விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 23 ஜூலை, 2022

சிந்தனை செய் தமிழா (77) (மருதம்) இயற்கை வளங்களை அழிக்கலாமா ?

உணவுப் பொருள்களை விளைவிக்க  இயற்கையால் படைக்கப் பெற்ற  இடம் மருத நிலம் !

 

பண்டைத்  தமிழ் இலக்கியங்கள் இந்நிலவுலகின் மொத்தப் பரப்பையும்  நான்கு  வகைகளாகப் பகுத்துப் பேசுகின்றன என்பதைப் பகுதி (01) -இல் பார்த்தோம்.  மருதம் என்பது அவற்றுள் ஒன்று. வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் மருதம் என்று அழைக்கப்படுகிறது !

 

மனிதன் நிலத்தை பண்படுத்தித் தனக்கு வேண்டிய உணவுப் பொருட்களை விளைவித்துக் கொள்ளும் நிலப்பரப்புக்கு வயல் என்று பெயர்.  வயலைச் சுற்றிலும் வரப்புகள் அமைத்து நீர்ப் பாசன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு நெல் போன்ற உணவு தானியங்களைத் தொன்றுதொட்டு மனிதன் விளைவித்து வருகிறான் !

 

மருத நிலப் பகுதியை  நீர்ப்பாசன வசதியுள்ள வேளாண்  மண்டலம் என்றும்  வானவாரி வேளாண் மண்டலம் என்றும் இரண்டாக வகைப்படுத்தலாம் ! இற்றைத்  தமிழகத்தில் பெரும்பான்மை நிலப்பகுதி வயலும் வயல் சார்ந்த மருத நிலம் ஆகும் !

 

வேளாண்மை செய்வதற்கு  வளமான நிலமும் போதுமான நீரும் அடிப்படைத் தேவைகள் ஆகும் ! நிலத்தின் வளத்தைப் பெருக்குவதற்கு நிலத் திணைகளின் (தாவரங்களின்) இலை தழைகளும், ஆடு மாடு போன்ற கால்நடைகளின்  கழிவுகளும் பெரிதும் பயன் படுகின்றன. இயற்கையில் கிடைக்கும் இவை நிலத்தை  வளப்படுத்துகின்றன !

 

அரை நூற்றாண்டுக் காலமாக  நிலத்திற்கு உரமாக வேதிப்பொருட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. தொடக்கத்தில் இத்தகைய உரங்கள் விளைச்சலை ஊக்குவித்தாலும், காலப்போக்கில் இவை   வளத்தைச் சீர்குலைத்து நிலத்தை மலடாக்கி விட்டன !

 

நிலவளம் கெட்டுப் போனதற்கு வேதி உரங்களும் (CHEMICAL FERTILIZERS) வேதிப் பொருள்களான பூச்சி  மருந்துகளுமே காரணம். வேதி உரங்கள் நிலத்தில் படிந்துள்ள நன்மை தரும் நுண்ணுயிரிகளைக் கொன்று விடுகின்றன. இதனால் இலை, தழை, சருகு போன்ற  நிலத் திணைக் கழிவுகளை மக்கச் செய்து  எருவாக மாற்றிக் கொள்ளும் தன்மை நிலத்திற்குக் குறைந்து போய் விடுகிறது !

 

பூச்சி மருந்துகளால், பயிர்களுக்கு நன்மை விளைவிக்கும் சிலந்திபோன்ற இனங்கள் அழிந்து போகின்றன. பயிர்களைத் தாக்கும் வெட்டுக்கிளி, பொறி வண்டுகள், இலைச் சுருட்டுப் புழு, ஆனைக்கொம்பன் ஈ , தண்டு துளைப்புழு போன்றவற்றை  பயிர்ச் சிலந்திகள் பிடித்து உண்பதால் பயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால் பூச்சி மருந்துகள் வழக்கிற்கு வந்த பிறகு பயிர்ச் சிலந்திகள் அழிந்து விட்டதால், பயிர்கள் பூச்சிகளால் தாக்கப்பட்டு, விளைச்சல் குறைந்து விட்டது !

 

நச்சுத் தன்மையற்ற சாரை போன்ற பாம்புகளும் கூட அவற்றின் தோலுக்காகப்   பிடிக்கப்பட்டதால், எலிகள் பெருகிவிட்டன. எலிகளை உண்டு வாழும் ஆந்தை, கோட்டான், பருந்து போன்ற பறவை  இனங்கள் பூச்சி மருந்துகளால் அருகிப் போய்விட்டன. வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளை பிடித்து உண்ணும் கரிச்சான் குருவிகளும் சிட்டுக் குருவிகளும்  காணாமற் போவிட்டன. பூச்சி மருந்துகள் பூச்சிகளைக் கட்டுப் படுத்துவதற்கு மாறாக, வேளாண் பெருமக்களுக்கு நன்மை செய்யும் பறவை இனங்களை அருகச் செய்துவிட்டன !

 

வயலும் வயல் சார்ந்த இடங்களுமான மருத நிலத்தில் இக் காலத்தில் வேளாண் பயிர்களை  நட்டுப் பயிராக்குவது ஆதாயம் தரும் தொழிலாக இல்லாமற் போய்விட்டது !

 

வேளாண் பயிர்களுக்கு முகாமையான அடுத்தத் தேவை தண்ணீர்.  தண்ணீர் தரும் மூலங்களான ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகள் தூர் வாரப் படாமல் ஆழம் குறைந்துபோய்விட்டன. தமிழ் நாட்டை ஆண்ட பண்டைய மன்னர்கள்  ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளை நாடெங்கும் நிரம்பவும் ஏற்படுத்தினர் . அண்மைக் காலங்களில் இந்த நீர் நிலைகள் எல்லாம் தூர்க்கப்பட்டு கட்டட மயமாகி விட்டன !

 

நீர்நிலைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இருக்கும் நீர்நிலைகளின் கரையோரங்களில் நிகழும் வலிப்பற்றினால் (ஆக்கிரமிப்பு) அந்த நீர் நிலைகளின் பரப்பளவும் சுருங்கிக் கொண்டே வருகின்றது. ஆட்சியில்  இருப்போர்  கண்களுக்கு இவையெல்லாம் தெரிந்தும் சொந்த ஆதாயம் கருதிக் கண்களை இறுக  மூடிக் கொண்டிருக்கின்றனர் !

 

ஆற்றுப் பாசனம் உள்ள இடங்களில், நீர்த் தட்டுப்பாட்டினல் வேளாண்மை செய்யும் பரப்பளவு ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் பாய்ந்து நீர்வளம் பெருக்கும் ஆறுகள் காவிரி, தென்பெண்ணை, தாமிர பரணி, அமராவதி, நொய்யல், போன்றவை. இவற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்துவிட்டதால் இந்த ஆறுகளில் ஓரிரு மாதங்கள் மட்டுமே நீர்வரத்து இருக்கிறது !

 

காடுகள் அழிக்கப் பட்டதாலும், ஆறுகளின் தோற்றுவாய் அமைந்துள்ள மாநிலங்களின் பேராசையாலும், இவ்வாறுகளில் நீர் வரத்து ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது !

 

ஆற்றுப் படுகைகளில் படிந்து இருக்கின்ற மணல், பஞ்சு மெத்தை போன்றது. இந்த மணல் படிவுகளின் பருமன் (THICKNESS) பல அடி ஆழத்திற்கு இருக்கும்.  ஆற்று மணலை அள்ள அள்ள, ஆற்றின் நீர்மட்டம் தாழ்ந்து போவதால்  கிளை வாய்க்கால்களில் தண்ணீர் ஏறிச் செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது. விளை நிலங்களுக்கு இதனால் தண்ணீர் போய் சேருவது தடைப்படுகிறது !

 

நீரோட்டம் இருக்கும் போது,  ஆற்றுப் படுகைகளில் இருக்கும் பல அடி பருமன் உள்ள  மணல்  படிவுகள், ஆற்று நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். இதனால் நிலத்தடி நீர்மட்டம்  உயர்வதுடன்  கோடைக் காலங்களில் ஆற்றுக்கு இருபுறமும் உள்ள ஊர்களில் உள்ள கிணறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில், நீர் மட்டம் குறையாமல் இருக்கும் !

 

பேராசை பிடித்த மனிதர்கள் ஆற்றுப்படுகைகளில் படிந்துள்ள மணலை  தும்பியூர்தி (BOKELINE ) கொண்டு பல அடி ஆழத்திற்குத் தோண்டி அள்ளிச் செல்கின்றனர். இதனால்  இந்த மணல் படிவின் பருமன் குறைந்து போவதால்  நீரை உறிஞ்சித் தேக்கி வைத்துக் கொள்ளும்  ஆற்றலை இது  பெருமளவுக்கு இழந்து விடுகிறது.  மணல் படிவுகளின் இந்த  ஆற்றல் இழப்பு நிலத்தடி நீர்மட்டத்தை மிகு ஆழத்திற்குக் கொண்டு போய் விடுகிறது !

 

இதன் விளைவாக ஆற்றுக்கு இருபுறமும் உள்ள ஊர்களில் நீர்நிலைகள், கோடைக்காலங்களில் வற்றிப்போய் விடுகின்றன.  குடிநீர்ப் பஞ்சம்  ஏற்படுகிறது.  காலநடைகளுக்குப்  போதுமான நீர் கிடைப்பதில்லை. கோடைப் பயிர் விளைச்சல் கனவாகிப் போய்விடுகிறது !

 

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்றார் வள்ளுவர்.  உழவுத் தொழிலில் இருக்கும் நெருக்கடிகளை எண்ணி, வேறு வேறு தொழிலுக்குச் சென்றாலும் உலக மக்கள் தமது உணவுக்காக உழவனைச் சார்ந்தே இயங்க வேண்டி இருக்கிறது. உழவன் இல்லையேல் உணவு கிடையாது. அதனால் எத்தனைத் துன்பங்கள்  இருந்தாலும் உழவுத் தொழிலே முதன்மையானது என்பது இக்குறளின் பொருள் !

 

இத்துணை உயர்வான வேளாண்மையை முற்றிலும் அழிக்கும் வண்ணம், விளை நிலங்களை எல்லாம் வீட்டு மனைகளாக்கி  விற்றுப் பணம் பண்ணும் கூட்டம் பெருகி வருவதும், அரசே அதற்குத் துணையாக இருப்பதும்  கடுமையான மனத் துன்பத்தை  அளிக்கிறது !

 

இப்படிக் கோணல் சிந்தனை கொண்டு பணம் சேர்க்கும் கூட்டத்தைப் பார்த்து ஔவையார் பாடியபடி கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் ! கூடு விட்டு ஆவிதான் போன பின்பு யாரே அனுபவிப்பார், பாவிகாள் இந்தப்  பணம்என்று கேட்கத் தோன்றுகிறது !

 

நேர்மைக் குணமும் உயரிய கோட்பாடும் இல்லாத மனிதர்கள் வயலும் வயல் சார்ந்த பகுதிகளுமான மருத நிலத்தைப் பாழ்படுத்தி வருகிறார்கள் ! இத்தகைய கேடு கெட்ட மாந்தர்கள் திருந்தாவிட்டால், உலக மக்கள் உணவின்றி  மடிந்து போகும் காலம் விரைவில் வந்தே தீரும் !

 

--------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 07]

{23-07-2022}

--------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக