தாயிடமிருந்து மரபணு வாயிலாகக் குழந்தைக்குக் கிடைக்கும்
செல்வமே தாய்மொழி !
மொழி என்பது, மனிதன் தனது
எண்ணத்தை வெளிப்படுத்துவதற்கு உதவுகின்ற ஒரு கருவி. இதில் தாய்மொழி; அயல் மொழி என இரண்டு வகை உண்டு !
தாய், தந்தை மற்றும்
முன்னோர்களின் பண்பு, நிறம், உருவ அமைப்பு, குறிப்பிட்ட சில வல்லமை, மொழிச்சார்பு, அடிப்படைப்
பழக்க வழக்கங்கள் ஆகியவை, கருவாக இருக்கும் போதே
மரபணு ( Genes ) வாயிலாகக் குழந்தையிடம் இடம்பெற்று
விடுகின்றன !
ஆனால் அந்தக் குழந்தையை அழகிய சிற்பமாக
உருவாக்கி முழுமை பெறச் செய்வது குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பத்து
மாதங்களே !
வயல்களில்
இன்னிசையை ஒலிபரப்பி வந்தால் இசை கேட்டு வளரும் பயிர்கள் நல்ல விளைச்சல்
தருவதாக ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது. அதைப் போல, சூலுற்ற
காலத்தில் தாய் எந்த மொழியில் பேசுகிறாளோ, எந்த மொழியைச்
செவியாரக் கேட்கிறாளோ, எந்த மொழியில் எழுதுகிறாளோ, எந்த மொழியில் சிந்திக்கிறாளோ அந்த மொழியின்
தாக்கம் குழந்தையிடமும் இயல்பாக ஏற்பட்டு விடுகிறது !
அந்த மொழிபற்றிய உணர்வு,
குழந்தையின்
மரபணுக்களில் கலந்து விடுகிறது. அதனால், அம்மொழி
குழந்தைக்குச் சரளமாக வருகிறது.
அப்படிப்பட்ட மொழிக்குப் பெயர் தான் தாய்மொழி. அது தாய் வழியாகக் குழந்தைக்குக்
கிடைக்கின்ற சீர்தனம் !
மழலைப் பருவத்தில் தாய்மொழியை யாரும்
குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை. குழந்தை பேசும் ஒவ்வொரு சொல்லும் அதனிடம்
மறைந்து கிடக்கும் மரபணுப் புதையலில் இருந்து வெளியில் சிந்தி விழும் துகள்களாகும்
!
அந்தத்
துகள்களுக்குத் திருத்தமாக வடிவம்கொடுக்கும் முயற்சிதான் நாம்
மேற்கொள்ளும் “ சொல்லிக் கொடுத்தல் “, “கற்பித்தல்” எல்லாம்.
குழந்தைப் பருவத்திலும்,
பள்ளிப் பருவத்திலும்
நாம் என்னென்ன சொல்லிக் கொடுக்கிறோமோ, எவையெவற்றைக்
கற்பிக்கிறோமோ அவை எல்லாம் குழந்தையின் மூளையில் படிந்து அதன் தாக்கம் மரபணுவில்
கலந்து விடுகிறது !
ஐந்து வயதாகும் தமிழ்க் குடும்பத்துக் குழந்தைகள் எத்துணை
அழகாகப் பேசுகின்றன ! “சன்” தொலைக்
காட்சியில் “குட்டீஸ் சுட்டீஸ்“ நிகழ்ச்சியில்
குழந்தைகள் பேசும் அழகைப் பார்த்திருப்பீர்கள் ! என்ன போடு போடுகின்றன அந்தச்
செல்லக் குழந்தைகள் ! அவர்களுக்கு அப்படிப் பேசுவதற்கு யார் சொல்லிக் கொடுத்தது ? தாயின் மரபணுவிலிருந்து குழந்தைக்குக்
கிடைத்த கொடை தான் அந்த பெருநகை (அட்டகாசமான)ப் பேச்சு !
தாய்மொழி வாயிலாகச் சொல்லிக் கொடுக்கப்
படும் செய்திகள் மரபணுக்களில் உள்ள தாய் மொழிக் கூறுகளின் ஈர்ப்பாற்றல் காரணமாக
குழந்தையின் மூளையால் எளிதில் உள்வாங்கிக்
கொள்ளப்படுகிறது இதனால் தான் குழந்தைக்குத் தனது தாய் மொழியில் பேசும் ஆற்றலும், எழுதும் ஆற்றலும், சிந்திக்கும்
ஆற்றலும் மிகச் சரளமாகக் கைவரப்பெறுகிறது !
அயல் மொழிகள் வாயிலான செய்திகள் குழந்தையின்
மூளைக்குள் செலுத்தப் படும்போது குழந்தையின் மரபணுவில் உள்ள தாய்மொழிக் கூறுகள்
பிற மொழிச் செய்திகளை உள்வாங்க அனுமதிக்காமல் எதிர்க்கிறது. எனினும் தொடர்ந்த பயிற்சியின் காரணமாக அயல்மொழி
வாயிலான செய்திகள் மூளையில் சிறுகச் சிறுக
பதிவாகத் தொடங்கும். பதிவாகும் செயல் மிக மெல்லவே நடைபெறுவதால் தான் குழந்தை, அயல் மொழியில் பேசவோ, எழுதவோ, சிந்திக்கவோ
தடுமாறுகிறது; திணறுகிறது
!
தாய்மொழிக்கும் அயல்மொழிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இது தான் !
மழலையர் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தை
நாம் கேட்கும் கேள்விகளுக்கு, விடை சொல்வதாக
வைத்துக் கொள்வோம். அப்போது தமிழில் ஒரு நிமிடத்தில் முப்பது சொற்களை அக் குழந்தை
வெளிப்படுத்தினால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சியை விட, ஆங்கிலத்தில்
ஒரு நிமிடத்திற்குப் பத்து சொற்கள் மட்டுமே வெளிப்படுத்தும் போது அடைகின்ற
மகிழ்ச்சி மிகமிகக் கூடுதலாக இருக்கிறது. காரணம் எப்போதுமே அயலிடப்
பொருள்கள் மீது நமக்கு ஈர்ப்பு மிகுதி !
இவ்வாறு தான் அயல் மொழிகள் மீது நமக்குள்ள
ஈர்ப்பும் மிகுதியாகி ஆங்கிலம், போன்ற அயல்
மொழிகளுக்கு நாம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம்... இந்த ஈர்ப்பைப் பயன்படுத்தித்
தான் பதின்மப் பள்ளிகள் (Matriculation
Schools) தமிழ்நாட்டில்
பல்கிப் பெருகி, பெற்றோர்களை வஞ்சித்துக் கொள்ளையடித்துக்
கொண்டிருக்கின்றன !
இத்தகைய ஒரு ஈர்ப்பு தான் சிலருக்கு இந்தி
மீதும் ஏற்பட்டிருக்கிறது !
-------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 09]
{23-05-2022}
--------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக