தொலை நோக்குப் பார்வை உள்ளவர்கள் நிதியைக் கையாளும் பொறுப்பை ஏற்க
வேண்டும் !
ஒரு அரசாங்கத்தை ஐந்து ஆண்டு காலத்திற்கு ஆளுமை செய்து நடத்திச்
செல்வது என்பது விளையாட்டான செயல் அல்ல. அரசின் வருவாயைப் பெருக்கி, பயனற்ற வீண் செலவுகளைத் தவிர்த்து, வளர்ச்சித் திட்டங்களுக்கு மிகுதியான அளவு நிதி ஒதுக்கிச்
செயல்படுத்தினால் தான் நாட்டுப் பொருளாதாரமும், மக்களின் வாழ்க்கைத் தரமும் வெகுவாக உயரும் !
நாட்டின் வளர்ச்சிக்குத் தொலை நோக்குப் பார்வையுடன் திட்டமிடல்
வேண்டும். சரியான தொலை நோக்குப் பார்வை எல்லோருக்கும் இருக்க முடியாது. துறை
வல்லுநர்கள் தான் அதைச் செய்ய வல்லவர்கள். வல்லுநர்கள் மட்டுமே ஒவ்வொரு துறைக்கும் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட
வேண்டும் !
ஆசிரியப் பணியில் குறைந்தது 30 ஆண்டுகளாவது பணியாற்றியவர் மட்டுமே பள்ளிக் கல்வி அமைச்சராக அமர்வு
செய்தல் வேண்டும். கல்லூரிகளில் குறைந்தது 30 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியவர் உயர்கல்வி அமைச்சகப் பொறுப்பை
ஏற்க வேண்டும் !
தனது சொந்த நிலத்தில் வேளாண்மை செய்து 30 ஆண்டுகள் பட்டறிவு பெற்ற பட்டதாரி மட்டுமே வேளாண் துறை அமைச்சராக
அமர்த்தப்பட வேண்டும். உயர் நீதி மன்றத்தில் அல்லது உச்ச நீதி மன்றத்தில்
பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி, சட்டத் துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட
வேண்டும் !
தொழிற்சாலைகளில் 30 ஆண்டுகளாவது தொழிலாளியாகப் பணியாற்றி
ஓய்வு பெற்ற பட்டதாரி, தொழிலாளர் நலத் துறை அமைச்சராக வேண்டும். மக்களுக்கு வேலைவாய்ப்பைப்
பெருக்கும் வகையில் எத்தகைய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்று ஆய்வு செய்து
அத்துறையில் பட்டம் பெற்ற அறிஞர் மட்டுமே தொழில் துறை அமைச்சராகப் பொறுப்புக்கு வர
வேண்டும் !
அமெரிக்க நாட்டில், இவ்வாறு வல்லுநர்களை மட்டுமே
அமைச்சர்களாக நியமனம் செய்யும் வழக்கம் நடைமுறயில் உள்ளதை நாம் நினைவு கூர்ந்து
பார்க்க வேண்டும் !
இத்தகைய நடைமுறை நம் தமிழ் நாட்டிலும் வழக்கிற்கு வந்தால், தமிழ்நாடும், தமிழ் மக்களும், தமிழ் மொழியும் விரைந்து உயர்நிலையை அடைய முடியும் என்பது திண்ணம்!
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தமிழில் ஆய்வுகள் பல செய்து, நூல்கள் பல வெளியிட்டு, தனித் தமிழில்
எழுதவும், உரையாடவும், வல்லமையுள்ள, தமிழ் உணர்வு மிக்க ஒருவர் தமிழ்
வளர்ச்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்க வேண்டும் !
இந்த நிலையை அடைய அரசியல் அமைப்புச் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட
வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இது இயலக் கூடியதாகத் தெரிய வில்லை. ஏனெனில்,
நம் நாட்டில் உள்ள தேர்தல் முறைகளும், அதற்கான சட்டங்களும் தவறான மனிதர்களையே பதவில் அமர்த்தும் வகையில்
அமைந்து இருக்கின்றன ! .
பதவி ஆசை, பண ஆசை, அதிகார ஆசை என்று பல்வகையிலும் பேராசை பிடித்த மனிதர்கள் கூட்டத்தைத்
தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்
உருவாக்குகிறது. இதனால், குரங்கு கையில் அகப்பட்ட பூமாலையாக
மக்களாட்சிக் கோட்பாடு சிதைந்து சீரழிந்து கொண்டு
இருக்கிறது !
இத்தருணத்தில், தமிழ் நாட்டைச் சற்றுத் திரும்பிப்
பார்ப்போம் ! கடந்த 12 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் ஆளுமைத்
திறன் எப்படி இருந்திருக்கிறது ? தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்கள்
வகுக்கப் பெற்றனவா ? தமிழ்நாட்டின் பொருளாதாரச் செழுமை வளர்ச்சி பெற்று இருக்கிறதா ? இதை அறிவதற்கு தமிழக அரசின் நிதி
மேலாண்மை பற்றிய புள்ளி விவரம் நமக்கு
உதவும் !
நிதி மேலாண்மை என்றால்
அரசின் மொத்த வரவைத் திட்டமிடுதல், மொத்தச் செலவைத் திட்டமிடுதல், செலவுகள் வரவுகளுக்கு உட்பட்டு இருக்குமாறு திட்டங்களை வகுத்தல்,
கடன் சுமை இல்லாமல் திட்டங்களைத் தீட்டுதல்
ஆகியவையே !
2018-19 –ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பாதீட்டின்படி (பாதீடு = BUDGET)
மொத்த வரவு = 1,91,721.17 கோடி. மொத்தச் செலவு = 2,08,671.26 கோடி. பற்றாக்குறை = 10,950.09 கோடி. தமிழக அரசு (வாங்கியுள்ள) கடன் = 3,97,495.96 கோடி !
தமிழக அரசின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு எவ்வாறு பெருகி
வந்திருக்கிறது என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணையில்
பாருங்கள் !
-------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டு அரசின் கடன் சுமைப் பெருக்கப் பட்டியல்:
-----------------------------------------------------------------------------------
(01)
2006-07 0,57,457 கோடி
(02)
2010-11 1,01,541 கோடி
(03)
2012-13 1,35,060 கோடி
(04)
2013-14 1,55,129 கோடி
(05)
2014-15 1,78,170 கோடி
(06)
2015-16 2,11,483 கோடி
(07)
2016-17 2,52,431 கோடி
(08)
2017-18 3,14,366 கோடி
(09)
2018-19 3,55,845 கோடி
(10)
2019-20 3,97,495 கோடி
(11)
2020-21 4,56,660 கோடி.
-------------------------------------------------------------------------------------
தொலை நோக்குப் பார்வை உள்ளவர்கள் நிதியைக் கையாளும் பொறுப்பை
ஏற்றிருந்தால் அரசின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு இந்த அளவுக்கு மிகுதிப் பட்டு
வந்திருக்காது. பொருளாதார வல்லுநர் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்படாத வரை
இத்தகைய சீரழிவு நிலை நீடிக்கவே செய்யும் !
நாட்டு அளவிலும் சரி, மாநில அளவிலும் சரி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருப்பவர்கள் நேர்மையாளர்களாக, நாட்டு வளர்ச்சியில், மாநில வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களாக, தன்னலமற்றவர்களாக இருந்தால் மட்டுமே, நாடும் மாநிலமும் முன்னேற முடியும். ஆனால் நாம் அத்தகைய நல்வாய்ப்பை
இன்னும் பெற வில்லை !
மைய அளவில் ஆட்சிக்கு வரும் அனைவருமே தன்னலம் மிக்கவர்களாகவே
இருக்கிறார்கள். அரசியல் அமைப்புச்
சட்டத்தை, நன்மை தரும் வகையில் மாற்றி அமைக்க
அவர்கள் சிந்திப்பதே இல்லை. நேர்மை இல்லாதவர்கள் கையில் திறவுகோலைக் கொடுத்து விட்டு
அச்சப்பட்டு அடங்கிப் போகும் மக்களாக நாம் நம்மைச் சுருக்கிக் கொண்டு வாழ்வை
ஓட்டிக் கொண்டு இருக்கிறோம் !
இந்த கட்டுரையால் அரசியல் அளவில் எந்தப் பலனும் ஏற்பட்டுவிடப்
போவதில்லை. ஆனால் இதைப் படிக்கும் நண்பர்களுள் ஒரு சிலராவது விழிப்புணர்வு
பெற்றால் அதுவே போதும் ! அத்தகைய முயற்சியின் விளைவு தான் இந்தக் கட்டுரை !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ச் சுரங்கம்”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி)
23]
{06-06-2022}
----------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக