விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 22 ஜூலை, 2022

சிந்தனை செய் தமிழா (71) புதிய மருத்துவக் கல்லூரிகள் !

அரசின் செலவில் உருவாக்கப்படும் மருத்துவர்கள்,  

தனியார் மருத்துவ மனைகளில் தஞ்சம் அடைகின்றனர்.


தமிழ்நாட்டில் அண்மையில் திறக்கப்பட்ட உதகமண்டலம்  அரசு மருத்துவக் கல்லூரி உள்பட மொத்தம்  34 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றனஅரசு உதவி பெரும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 3, தற்சார்பு (SELF FINANCING) தனியார் மருத்துவக் கல்லூரிகள் 16 என ஆக மொத்தம்  53 ஆங்கில முறை (ALOPATHY) மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன !

அரசின் சார்பில் கடைசியாகத் திறக்கப்பட்ட உதகமண்டலம் மருத்துவக் கல்லூரிக்கான   அடிக்கல்லை  முதலமைச்சர்  10-07-2020  அன்று காணொளிக்  காட்சி  மூலம்  நாட்டியுள்ளார் !

உதகமண்டலம் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்கள் உருபா 447 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளன. இதில் 60% செலவை நடுவணரசு ஏற்கிறதுஎஞ்சிய 40% செலவைத் தமிழக அரசு ஏற்கவுள்ளது !

கல்லூரி செயல்படத் தொடங்கியவுடன் ஒவ்வொரு ஆண்டும் அதற்கான தொடர்   செலவுகளை (ANNUAL RECURRING EXPENDITURE)த் தமிழக அரசு தான் செய்திட வேண்டும். மொத்தத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான தொடர்  செலவு (ANNUAL RECURRING EXPENDITURE) பல ஆயிரம் கோடி அளவுக்கு உயரப் போகிறது !

பல்லாயிரம் கோடி உருபாவைச் செலவு செய்துஐந்தரை ஆண்டுகள் பயிற்சி கொடுத்துஆண்டுதோறும் பல்லாயிரம் மருத்துவர்களை உருவாக்குகிறது தமிழக அரசுஇவர்களை எல்லாம் அரசு மருத்துவ மனைகளில் பணியமர்த்திடும் அளவுக்கு எத்துணை அரசு மருத்துவ மனைகள் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன ?

அரசின் செலவில் உருவாக்கப்படும் மருத்துவர்கள்தனியார் மருத்துவ மனைகளில் தஞ்சம் அடைகின்றனர்.  மிகக் குறைந்த ஊதியத்தைக் அவர்களுக்குக் கொடுத்துவிட்டுநோயாளிகளிடம் நிரம்பப் பணத்தைக் கறந்துசெல்வத்தைக் குவித்து வருகின்றன தமிழ் நாட்டில் இயங்கி வரும் தனியார் மருத்துவ மனைகள் !

இந்த இடத்தில்  ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி பல்லாயிரம் மருத்துவர்களை ஆண்டு தோறும் உருவாக்குவது தனியார் மருத்துவ மனைகளுக்குத் தாரை வார்க்கத் தானா ? தனியார் மருத்துவ மனைகளின் வளர்ச்சிக்கு அரசுப் பணத்தைச் செலவிட்டு மருத்துவர்களை உருவாக்கி அளிப்பது என்ன ஞாயம் ?

தமிழ்நாட்டில் ஈராண்டுகளுக்கு முன்பு 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வந்தனஇதுவே அதிகம். 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வெளியே வரும் மருத்துவர்களுக்கே அரசினால் வேலை கொடுக்க முடியவில்லைஇந்த அழகில்கடந்த ஈராண்டுகளில் மட்டும் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகளை அரசின் செலவில் தொடங்க வேண்டிய தேவை ஏன் வந்தது ? 

குமுகாயத்தில் மேல்தட்டில் உள்ள அரசியல்வாதிகள்இந்திய ஆட்சிப் பணிஇந்தியக் காவல் பணி அதிகாரிகள்,  வசதி படைத்த தனியார் மருத்துவர்கள்தொழிலதிபர்கள் மற்றும் கோடிச் செல்வர்கள் வீட்டுப் பிள்ளைகளை மருத்துவர் ஆக்குவது தான் தமிழக அரசின் நோக்கமா ? ஏழை எளிய நடுத்தர மக்களிடம் பெறும் வரிப்பணம் மேல்தட்டு மக்களுக்காகச் செலவிடப்படுவது  என்ன ஞாயம் ?

அனைத்துக் குமுகாய மக்களின் உயர்வுக்காகவே மாவட்டம் தோறும் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன என்று அமைச்சர்கள் பேசிவருகிறார்கள்சீறூரில் (கிராமத்தில்படிக்கும் ஒரு மாணவனையும்நகரத்தில் படிக்கும் ஒரு மேல்தட்டு மாணவனையும் கல்வித் தரத்தில் ஒப்பிட முடியுமா ? இரண்டு மாணவர்களின் மதிப்பெண்களும் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும் என்று சொல்ல முடியுமா ?

நகரத்தில் இருக்கும் மேல்தட்டு மாணவர்கள் +2 தேர்விலும், ”நீட்” என்னும் தகுதித் தேர்விலும் நிரம்ப மதிப்பெண்கள் பெற்றுமருத்துவப் படிப்புக்குத் தேர்வாகி விடுகின்றனர்சீறூர் (கிராமம்மாணவர்கள் அவர்களுடன் போட்டி போட முடியாமல் பின்தங்கி விடுகிறார்கள்இத்தகைய சூழ்நிலையால்மருத்துப் படிப்பில் சீறூர் (கிராமம்தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது !

சீறூர்களில் வாழும்வேளாண்குடி மக்கள்,   தச்சர்,   கொல்லர்,   நாவிதர்வண்ணார்குயவர்பத்தர் மற்றும் வேளாண் கூலித் தொழிலாளி ஆகியோர் வீட்டுப் பிள்ளைகளுக்கு மருத்துவப் படிப்பு என்பது இன்னும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது !

மக்கள் குமுகாயத்தில் 75% அளவுக்கு இருக்கும் இந்த மக்களைப் புறக்கணித்துவிட்டு எஞ்சிய 25% மேல்தட்டு நகர மக்களுக்களின் மேம்பாட்டுக்காக மருத்துவக் கல்லூரிகளைத் திறப்பதும்அவற்றை ஏழை எளிய மக்களின் வரிப்பணத்தில் இயக்குவதும் கொடுமையான தீய நடவடிக்கை ஆகும் !

மக்களுக்காக மக்களாட்சி என்னும் கோட்பாட்டிலிருந்து விலகி மேல்தட்டு மக்களுக்கான ஆட்சி என்று தடம் மாறிப் போய்க் கொண்டிருக்கிறது நம் ஆட்சி முறைமை !

ஆண்டு தோறும் அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு மூடு விழா நடத்திவிட்டுதனியார் பள்ளிகளுக்கு மறைமுகமாக உதவி வரும் அரசுகோடிக் கணக்கான ஏழை எளிய நடுத்தர மக்களின் வாக்கினைப் பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் மேல்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவதில் அக்கறை காட்டி வருகிறது !

மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கும்பின்பு அவற்றைத் தொடர்ந்து நடத்துவதற்கும் பல்லாயிரம் கோடிகளைச் செலவிட்டு வரும் அரசுஅந்தத் தொகையைத் திருப்பிவிட்டு  ஆற்றின் கரைகளில் செங்கற் பாளங்களால் (BRICK BLOGS) சறுக்கை (SLOPES) கட்டிஆற்றின் அகலம் குறுகாமல் காப்பதுடன்வெள்ளக் காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம் !

கிளை வாய்க்கால்களைத் தூர்வாரிஇருபுறமும் சறுக்கை கட்டலாம்ஆறுகளின் குறுக்கே பல இடங்களில் கதவணைகள் கட்டிவெள்ள நீர்  வீணாகாமல் தேக்கிப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம்நீர்நிலைகள் வாரியம் ஒன்றை ஏற்படுத்தித் தூர்ந்து போன ஏரிகுளங்களைத் தூர்வாரிஅவற்றில் நீரைத் தேக்கலாம் !

கொள்முதல் செய்த நெல்லைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க இடமில்லாமல்சாலையோரங்களிலும்திடல்களிலும் குவித்து வைத்துமழையால் நனைந்து கெட்டுப் போகும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்  தானிய சேமிப்புக் கிடங்குகளை நிறையக் கட்டலாம் !

ஏரி குளங்களில் சேமிக்கப்படும் நீரின் மூலம்கூடுதலான பரப்பில் கோடைக்காலப் பயிர் செய்கையை  ஊக்குவிக்கலாம்கோடைக் காலங்களில் மக்களும் கால்நடைகளும் குடிநீரின்றித் தவிக்கும் துன்ப நிலைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் !

நம் நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வேளாண்மையைச் சார்ந்தே  இருக்கிறதுஆனால் மாநில அரசு வேளாண்மையை மறந்துவிட்டுமாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகளை திறப்பதில் தான் அக்கறை காட்டுகிறது !

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும் (குறள்.448)

நல்லனவற்றை எடுத்துச் சொல்லத் துணிவில்லாத    ஆமாம்சாமி”  அமைச்சர்களையும்மூச்சுக்கு முந்நூறு தடவை ”மாண்புமிகு” என்னும் அடைமொழியைக் கிளிப்பிள்ளை போலச் சொல்லிக் கொண்டிருக்கும் அதிகாரிகளையும் வைத்துக் கொண்டிருக்கும் எந்த ஆட்சியாளரும்,  தானே கெட்டுப்   போவார்;    கெடுப்பதற்கு     வேறு     யாரும்  தேவையில்லை !

-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053,  கடகம் (ஆடி) 06]
{22-07-2022}

------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக