தமிழன் என்ற உணர்வு நமக்கு எப்போது வரப் போகிறது?
------------------------------------------------------------------------------------
பறவைக் கூடுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்
.ஒருநாள், கூட்டில்
இருக்கும் குஞ்சுகளைப் பிடிப்பதற்கு ஒரு மனிதர் மரத்தில் ஏறுகிறார். எங்கிருந்தோ
இதைக் கவனித்த தாய்ப் பறவை விரைந்து வந்து அவரைத் தாக்குகிறது. ஏன் இந்த நிகழ்வு ?
சாலையில் உருளியை (Cycle) ஓட்டிச் சென்ற தன் மகன் கீழே விழுந்து
விட்டதைக் கவனித்த தாய் ஓடி வந்து அவனைத் தூக்கி விட்டு, ஏதாவது
அடிபட்டு விட்டதா என்று விசாரிக்கிறாள். எதற்காக இந்த அக்கறை ?
இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணம் ”பற்று” (பாசத்தின் மறு பெயர் தான்
பற்று). பறவைகளிடமும்
விலங்குகளிடமும் காணப்படும் இந்த “பற்று” சில மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் வரை
நீடிக்கிறது. குஞ்சுகள் பறக்கக் கற்றுக் கொண்டபின், தாய்ப்பறவை
தன் அன்றாடப் பணிகளைக் கவனிக்கத் தொடங்கிவிடுகிறது.. குஞ்சைப் பற்றிக் கவலைப்
படுவதில்லை. விலங்குகளும் அப்படித்தான் !
ஆனால் மனித இனத்தில் காணப்படும் இந்த “பற்று” எத்தனை
ஆண்டுகள் ஆனாலும் விலகாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அறுபது அகவயைக் கடந்தாலும்
கூட, தாய்க்கும் பிள்ளைக்கும் இடையிலான இந்த
பற்று அற்றுப் போவது இல்லை. இந்தப் “பற்று” தான் குடும்பங்களைச் சிதறவிடாமல் இன்றளவும்
கட்டுக்குள் வைத்திருக்கிறது. ““என்”, “எனது” ,”என்னுடைய” என்ற பற்று
தான் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. ”பற்று” இல்லாதவன்
மனிதனே இல்லை ! விலங்கு !
ஒருநாள் நான் சாலையில் சென்று கொண்டு
இருந்தேன். பின்புறம் இருந்து வந்த சரக்குந்து (Lorry) ஒன்று, நான் அணிந்திருந்த சட்டை மீது, சேற்றை வாரி இறைத்து விட்டுப் பறந்து
விட்டது,. சரக்குந்தின் வலவர் (Driver) மீது எனக்குக் கடுமையான சினம். அவரைத்
திட்டித் தீர்த்துவிட்டேன் – காரணம் – அது “என்னுடைய
சட்டை” என்ற “பற்று” !
முருகையன் வீட்டுச் சுவரின் மீது, சாலையில் சென்ற மாட்டு வண்டி ஒன்று
மோதியதால், சுவரில் சிறு பழுது ஏற்படுகிறது. இப்பொழுது
முருகையனுக்குக் கோபம் வருகிறது – காரணம் – இது “என் வீட்டுச்
சுவர் “ என்ற அவரது “பற்று” !
சிந்துவின் பேடுருளியை (Moped) தவறுதலாகக் கீழே தள்ளி விட்டதால், மாசிலாமணி மீது அவளுக்குக் கோபம் வருகிறது – காரணம் ”இது என்னுடைய
வண்டி“ என்ற அவளது பற்று !
இவை எல்லாம் பொருளியல் சார்ந்த “பற்று”. உளவியல் சார்ந்த “பற்று”ம் உண்டு !
நண்பர் ஒருவர் தன் மகனுடன் கடைக்குச்
செல்கிறார். கடைக்காரர் நண்பரின் மகனைப் பார்த்து “ டேய் தம்பி !
எதையும் தொடாதே ! தள்ளி நில் ! “ என்கிறார்.
மகனைக் கடிந்துகொண்ட கடைக்காரர் மீது நண்பருக்குக் கோபம் வருகிறது – காரணம் – “ என் மகன் “ என்ற அவரது “பற்று” !
தமிழ் மணியின் நண்பருக்கும், மூன்றாவது தெருக் காரருக்கும் சிறு பூசல். தமிழ்மணியின் நண்பர் பக்கம் நியாயமே இல்லை. இருந்தாலும் தமிழ்மணி தனது நண்பருக்கு ஆதரவாக நிற்கிறார் – காரணம் நண்பர் “எனது தெருக்காரர்” என்ற பற்று !
மாதவன் ஊர்க்காரர்களுக்கும் அவரது பக்கத்து
ஊர்க்காரர்களுக்கும் கோயில் திருவிழா தொடர்பாக ஒரு சச்சரவு எழுந்தபோது, தனது ஊர்க்காரர்கள் சொல்வது சரியல்ல என்று
தெரிந்த போதும் மாதவன் தனது ஊர்க்காரர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் – காரணம் “எனது
ஊர்க்காரர்கள்” என்ற பற்று !
சிவாவின் சொந்த மாவட்டத்தை சேர்ந்த கவடி
அணிக்கும் ( கபடி அல்ல கவடி என்பதே சரி) வேறொரு மாவட்ட அணிக்கும் இடையில்
விளையாட்டுப் போட்டி நடந்த போது சிவா தனது மாவட்ட அணிக்காகக் கடுமையாக உழைத்தார் – காரணம் “எனது மாவட்ட
அணி” என்ற பற்று !
செம்பியனுக்கு மும்பையில் பணி. மராட்டிய
மாநிலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பஞ்சாபைச்
சேர்ந்த சிலரும் அரத்தக் காயம் அடைந்தனர். நிகழ்வைக் கண்ணுற்ற செம்பியன் ஓட்டோடிச்
சென்று தமிழ் நாட்டைச் சேர்ந்த
பயணிகளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார் – காரணம் “எனது மாநிலத்துக்காரர்கள்” என்ற பற்று !
அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு வாதுரைப்
போட்டியில் (Debate) கல்கத்தாவைச்
சேர்ந்த ஒருவரும் மலேசியாவைச் சேர்ந்த ஒருவரும் பங்கேற்றனர். கல்கத்தாக்காரர்
வாதிடும்போதெல்லாம் அங்கிருந்த தமிழர்கள்
பலத்த கரவொலி எழுப்பி அவரை உற்சாகப் படுத்தினர் – காரணம் அவர் “எனது நாட்டவர்” என்ற பற்று !
கார்கிலில் பாகித்தானியர் (பாகிஸ்தானியர்) நிலப் பிடிப்பு
செய்த போது இந்தியர்கள் அனைவரும் இந்திய நாட்டுக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டனர் – காரணம் இந்தியா “எனது நாடு” என்ற பற்று !
கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற ஒரு
கருத்தரங்கில், மொழிகளின் ஆளுமை என்ற தலைப்பில் சொற்பொழிவு
நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வியாளார்கள் பலர் அந்த அரங்கத்தில் குழுமி
இருந்தனர். இந்தி மொழி பேசும் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பேசும்போது இந்தியை
உயர்வாகவும் தமிழைத் தாழ்த்தியும் பேசினார் !
இந்தி உலகளாவிய மொழி. தமிழ், ஒரு மாநிலத்திற்குள் சுருங்கிவிட்ட மொழி.
இந்தி 6 மாநிலங்களில் ஆட்சி மொழி. தமிழ் ஒரு மாநிலத்தில்
மட்டுமே ஆட்சி மொழி. இந்தியாவில் அனைத்து மக்களுமே இனி இந்தி படித்தாக வேண்டும். குழந்தைகளுக்கு
இந்திப் பெயர்களையே வைக்க வேண்டும். இந்தி படிக்காவிட்டால், எதிர்கால இந்தியாவில் உங்களுக்கு இடமில்லை.
இந்தியாவின் ஆட்சி மொழியான இந்தியை யார் ஏற்க மறுத்தாலும் அவர்கள் எல்லாம் தேசத்
துரோகிகள் என்றெல்லாம் அவரது பேச்சு அமைந்திருந்தது !
அவரது பேச்சுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த
கல்வியாளர்கள் யாருமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவர்களில் சிலர் இந்திக்கு
ஆதரவான கருத்துக்களைத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இந்தக் கல்வியாளர்கள்
எல்லாம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் !
பொருளியல் சார்ந்த பிரச்சினைகளான ”சட்டை”, ”சுவர்,” ”பேடுருளி” தொடர்பான நிகழ்வுகளில் “என்”, “எனது” “என்னுடைய” என்ற “பற்று” நமது
உடன்பிறப்பான தமிழ்க்குடி மக்களிடமிருந்து வெளிப்பட்டது !
உளவியல் சார்ந்த பிரச்சினைகளான ”மகன்”, “தெரு”, “ஊர்”, “மாவட்டம்”, ”மாநிலம்”, “நாட்டவர்”, “நாடு”, தொடர்பான நிகழ்வுகளில் “என்”, “எனது”, “என்னுடைய” என்ற ”பற்று” நமது தமிழ் மக்களிடமிருந்து வெளிப்பட்டது !
ஆனால் அதே உளவியல் சார்ந்த பிரச்சினையான “தாய்மொழி” தொடர்பான
நிகழ்வில் மட்டும் “என் தாய்மொழி” என்ற “பற்று” ஏன்
வெளிப்படவில்லை.? எல்லா நிகழ்வுகளிலும் “என்”, “எனது”, “என்னுடைய” என்ற ”பற்றினை” வெளிப்படுத்தும்
தமிழன், “மொழி”ப் பிரச்சினை
என்று வரும்போது மட்டும் ”பற்று” இல்லாத ”ஜடமாக” நடந்து
கொள்வது ஏன் ?
பக்தி உணர்வைத் தூண்டி விட்டு, தமிழனைத் தன் வயப்படுத்தி கோயில்களில்
இருக்கும் கடவுள் பெயர்களை எல்லாம் சமற்கிருதப் பெயர்களாக மாற்றி விட்டனர் !
பெயரியல் சாத்திரம் (சாஸ்திரம்) என்ற பெயரில், பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்பப் பெயர்
வைக்க வேண்டும் என்று சொல்லி, பிறக்கும்
குழந்தைகளுக்கு எல்லாம் தமிழில் பெயர் வைப்பதைத் தடுத்து வருகிறது ஒரு ஏமாற்றுக்
கூட்டம். இதற்குப் பலியாகி வருகிறது தமிழர்களின் ஊட்டம் !
ஒரு பக்கம் ஆங்கிலம் நெட்டித் தள்ளுகிறது.
மறு பக்கம் இந்தி இடித்துச் சாய்க்கிறது. இடையில் அகப்பட்டுக் கொண்டு தமிழ்
தவியாய்த் தவிக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம் ? மொழிப்
பிரச்சினையில் மட்டும் “பற்று” அற்றவர்களாக
உணர்வில்லாத பிண்டமாக உலா வரும் நாம் தானே
?. நமக்கு எப்போது தமிழ் மீது “பற்று” வரப் போகிறது ? எப்போது நமக்கு தமிழன் என்ற உணர்வு வரப்
போகிறது ?
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 01]
{15-05-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக