தமிழா ! திரையுலக மின்மினிகளின் பின் அணி வகுப்பது ஏன் ?
தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்று நமக்கு உணர்ச்சியூட்டப் பார்த்தார் ஒரு தமிழ்க் கவிஞர். இந்த அறைகூவலால் நாம் விழித்துக் கொள்வோமா என்ன !
விலங்குகளுக்குச் சிந்தனைத் திறன் கிடையாது. மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான தனிச் சிறப்பு அது. ஆனால் இன்று எத்துணைத் தமிழர்களிடம் சிந்திக்கும் பண்பு இருக்கிறது ? சற்று ஆய்வு செய்வோமா !
ஒரு திரைப்படத்தில் நடிக்க
ஒரு முன்னணி நடிகருக்கு ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஆகிறது. அதற்கு அவர் பெறும் ஊதியம் 60 கோடி உருபா. இதைப் பகுத்துப் பார்த்தால் அவரது ஒரு நாள் ஊதியம் 66 இலட்சத்து, 66 ஆயிரத்து, 666 உருபா ஆகிறது . அவரது ஒரு நாள் வருமானம் முழுமையாகப் பார்த்தால் 67 இலட்சம் உருபா !
கோடிச் செல்வராக விளங்கும் இந்த நடிகரின்
படத்தைத் திரையரங்கிற்குச் சென்று பார்ப்பதால்
தனக்குக் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று எந்த ஏழைத் தமிழனாவது சிந்திக்கிறானா ?
கைக்காசைப் போட்டல்லவா நுழைவுச் சீட்டு
வாங்கித் திரைப்படம் பார்க்கிறான் !
யாரோ ஒரு நடிகர் கோடிகளைக் குவிக்க, கறுப்புப் பணத்தில் குளிக்க, தான் ஏதோவொரு வேலைக்குச் சென்று ஒரு நாள் வருமானமாகக் ஈட்டும்
சொற்பத் தொகையையும் இழந்து, சேமிப்பாக வைத்திருந்த கைக்காசையும் இழந்து அவரது திரைப் படத்தை நான்
ஏன் பார்க்க வேண்டும் என்று எந்தத்
தமிழனாவது சிந்திக்கிறானா ? இல்லையே !
அரசியலில் பெரிய கட்சி, சிறிய கட்சி,
பெயரளவுக் கட்சி, என்று தமிழக அரசியல் களத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சிகள்
இருக்கின்றன. இந்த
நிலையில் திரைப்பட நடிகர்கள் மூன்று பேர் புதிய கட்சி தொடங்கி,
மக்கள் முன் தங்கள் நடிப்புத்
திறமையைக் காண்பித்து, தேர்தலில் வாக்குக் கேட்டு வீராவேசமாக உரையாற்றி வந்தார்கள் !
தேர்தல் முடிவு அவர்களைச் செல்லாக் காசு
என்று பறை சாற்றிவிட்டது. விசயகாந்த் கட்சி இருக்குமிடம் தெரியவில்லை; கமலகாசனின்
கட்சி, கட்டெறும்பாகப் போய்விட்டது. சீமானின்
கட்சி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களிடையே சல்லிக் காசுக்குக்
கூட மதிப்பில்லாமற் போயிருக்கிறது ! இன்னும் சிலர் திரைத் துறையில்
மதிப்பிழந்து போகும் போது அரசியலுக்கு வருவதற்குத் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நடிகர்களின்
நோக்கம் தான் என்ன ? திரைப்படங்களில் நடித்து வந்த போது புகழ்
வெளிச்சத்தில் புளகாங்கிதம் அடைந்து வந்த இந்த பொய்மான்கள், திரைத் துறையில் சரிவைக்
காண்கையில் அரசியலில் இறங்கி மீண்டும் புகழ் வெளிச்சத்தில் நீச்சலடிக்க எண்ணுகிறார்கள்
!
திரைப்படத்தில் நல்லவர்களாக நடித்து மக்களை அதை உண்மை என்று நம்ப வைத்த இந்த “மாரீச மான்”களுக்கு மக்களைப் பற்றிய கவலை துளிக்கூட இல்லை. பொருளாதாரம் பற்றி சிறு புள்ளியளவு கூட ஞானம் இல்லாத இந்த புங்கம் பூக்களுக்கு மக்கள் முன்னே மீண்டும் “அரசியல் மேடை”களில் நடித்துப் புகழ் பெறவேண்டும் – ஊடகங்களில் அன்றாடம் பேசு பொருளாக வேண்டும் – என்னும் பேரவா – வீணவா – வேறொன்றுமில்லை !
காலமெல்லாம் கருப்புப் பணத்தில் நீராடி, கனவுலகத்தில் கோட்டை கட்டி
வாழும் இந்தக் காக்கைக் குஞ்சுகளின் பின்னால் அணி திரள்வதற்கு தமிழ்க்குலம்
வெட்கப் பட வேண்டாவா ?
யாரோ ஒரு ஏமாற்று நடிகர், அரசியலில் சொலிக்க,
அதன்மூலம் தன்னிடம் குவிந்து கிடக்கும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற
நாம்
ஏன் அவர் பின்னால்
அணிதிரள வேண்டும் – அவருக்காக உழைக்க வேண்டும் என்று எந்தத் தமிழனாவது
சிந்திக்கிறானா ? இல்லையே !
சிந்திக்கத் தெரியாத தமிழனைப் பார்த்து தமிழனென்று சொல்லடா ! தலைநிமிர்ந்து நில்லடா ! என்று சொல்வது தவறல்லவா ? அதனால்தான் சொல்கிறேன், தமிழனென்று சொல்லாதே ! இனி தலைநிமிர்ந்து நில்லாதே !
------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 19
{02-04-2022}
---------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக