விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 18 ஜனவரி, 2024

சிந்தனை செய் தமிழா (89) அவனது உறுதிக்குத் தலை வணங்குவோம் !

 

(ஆங்கிலப் பேராசிரியர் மாதவனும், அவரது மேனாள் மாணவர் ஆதவனும் பேருந்து நிறுத்தமொன்றில் சந்திக்கின்றனர்)

 

ஆதவன்: குட் மாணிங் சார், நல்லா இருக்கீங்களா ?

 

ஆசிரியர்: வணக்கம் ஆதவன் ! நான் நலமாக இருக்கிறேன் ! நீ நலமாக இருக்கிறாயா ?

 

ஆதவன்: நலம்தான் சார் ! வீட்டில் அம்மா, தம்பி எல்லாரும் சௌக்யமா சார் ?

 

ஆசிரியர்: எல்லோரும் நலமே ! ஆமாம் ! நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் !

 

ஆதவன்: சார் நான் மெடிக்கல் ரெப்பாக இருக்கிறேன். டெய்லி 25 டாக்டர்களையாவது பார்த்து எங்கள் கம்பெனி புராடக்டுக்கு கேன்வாஸ் பண்ணனும் !

 

ஆசிரியர்: ஆமாம் ! உங்கள் மருந்தாக்க நிறுவனத்தில் என்ன மருந்து  தயாரிக்கிறார்கள் ?

 

ஆதவன்: சார் ! எங்க கம்பெனில ஃபீவரை ஹீல் பண்ற சிரப் தயார் பண்றாங்க !

 

ஆசிரியர்: அப்படியா ! நன்று ! உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா ?

 

ஆதவன்: எஸ் சார் ! டூ இயர்ஸ் பேக் மேரேஜ் ஆயிடுச்சி ! ஒரு மேல் சைல்டு கூட இருக்கு !

 

ஆசிரியர்: நிரம்ப மகிழ்ச்சி ! நான் செல்ல வேண்டிய பேருந்து வந்துவிட்டது. வருகிறேன் !

 

ஆதவன்: சரி சார் ! பை ! பை !

 

(பிச்சை என்னும் பெயருடைய பெரியவர் ஒருவர் பேருந்து நிறுத்த நிழலகத்தில் அமர்ந்திருத்தார். அவர் ஆதவனிடம் பேசுகிறார்)

 

பிச்சை: தம்பி ! உனக்கு ஆங்கிலம் தங்குத் தடையின்றி வருகிறதே ! அந்த அளவுக்குத் தமிழ் வராதோ ?

 

ஆதவன்: ஆமாம் அங்கிள் !

 

பிச்சை: உன் பெற்றோர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்களா !

 

ஆதவன்: இல்லை அங்கிள் ! ஃபாதர் நேம் எழிலரசன் ! மதர் நேம் அன்பரசி ! தமிழ்நாடுதான் !

 

பிச்சை: தம்பி நாம் வாழ்வது தமிழ்நாட்டில் ! நம் தாய்மொழி தமிழ் ! அப்படி இருக்கையில் உன் குருதியில்  மட்டும் ஆங்கிலக் கலப்பு ஏற்பட்டது எப்படி ? இங்கிலாந்தைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்ததைப் போல் சொல்லுக்குச் சொல் ஆங்கிலம் கலந்து பேசுகிறாயே ! உனக்கு இது ஞாயமாகப் படுகிறதா ? தமிழ்நாட்டைச் சேர்ந்த எழிலரசன் அன்பரசி இணையரின் பிள்ளை என்பதை நீ வெளிப்படுத்த வேண்டாவா?

 

ஆதவன்: என்ன அங்கிள் சொல்றீங்க ?

 

பிச்சை:  தம்பி ! தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டிலேயே வாழும் நீ, உன் சொல்லிலும் செயலிலும் நீ தமிழன் என்பதை வெளிக்காட்ட வேண்டும் ! எழிலரசன் அன்பரசி என்னும் இருவரது குருதி தான்  உன் உடலில் ஓடுகிறது என உன் ஊர் மக்கள் நினைக்க வேண்டும். மாறாக, நீ இங்கிலாந்து நாட்டின் வாழும் பெயர் தெரியாத யாரோ ஒரு இணையருக்குப் பிறந்தவன் என்று ஊர் மக்கள் கேவலமாக நினைத்துவிடக் கூடாது ! உன் பிறப்பையே ஐயப்படும் வகையில் ஆங்கிலம் கலந்த உன் பேச்சும்  செயலும் அமைந்துவிடக் கூடாது ! உன் தாய் பேசிப் பழகும் மொழியான தமிழை விடுத்து, அயல்நாட்டு மொழியான ஆங்கிலத்தைக் கலந்து பேசி உன் பிறப்பையே நீ இழிவு படுத்திக் கொள்ளாதே ! உன்னைப் பெற்ற தாயின் பெருமைக்கும் இழுக்குத் தேடிக் கொள்ளாதே ! சென்று வா !

 

(பெரியவரின் பேச்சைக் கேட்டு ஆதவன் திகைத்துப் போனான்; சிறிது நேரம்  செய்வதறியாது திணறிப் போனான். அங்கேயே நின்றுகொண்டு 15 நிமிடங்கள் போல் சிந்தித்தான்; மெல்ல மெல்ல அவன் மனதில் தெளிவு பிறக்கத் தொடங்கியது.)

 

 

ஆதவன்: (சற்று நேரம் கழித்துத் தனக்குத் தானே மனதிற்குள் பேசிக்கொள்கிறான்) ஆம் ! செருப்பால் அடிக்காத குறையாக இந்தப் பெரியவர் எனக்கு அறிவு புகட்டிவிட்டார் ! ஆங்கிலப் பேராசிரியர் தன் பேச்சில் ஆங்கிலம் கலவாமல் அழகு தமிழில் என்னிடம் உரையாடுகிறார். ஆனால் நான் வரைமுறையின்றி ஆங்கிலம் கலந்து வெட்கமில்லாமல்தமிங்கிலத்தில்உரையாடுகிறேன் !

 

ஆங்கிலம் கலவாமல் முழுவதும் தமிழிலேயே உரையாட  வேண்டும்; அல்லது தமிழ் கலவாமல்  ஆங்கிலத்தில்  உரையாட வேண்டும்; இரண்டுமல்லாமல் இரண்டு மொழிகளையும்  கலந்து பேசுவது பைத்தியக் காரத்தனம் அல்லவா ? நான் ஏன் இப்படி மன நோயாளி ஆகிப் போனேன்?

 

ஒன்று சோற்றைத் தின்ன வேண்டும் அல்லது சோறல்லாத வேறு எதையாவது அள்ளித் தின்ன வேண்டும். இரண்டையும் கலந்து தின்பது என்பது நாய் கூடச் செய்யத் துணியாத செயல் அல்லவா ?

 

இனி எப்போதும் சார்என்னும் சொல்லைப் பயன் படுத்த மாட்டேன். சார்என்னும் சொல் என் பிறப்புக்கே இழுக்கைத் தேடித்தரும் சொல் ! இந்த நிமிடம் முதல் ஐயா என்றே விளிப்பேன் !  ஆங்கிலம் கலந்து பேசமாட்டேன் ! தூய தமிழிலேயே பேசுவேன் ! கலப்பு மொழியில் பேசினால் என்னை நானே செருப்பால் அடித்துக்கொள்வேன் ! இது என் தாய் மீது ஆணை ! என் தந்தை மீது ஆணை ! என் தமிழ் மீது ஆணை !

 

(இல்லம் திரும்பிய பின் வீட்டிலும், வெளியிலும் அவனது பேச்சை எல்லோரும் வியப்புடன் பார்த்தார்கள். சிலர் அவனை ஏளனமாகக் கூடப் பார்த்தார்கள்.. அதற்கெல்லாம் அவன் கவலைப் படவில்லை. தான் 100% தமிழனாக இருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்துவிட்டான் !  அவனது உறுதிக்குத் தலை வணங்குவோம் ! நீங்கள் ?????)

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் & இடுகை

வை.வேதரெத்தினம்

ஆட்சியர்

தமிழ்ச் சுரங்கம் வலைப்பூ

[திருவள்ளுவராண்டு: 2054, சுறவம் (தை) 04]

{18-01-2024}

----------------------------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக