கொண்டிருக்கிறது !
படிப்பறிவு உள்ள மனிதனைக் கூட அவனது புறச் சூழல்கள் திசைதிருப்பி விட்டு
விடுகின்றன ! நம் வாழ்க்கை வளம் (Life
Style) இன்னும் உயர்வடைய என்ன செய்யலாம் என்று
சிந்திக்கின்ற நேரத்தைவிட, வெட்டிப் பொழுது போக்கும் நேரம் தான்
ஒவ்வொரு மனிதனையும் புதைமணலில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது !
ஆக்கச்சார்பாகச் சிந்திக்க விடாத தொலைக் காட்சிகள், நம் நாட்டிற்குத் தேவையேயில்லை; குமுகாய நாடகங்கள் என்ற பெயரில் கொலை, கொள்ளை, பழிவாங்கல் ஆகியவற்றைக்
காட்சிபடுத்தும் இந்த மின்ம ஊடக நிறுவனங்களை
முற்றிலுமாக முடக்கிப் போட வேண்டும் !
இல்லத் தலைவியர், தம் பிள்ளைகளின் படிப்புக்கு உதவி
செய்ய வேண்டிய நேரத்தில் தொடர் நாடகக் காட்சிகளைத் தூண்டிலாக்கி தொலைக்காட்சிப்
பேழைகள் முன்பு அவர்களைக் கட்டிப் போடும் அவலம் இந்த நாட்டில் தான் அரங்கேறிக்
கொண்டிருக்கிறது ! தாய்மார்களைச் சிந்திக்க விடாமல் முட்டாள்களாக்கி
.வியப்புடன் நிகழ்ச்சிகளைப் பார்க்கச்
செய்யும் இத்தகைய மூளைச் சலவைக்கு நம்மை ஆளும் அரசுகளும் துணை போகின்றன !
நூறாயிரக் கணக்கான (இலட்சக் கணக்கான) மக்களின் பொன்னான நேரத்தை
வீணடிக்கும் இன்னொரு கவறாட்டம் (சூதாட்டம்) தான், மடலாட்டம் (CRICKET MATCHES). மடலாட்ட நிகழ்ச்சிகளை
ஏற்பாடு செய்யும் சீமான்களையும், புனையப்பட்ட
பொய்களை விளம்பரமாக்கி மக்கள் மனதை மயக்கும் வணிக நிறுவனங்களையும், நாட்டுக்காக விளையாடுவதாகப் பசப்புக் காட்டித் தனக்காக விளையாடும்
ஆடகர்களையும் (PLAYERS) பலகோடிச் செல்வர்களாக உயர்த்துவதற்கு,
நடத்தப் பெறும் சூதாட்டமே மடலாட்டம் (CRICKET
MATCH) !
பணம் படைத்தவர்களின் இந்தப் பகடை ஆட்டத்தில் பலிகடா ஆக்கப்படுபவர்கள்,
ஆயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு விளையாட்டுத்
திடலில், “ஆகா ! என்னமாய் விளையாடுகிறான் பார் “
என்று வியப்புடன் கூவிக் கூச்சலிடும் நடுத்தர
மற்றும் அடித்தட்டு மக்களே ! மக்களை முட்டாளாக்கும் இந்த மதிமயக்குச் செயலுக்குத்
தான் நாட்டில் எத்துணை வரவேற்பு !
திரைக்குப் பின்னால் இருப்பவர்களைப் பலகோடிச் செல்வர்களாக (Multi-milliner) உயர்த்திடத் திரைக்கு முன்னால்
இருப்பவர்களை முட்டாளாக்கி ஏமாற்றிப் பணம் பறிக்கும் இன்னொரு சூதாட்டம் திரைப்படம்
!
ஒல்லிக் குச்சி நடிகனெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் ஐம்பது பேரை அடித்து
உதைத்து வெற்றி வீரனாக உலா வருவது போலக் காண்பித்து, எல்லோரையும் ஏமாற்றி வருவதை, வாய் பிளந்து
வியப்புடன் பார்த்து மகிழும் மக்கள் இருக்கும் வரை, அரசியலுக்கு வந்து உங்களது அவலங்களைத் துடைக்கப் போகிறேன் என்று பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் நடிகர்களின் எண்ணிக்கை பெருகிக்
கொண்டிருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை !
திரைப்படங்களையும் அவற்றை உருவாக்கும் திரைப்படத் துறையையும்
முற்றிலுமாக முடமாக்க வேண்டும்; இல்லையேல் அறிவாளிகள் எல்லாம்
முட்டாள்கள் ஆகும் நாள் விரைவாக வந்தே தீரும் !
நேர்மையற்ற அரசியல் ஈர்ப்புகள் மக்களை மடிமைப் படுத்தி, மடமையில் மூழ்க வைக்கும் இன்னொரு புறத் தூண்டல் ஆகும் ! அரசியல்
ஆளிநர் எல்லாம் கொள்ளைக் காரர்களாக மாறிக் கொண்டிருக்கும் இற்றை நாளில் மக்களை
மூளைச் சலவை செய்ய ஏதோதோ உளறுகிறார்கள் !
இந்த உளறல்களை எல்லாம் உண்மை என நம்பி மனதைப் பறிகொடுத்து, வெறிமையில் வீழ்ந்து வாழ்க்கையைத் தொலைக்கும் இளைஞர்களோ ஏராளம் !
ஏராளம் ! இளைய குமுகாயத்தை சிந்திக்க விடாமற் செய்து, முட்டாளாக்கிக் கட்சி வளர்க்கும் இந்த முறைமையை முதுகெலும்பு
ஒடித்துப் போட்டாலன்றி நம் நாடு முன்னேறப் போவதில்லை !
இன்னும் எத்துணையோ காரணிகள் ஈங்கு உள்ளன மனிதனைச் சிந்திக்க விடாமற் செய்ய ! விளக்கிட இடம் போதா !
நண்பர்களே ! சிந்தியுங்கள் ! சிந்தித்துச் செயல்பட்டால் உங்கள்
வாழ்க்கை வளமடையும் ! வினாக்குறிகள் உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்;
வியப்புக் குறிகள் உங்களை வீழ்த்திவிடும் !
-----------------------------------------------------------------------------------------
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி) 17]
{01-07-2022}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக