விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 2 ஏப்ரல், 2022

சிந்தனை செய் தமிழா (05) நடிகனைக் கடவுளுக்கு நிகராகத் தொழுவது ஏன் ?

 

தமிழா ! நடிகரின்  அட்டையுருவுக்குப் பால் முழுக்காட்டிச் சூடம் காண்பிப்பது  அறிவார்ந்த செயலா ?

 

                 

வீட்டிற்கு உள்ளும் புறமும் தமிழிலேயே பேசி, தமிலேயே சிந்தித்து வாழ்க்கை நடத்தும் அத்துணை பேரும் - தமிழ் நாட்டில்  வாழ்ந்தாலும்,  வேறு மாநிலங்களில் வாழ்ந்தாலும்,  அயல்நாட்டில் வாழ்ந்தாலும் -  மொழியால் தமிழர்களே !

 

இத்தகைய தமிழர்களில் உறுதியான வருமானம் பெறும் அரசுப் பணி, தனியார் பணிகளில் நிலையாக அமர்வு பெற்றுள்ளோர் நான்கு விழுக்காடு அளவே. சிறு, குறு மற்றும் பெருந்தொழில் தொடங்கி நடத்தி வருமானம் ஈட்டுவோர் ஆறு விழுக்காடு அளவுக்கு இருக்கலாம். எஞ்சிய தொண்ணூறு விழுக்காட்டுத் தமிழர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்கு, வேளாண்மை மற்றும் அன்றாடக் கூலி வேலைகளையே சார்ந்து இருக்கின்றனர் !

 

உழைத்தால் தான் அன்றாடம் வயிற்றுப் பசி தீரும் என்ற நிலையில் உள்ள விளிம்பு நிலைக் குடும்பங்கள் தமிழகத்தில் கோடிக்கணக்கில் இருக்கின்றன.. ஆனால் இத்தகைய மக்களைத் திரைப்படம், மதுப்பழக்கம், தொலைக்காட்சி, அரசியல் ஆகியவை சிந்திக்க விடாமல் தனக்கு அடிமைப் படுத்தி வைத்துள்ளன !

 

உழைத்துச் சம்பாதித்துக் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ள மக்களை, திரைப்பட மயக்கம் மடிமையாளர்களாக (சோம்பேறிகளாக) மாற்றி விட்டது. திரைப்படத்தை அரங்கத்திற்குச் சென்று பார்ப்பதற்காக தனது கைப்பணத்தைச் செலவிடுகிறான் கவலையில்லாத் தமிழன். நடிகர்களின் அட்டை உருவுக்கு (Cut-Out) ஒப்பனை செய்து, தோரணம் கட்டி, பால் முழுக்காட்டி, சூடம் ஏற்றி வழிபடுகிறான் சுரணை இழந்த தமிழன் !

 

நடிகருடன் சேர்ந்து நின்று ஒளிப்படம் (Photograph) எடுத்துக் கொள்ள நெடுந்தொலைவு ஊர்களிலிருந்தும் சென்னை நோக்கிப் பயணிக்கிறான் இளமைத் துடிப்பில் இருக்கும் இற்றைத் தமிழன். படம் எடுத்துக் கொண்டால், புதையல் கிடைத்துவிட்டதைப் போல புளகாங்கிதம் அடைகிறான் தன் கைக்காசு செலவானதைக் கருத்தில் பதிக்காத காளைத் தமிழன் !

 

நடிகர்களுக்குக் காசு ஒன்றுதான் குறிக்கோள். அதற்காக அவர்கள் திரைப்படத்தில் எதை வேண்டுமானாலும் காண்பிப்பார்கள். நோஞ்சான் நடிகன் நூறு பேரை   அடித்து வீழ்த்துவதாகக் காண்பிப்பார்கள். அதை இந்த ஏமாளித் தமிழன் வாயைப் பிளந்துகொண்டு வக்கணையாகப் பார்த்து மெய் சிலிர்ப்பான் !

 

இல்லத்து மகளிருடன் இணைந்து சென்று எந்தப் படத்தையும் பார்க்க முடியாத அளவுக்கு ஓடியம் (ஆபாசம்) உச்சத்தில் இருக்குமாறு காட்சிகளை அமைத்து, காசுகளை வாரிக் குவித்திடுவான் கதையின் தலைமாந்தனான நடிகன். அதையும் சூடு சுரணையின்றிப் பார்த்து நடிகனுக்கு நலங்கு பாடி வாழ்த்துரைக்கிறான் நாகரிகம் மறந்த இற்றைத் தமிழன் !

 

களவாணித் தனம் பண்ணுவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கும் கல்விச் சாலையாகிவிட்டது திரைப்படங்கள். சான்றுகளை விட்டு வைக்காமல் கொலை செய்வது எப்படி என்பதை குறிப்பாக விளக்கும் காட்சிகள் அமைந்த படங்கள் புற்றீசல்களாக வெளிவந்து தமிழ்க் குலத்திற்கு நச்சுச் சாற்றினை நாள்தோறும் புகட்டிக் கொண்டிருக்கின்றன !

 

நல்லனவற்றை மறைத்துவிட்டு, தீயனவற்றை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டும் திரைப்படங்கள் நடிகர்கள் மூலமாக நமக்குச் சொல்லிக் கொடுக்கும் பாடங்கள் நச்சுக் கனிகள் என்பதை இந்தத் தமிழ்க்குலம் உணராமல் விழிகளை மூடிக் கொண்டிருப்பது வெட்கக் கேடான செயலல்லவா ?

 

தருவது அனைத்தும் நச்சுக் கருத்துகள், நச்சுக் காட்சிகள் என்னும் போது, கதைத் தலைவனாக நடிக்கும் களவாணிகளுக்கு விண்முட்ட அட்டையுரு வைத்து, அதற்குப் பால் முழுக்காட்டி, சூடம் காட்டும் முட்டாள்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கையில், தன்னிலை மறந்து திரியும்  தமிழ்க் குலத்தை என்னவென்று சொல்வது ?

 

தமிழக மக்களை - குறிப்பாக இளைஞர்களை - திரைப்படத் துறை தனது மாய்மாலங்களால் மயக்கி, மடிமையாளர்களாக (சோம்பேறிகளாக) மாற்றிவிட்ட கொடுமையை எந்தத் தமிழனாவது சிந்தித்துப் பார்க்கிறானா? கறுப்புப்பணத்தில் குளிக்கும் நடிகர்களுக்காக, ஆர்வலர் மன்றங்களை  (ரசிகர் மன்றங்களை) அமைத்து, தனது சிவப்புப் பணத்தை (அரத்தம் சிந்தி உழைத்த பணம்) விரயமாக்கும் சீரிழந்த தமிழர்களை எண்ணுகையில், தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று சொல்வது பிழையல்லவா?

 

எனவேதான் சொல்கிறேன் தமிழ் மண்ணில் வாழும் மானிடனே, நீ  தமிழனென்று சொல்லாதே ! இனி தலைநிமிர்ந்து நில்லாதே !

 

----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 19]

{02-04-2022}

-----------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக