மது என்பது தன்னிடம் அகப்பட்டோரை மீளவிடாத உளைசேறு !
மது என்பது மனிதனை மயக்கிக் கொல்கின்ற ஒரு கொடிய
பிசாசு ! இறுகப் பற்றிக் கொள்கின்ற
சிலந்தி வலை ! மெல்ல மெல்லத் தன்னிடம் உள்வாங்கிக் கொன்றுவிடும் புதைமணல் !
அகப்பட்டோரை மீளவிடாத உளைசேறு !
இந்திய அளவில் 96 நிமிடத்துக்கு ஒருவர் வீதம்
மதுவுக்குப் பலியாவதாக தேசியக் குற்றப்பதிவுக் கணக்கீட்டுப் புள்ளி விவரம் தெரிவிக்கிறது ! இங்கு நடைபெறுகின்ற
பெரும்பாலான குற்றச் செயல்களுக்கு மதுவே காரணம் என்றும் இந்தப் புள்ளி விரத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது !
உலக அளவில் மது அருந்துவோர் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகையில் 16% என்றும் இதில் 11% பேர் இந்தியாவில் உள்ளதாகவும் இன்னொரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது
!
மதுவால் உயிர் இழப்போர் எண்ணிக்கையில் மராட்டிய மாநிலம் முதல்
இடத்திலும், மத்தியப் பிரதேசம் இரண்டாம் இடத்திலும்,
தமிழ் நாடு மூன்றாம் இடத்திலும் இருப்பதாக
வேறொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது !
மது அருந்தலாகாது என்று கூறிய அண்ணல் காந்தி பிறந்த நாட்டில்,
பீகாரைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இன்று
மதுவிலக்கு இல்லை ! நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்தப் இந்தப் பெருந்தகையின்
பேச்சுக்கு யாரும் மதிப்பு அளிக்கவில்லை !
ஊரெங்கும் காந்திக்குச் சிலை ! பணத்தாளில் காந்தி உருவம் ! நாடாளு
மன்ற இரு அவைகளிலும், சட்ட மன்றங்களிலும், அரசு அலுவலகங்களிலும்
காந்திக்குப் படம் ! அவரது பிறந்த நாள், இறந்த நாள்களில் சிலைகளுக்கும் படங்களுக்கும் மாலை அணிவித்துப் புகழஞ்சலி ! ஆனால் அவரது
கொள்கைகளின்படி மட்டும் நடக்க மாட்டோம் !
என்ன போலித் தனமான அரசியல் ! காந்தியின் முதன்மைக் கொள்கைகளான வாய்மை (சத்தியம்), கொல்லாமை (அஹிம்சை), மது அருந்தாமை ஆகிய அனைத்தையும்
துறந்து விட்டோம் ! அப்புறம் எதற்குக் காந்தி பிறந்த நாள் (காந்தி ஜயந்தி)
கொண்டாட்டமும், தேசிய விடுமுறையும் ?
தேசிய அளவில் இந்தியப் பேராயக் கட்சி (CONGRESS), பாரதிய சனதாக் கட்சி (B.J.P). சனதாக் கட்சி (JANATHA PARTY), ஆகியவை ஆட்சியில் இருந்திருக்கின்றன ! மாநில அளவில் ஆட்சியில் அமராத
பெருங் கட்சிகளே இல்லை ! ஆனால் எந்தக் கட்சியும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த
முன்வரவில்லை !
மது அருந்துவதால் எந்த
நன்மையும் கிடையாது; உடல் நலத்தைக் கெடுத்து, இறுதியில் உயிரையே குடித்து விடுகிறது ! அப்படிப்பட்ட மதுவை மாநில
அரசுகளே கடை விரித்து விற்பனை செய்து மக்களைக் குடிக்க வைப்பது அறநெறி தவறிய செயல்
அல்லவா ? மக்களைப் பார்த்து, வாருங்கள், வந்து மதுவை வாங்கிச் சென்று குடியுங்கள் என்று அழைக்கும்
விதமாக பல்லாயிரக்கணக்கில் மதுக் கடைகளைத் திறப்பதில் என்ன ஞாயமிருக்கிறது ?
மக்களின் நல மேம்பாட்டிற்கான திட்டங்களை வகுத்து நிறைவேற்ற வேண்டிய
மாநில அரசு, மக்களின் நலத்தைக் கெடுக்கும் வகையில்
மதுக்கடைகளைத் திறப்பதும், அங்கு மதுவை மக்களுக்கு விற்பதும் தான் நல்லாட்சி நடத்துவதற்கான அடையாளமா ?
ஒரு பக்கம் மக்களுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்து அவர்கள் உடல் நலத்தைக் கெடுத்து விட்டு,
இன்னொரு பக்கம் அவர்களுக்குப் பண்டுவம்
(சிகிச்சை) செய்திட இலவய மருத்துவ மனைகளைத் திறப்பது தான் ”ஆட்சி” என்பதற்கான இலக்கணமா ?
மாவட்டம் தோறும் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் திறப்பது எதற்காக ?
மதுக் குடித்துக் குடல் வெந்து போன ”குடிமக்களுக்கு”ப் பண்டுவம் செய்யப் புதிய புதிய
மருத்துவர்களை உருவாக்குவதற்காகவா ?
“குடி குடியைக் கெடுக்கும்” என்பதைத்
தெரிந்தே, ”குடி கெடுக்கும் செயல்”களில் மாநில அரசுகள் முனைப்பாக இயங்குவது ஒழுக்கம் தவறிய செயலாக
ஆட்சியில் இருப்போர்க்குத் தெரியவில்லையா ?
”மக்களுக்காக ஆட்சி, மக்கள் நலனுக்காக ஆட்சி” என்னும் கோட்பாட்டை மறந்து விட்டு மதுக்கடைகளைத் திறந்து மக்களையே
அழித்து வரும் மாபாதகர்களே ! உங்கள்
மனதில் இரக்கம் என்பதே இல்லையா ? முற்றிலுமாக வற்றிப் போய்விட்டதா ?
அறிவாளிகளும், அருளாளர்களும் அமர வேண்டிய ஆட்சிக்
கட்டிலில், அமர்ந்திருக்கிறோம் என்பதை ஒரு கணமாவது
சிந்தித்துப் பார்த்தீர்களா ? மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே
நமக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏன் மறந்து விட்டீர்கள் ?
அரசை நடத்துவதற்குப் பணம் தேவை என்பதற்காகத், தவறான பாதையில் செல்வது என்ன
ஞாயம் ? பணம் திரட்டுவதற்கு இன்னும் எத்தனையோ
தவறான பாதைகள் இருக்கவே செய்கின்றன. அந்தப் பாதைகளையும் திறந்து விடுவீர்களா ?
நல்லொழுக்கமும், நற்சிந்தனையும், நாட்டுப் பற்றும் இல்லாத மனிதர்களை எல்லாம் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்துவிடுகிறது நமது
அரசியல் அமைப்பு ! இத்தகைய குறைபாடுகள், நமது
மக்களாட்சிக் கோட்பாட்டையே குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது !
கரையான் புற்றெடுக்கக் கருநாகம் அதில் வந்து குடியேறியதைப் போல,
அண்ணல் அம்பேதகார் போன்ற அறிஞர்களால் உருவாக்கப்
பெற்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை வளைத்துக் கொண்டு, இன்று எல்லா மாநிலங்களிலும், தவறானவர்களே
ஆட்சிக் கட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறார்கள் !
அருமை தெரியாதவர்களின் கையில் அகப்பட்ட பூமாலை போன்று, மக்களாட்சி கோட்பாடு இன்று சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.
அவற்றுள் ஒன்று தான், மது விற்பனை செய்து அதில் கிடைக்கும்
வருமானத்தைக் கொண்டு ஆட்சி நடத்துகின்ற அவலம் !
மக்கள் நல ஆட்சி, ஒவ்வொரு மாநிலத்திலும், மக்களை மதிக்காத ஆட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த அழகில்,
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்; தேர்தலுக்குப்பின் ஒழுக்கமில்லாத இன்னொருவர் வந்து ஆட்சியில்
அமர்வதற்கு நாமெல்லாம் வாக்களிக்க வேண்டும் ! என்ன கோமாளித் தனமான அரசியல் !
மதுவிலக்குப்போன்ற எத்துணையோ நல்ல திட்டங்கள் உள்ளன. அவற்றைக் கொண்டு
வந்து நடைமுறைப்படுத்தத் துணிச்சல் இல்லாத அரசியல் வாதிகளைத் துரத்திட வேண்டும் !
நாடு உருப்பட, மக்கள் நலம் பெற நாம் இதைத் செய்திட
வேண்டும் !
எனவே, மதிநுட்பம் வாய்ந்த மக்களே ! இனி எந்தக் கட்சிக்கும் ஆதரவாக
அரசியல் பேசாதீர்கள்; அரசியல் கட்சி ஆளிநர்க்கு எந்தத்
தேர்தலிலும் வாக்களிக்காதீர்கள்; அரசியல் கட்சிக் கூட்டங்களுக்குப்
போகாதீர்கள்; அரசியல் வாதிகளின் பின் அணி வகுத்து நிற்காதீர்கள் !
அனைத்துக் கட்சி ஆதரவாளர்களும்
தங்கள் மீது படிந்திருக்கும் அரசியல் சேற்றைத் துடைத்துவிட்டு ஒதுங்கி
விட்டால், அரசியல் களம் துப்புரவாகிவிடும்.
அரசியல் சார்பற்ற அறிவாளிகளையும் வல்லுநர்களையும் ஆட்சியில் அமரச் செய்து
நல்லாட்சி நடத்திட நல்ல பாதையை அமைத்துத் தருவோம் !
-----------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சுரங்கம்”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, ஆடவை (ஆனி)
28]
{12-07-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக