விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 5 ஜூன், 2022

சிந்தனை செய் தமிழா (35) மதிகெட்ட மனிதர்களே ! மலைவளத்தை அழிக்காதீர் !

கிழக்கும் வெளுக்கவில்லை ! கீழ்வானமும் சிவக்கவில்லை !

------------------------------------------------------------------------------------


இப்பூவுலகானது மலையும் மலை சார்ந்த இடமும், காடும் காடு சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் என நமது முன்னோர்களால் வகைப் படுத்தப்பட்டுள்ளது. இவற்றைத்தான் நமது இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அழகாகப் பெயர்சூட்டி அழைக்கின்றன !

 

இந்நால்வகை நிலங்களும் ஒன்றையொன்று சார்ந்து இயங்கி உயிரினங்கள் வாழையடி வாழையாகச் செழித்து வாழப் பேருதவி புரிகின்றன !

 

ஆழிப் பெருங்கடலின் உவர் நீர் ஆவியாகி மேகக் கூட்டங்களாகத் திரண்டு காற்றினால் அடித்துச் செல்லப் படுகையில், மலையினால் தடுக்கப்பட்டு, மழையாகப் பெய்விக்கப்படுகிறது. மலையில் பெய்யும் மழை, அங்கு நெடிதுயர்ந்த மரங்களையும் செடி கொடிகளையும் வளரச் செய்து பசுமையான சூழலை உருவாக்குகிறது !

 

மலைமீது விரிந்து கிடக்கும் இந்த பசுமைப் போர்வைதான், அங்கு உண்ணத்தை (வெப்பம்) அண்டவிடாமல் செய்து தண்ணத்தை (குளிர்ச்சி)  எங்கெங்கும் அள்ளித் தெளித்து அழகு சேர்க்கிறது. நீரைச் சுமந்து திரியும்  மேகங்கள், மலை மீது நிலவும் தண்ணத்தினால் சிலிர்ப்புற்று (குளிர்ந்து) மழையாகப் பொழிகிறது !

 

மலையில் பொழியும் மழை, பள்ளம் நோக்கித் தவழ்ந்து சிலு சிலுவென்று ஓடிச்  சிற்றோடைகளை உருவாக்குகிறது; நுங்கும் நுரையுமாய்ப் பரந்து விரிந்து தரையைத் தடவிக் கொண்டு ஓடுகையில் காடுகளை உருவாக்குகிறது; உயிர்ப்பிக்கிறது. சிற்றோடைகள் பலவும் சேர்ந்து ஆறுகளாக உருவெடுத்து, உணவு தானியங்களை விளைவிக்கும் வண்டல் மண் நிறைந்த வயல் வெளிகளைச் செதுக்கித் தந்து விட்டு, இறுதியில் தனது தாய்வீடான கடலைச் சென்று  அடைகிறது !

 

மழை இல்லையேல் உயிரினங்களுக்கு உணவு இல்லை. உணவில்லையேல் உயிரினங்கள் மடிந்து ஒழிந்துவிடும். உயிரினங்கள் இல்லையேல் இப்பூவுலகம் வெறும் பாறைக் கோளமாகிவிடும். இந்த உண்மை ஒவ்வொரு மனிதனின் அறிவுத் தவிசிலும் சப்பணமிட்டு உட்கார்ந்து கொண்டுதான் இருக்கிறது !

 

அறிவார்ந்த மனிதன் மலைக்கும் மழைக்கும் உள்ள உறவு பற்றி  உணரவே செய்கிறான். ஆனால், செல்வத்தை வாரிக்  குவித்திட ஆலாய்ப் பறக்கும் அழிமதியாளர்கள், மலை வளத்தைச் சீரழித்துச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

ஒருபக்கம், மலையில் உள்ள மரங்கள் பெருவாரியாக வெட்டிக் கடத்தப் படுகின்றன. மறுபக்கம், தேயிலைத் தோட்டங்கள், குளம்பித் (COFFEE PLANTATION) தோட்டங்கள், ஏலக்காய்த் தோட்டங்கள், புல்லைத் தோட்டங்கள் (ROSE GARDEN) உருவாக்குவதற்காக வனப்பகுதி தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகிறது !

 

இன்னொரு பக்கம், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில், காடுகள் அழிக்கப்பட்டு பல்லாயிரக் கணக்கில், உறை விடுதிகளும் (LODGES), உடு விடுதிகளும் (STAR HOTELS),  உண் விடுதிகளும் (HOTELS), வளமனைகளும் (BUNGALOW) பல்கிப் பெருகி, மலையின் இயற்கைத் தோற்றத்தையே மாற்றிக் கொண்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளின் பெருக்கத்தால், மலைப் பகுதிகள் குப்பை மேடுகள் ஆகி வருகின்றன !

 

பழங்குடினர் மட்டுமே ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வந்த மலைப் பகுதிகள் எல்லாம் இன்று பணமுதலைகளின் பகட்டு மாளிகைகளாக மாறிவிட்டன. மக்கள் தொகைப் பெருக்கத்தால், விடுதிகள் எண்ணிக்கையின் விரிவடைவால், மலையில் உள்ள ஏரிகள் எல்லாம் கழிவு நீர்த் தேக்கங்களாக உருவெடுத்து வருகின்றன !

 

மரங்களை இழக்கும் மலை, மழையைத் தருவிக்கும் வல்லமையை இழந்து விடுகிறது. இந்த உண்மை ஆட்சிக் கட்டிலில் இருப்போரின் செல்லரித்துப் போன சிந்தனையில் பதிவதே இல்லை !

 

தமிழ் நாட்டின் மலை வளம் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது. மலையின் இயற்கைச் சூழல் செத்து மடிந்து கொண்டிருக்கிறது. மழை வளம் அற்றுப் போய்விடுமோ என்ற அச்சம் மக்களை பிடர் பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது.. மழைப் பொழிவுக் குறைவினால் வேளாண்மை அழிநிலைக்கு வந்து கொண்டிருக்கிறது!

 

இதைப் பற்றிச் சிந்தித்து பயனுள்ள நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள், அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். செயல் மறந்த ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்டுத் திணறடிக்க வேண்டிய மக்கள், பக்கத்து வீட்டுப் பங்காளியுடன் சொற்போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் வெற்றி பெற்றது விஸ்வாசமா” “பேட்டயா என்று !

 

அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் வேலூரும் ஊட்டியும் ஒன்றுக்கொன்று இணையாகப்  போகிறது கோடைக்கால வெப்பத்தின் தகிப்பில். ஏற்காடு ஏரியும் தலைநகரத்துக் கூவமும் ஒன்றுக்கொன்று நிகராகப் போகிறது கழிவுநீர்ச் சேர்க்கையில். கொடைக்கானலின் குளிர்ச்சியைத் துய்க்க விரும்பி அங்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அடியோடு வீழ்ச்சி அடையப்போகிறது !

 

பேராசை பிடித்த அரசியல்வதிகளின் அழிசெயல்களால், தமிழகத்தின் வளம் ஏவுகணை வேகத்தில் வற்றிக் கொண்டு வருகிறது. அடுத்த தலைமுறைக்கு, நாம் குறிஞ்சி நிலத்தை விட்டுவைக்கப் போவதில்லை; முல்லை நிலத்தை தந்து செல்லப் போவதில்லை; மருத நிலம் நிலை திரிந்து பாலை நிலமாகக் காட்சி தரப் போகிறது; நெய்தல் நிலப்பகுதியில் சுரபுன்னையும் இருக்காது; தாழையும் இருக்காது. தாதுமணல் கொள்ளையர்கள் மட்டுமே அங்கு நடமாடிக் கொண்டிருப்பார்கள் !

 

மக்களாட்சி என்ற பெயரில் கொள்ளிக் கட்டையை எடுத்து முதுகு சொரிந்து கொண்டிருக்கிறோம். தன்னலம் தலைவிரித்து ஆடுகிறது ! தமிழகத்திற்கு விடியல் கிடைக்குமா ? தெரியவில்லை !  கிழக்கும் வெளுக்கவில்லை; கீழ் வானமும் சிவக்கவில்லை ! கிழித்து எழும் விடி வெள்ளியும் முளைக்கவில்லை !! தமிழ் மக்களின் உறக்கமும் கலையவில்லை !!!

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை :

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 22]

{05-06-2022}

-----------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக