கரூர் நகரத்தில் நிகழ்ந்த பரிவு இல்லாத
படுகொலை !
கரூர் நகரில் 27-09-2025 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக்
கழகத் தலைவர் நடிகர் விசய்யின் சாலைவழி ஆமை
ஊர்வல நிகழ்ச்சி வேட்கை 41 மனித உயிர்களைக்
கொன்று குவித்து தனது கடும் பசியைத் தணித்துக் கொண்துடன் நிறைவு பெற்றிருக்கிறது !
அரசியல் அரங்கில் புதிய பண்பாடு முளைத்திருக்கிறது.
மதுரை தமுக்கம் திடல், சென்னை சீரணி அரங்கு, போன்ற பெரும் திடல்களில் அரசியல் கூட்டங்கள்
நடத்தும் நிலை மாறி, பேருந்துப் போக்குவரத்துக்குரிய நகரச் சாலைகளில் ஊர்திகளில் ஆமை
ஊர்வல நிகழ்ச்சிகளை நிகழ்த்திக் காட்டுவதில் ஆர்வம் பெருகிவருகிறது !
சாலைவழியே ஆமை ஊர்வல நிகழ்ச்சி நடத்திட
காவல் துறையில் அரசியல் கட்சியினர் இசைவு கேட்பதும், இசைவு மறுத்தால் முறைமன்றங்களை
நாடுவதும், அங்குள்ள நீதியரசர்கள், காவல் துறையின் உரிமைகளைத் தாமே கையில் எடுத்துக்
கொண்டு இசைவு அளிப்பதும் அன்றாட வேடிக்கை நிகழ்ச்சி ஆகிவிட்டது !
போக்குவரத்துக்குரிய நகரச் சாலைகள், பேருந்துகள்
போன்ற ஊர்திகளும், தனிமனித உடைமைகளான துள்ளுந்து,
ஈருருளி போன்றவையும், மனித நடமாட்டப் பாட்டைகளாகவும்
பயன்படுத்தும் நோக்கத்திற்காக உருவாக்கப்பெற்றவை. சாலையின் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்கள்,
கடைகளுக்குச் சென்று தமது தேவைப் பொருள்களை வாங்கிக் கொள்ள மனிதர்களுக்காக
உருவாக்கப் பெற்றவை !
கரையான் புற்றெடுக்க அங்குக் கருநாகம்
குடிகொண்டதைப் போல நகரச் சாலைகள் எல்லாம் இன்று அரசியல் வேட்டைக்கார்களின் ஆட்டக் களமாக
மாறிவருகிறது !
சாலைவழி ஆமை ஊர்வல நிகழ்ச்சி ஒன்று நடைபெறும்போது,
அவ்வழியே செல்ல வேண்டிய போக்குவரத்து ஊர்திகளும், மக்களும் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டு
அல்லலுக்கு ஆட்படுகின்றனர். ஒரு குடிநீர்க் குவளையின் கொள்ளளவு எவ்வளவோ அதற்கு ஏற்றாற்
போல்தான் அதில் நீரை நிரப்ப வேண்டும். மாறாக ஒரு குடம் நீரை நிரப்ப முயன்றால் என்னவாகும்
? குவளை நிரம்பிய பின் வழிந்தோடும் எஞ்சிய நீர், சுற்றுப் புறத்தைப் பாழ் படுத்திவிடாதா
? அதுதான் கரூரில் நடந்தது !
தெருவில் ஒரு குரங்காட்டி நடந்து வந்தாலும்
வேடிக்கை பார்க்க மக்கள் கூடிவிடுகிறர்கள்.
ஒரு பாம்பு ஊர்ந்து சென்றாலும் அதை வேடிக்கை பார்க்க மக்கள் கூடுகிறார்கள். திரையில் பார்க்கும் நடிகர்
சாலை வழியே சென்றாலும் அவரைப் பார்க்க மக்கள்
கூடிவிடுகிறர்கள். அதுதான் கரூர் நகரத்தில் நடந்தது!
இந்த நிகழ்வில்தான் எத்தனை தவறுகள் !
எது நிகழ்ந்தாலும் அதை வேடிக்கை பார்க்கும்
மனிதர்கள் நிறைந்த நாட்டில், நடிகர் விசய் சாலைவழி ஆமை ஊர்வல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்து அதில் சன்னல்கள் மூடிய பேருந்துக்குள் தன்னை மறைத்துக்கொண்டு துளித் துளியாக
ஊர்ந்து வந்தது பெருந்தவறு ! அறிவுக்கொவ்வாத மாபெருந்தவறு !
பேருந்துக்குள் அமர்ந்து நெடுநேரம் முகம்
காட்டாது வந்த விசய்யை ஒரு நொடியாவது பார்த்துவிட
மாட்டோமா என்று அறிவைக் கழற்றி வீட்டில் ஆணியில் மாட்டி வைத்துவிட்டு, ஆமை ஊர்வல நிகழ்ச்சிச்
சாலைக்கு வந்து முண்டியடித்துக் கொண்டு பேருந்தைச்
சூழ்ந்து ஆரவாரித்து வந்த இளைய அகவைக் கூட்டத்தின் செயல் பொறுக்கமுடியாத பெருந்தவறு
!
சாலைவழி ஆமை ஊர்வல நிகழ்ச்சிக்கும், குறிப்பிட்ட
இடத்தில் நடிகரும் தொலைநோக்கு அறிவில்லாத அரசியல்வாதியுமான
விசய் உரையாற்றுவதற்கும் இசைவு கொடுத்த காவல்
துறையின் செயல் ஏற்கமுடியாத மாபெருந்தவறு !
குறிப்பிட்ட மனிதனின் அரசியல் வேட்கைக்கு
ஆதரவு அளிக்கும் வகையில் 500 காவலர்களை – மக்கள்
வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் காவலர்களை – இலவசமாக காவல் பணியில் ஈடுபடுத்தியது,
காவல்துறை உயர் அதிகாரிகளின் அதிகார வரம்பு மீறிய பெருந்தவறு !
ஒரு ஏழைத் தொழிலாளி பக்கத்து ஊருக்குச் செல்கிறேன் என்று சொல்லி தனக்கு
துமுக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புத் தேவை என்று கேட்டால், அரசு அவன் கோரிக்கையை
ஏற்குமா ? முறைமன்றம் தான் அவனுக்கு உதவிக்கு வருமா ?
ஒரு இல்லத்தரசி தன் கணவன் தன்னை சினத்துடன்
பார்க்கிறார் என்று சொல்லி காவல்துறையில் கேட்டால், நான்கைந்து காவலர்களைப் பாதுகாப்புக்கு
அனுப்புவார்களா ?
மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன்
தன்னை ஆசிரியர் அடிக்கக் கூடும் என்று சொல்லிப் பாதுகாப்புக் கேட்டால், காவலர்கள் பாதுகாப்பு
அவனுக்குக் கிடைக்குமா ?
வாக்குரிமையுள்ள ஒரு பிச்சைக்காரர், இன்னொரு
பிச்சைக்காரர் தன்னை அடிக்க வருகிறார் என்று
முறையிட்டால், காவல்துறை அவர் பாதுகாப்புக்குச் சில காவலர்களை அனுப்புமா ?
இவர்கள் கோரிக்கையை அரசும் ஏற்காது; முறைமன்றமும்
ஏற்காது; காரணம் இவர்கள் எல்லாம் எளியவர்கள்; ஏழைகள் ! செல்வச் சீமான்களாக இருந்தால்,
வலியவர்களாக இருந்தால், நடிகர்களாக இருந்தால்
சட்டம் அவர்களுக்கு வளைந்து கொடுக்கும். அரசும் முறைமன்றமும் அரசுச் செலவில்
துமுக்கி ஏந்திய காவலர்களை நூற்றுக் காணக்கில் கூட அனுப்பும் !
நம் நாட்டில் அரசுகளும், முறைமன்றங்களும்,
செல்வச் சீமான்கள் பக்கமே நிற்கின்றன. அதனால் தான் சாலைவழி ஆமை ஊர்வல நிகழ்ச்சி என்னும்
முறையற்ற கோரிக்கை வைத்த ஒரு நடிக அரசியல்வாதிக்காக 500 காவலர்களை காவல்துறை அனுப்பி
வைத்திருக்கிறது !
தனது பாதுகாப்புக்காக, நான்கு உடல் கொழுத்த
மல்லர்களை ஏற்பாடு செய்துகொண்ட விசய், தன்னைப் பார்க்க வரும் மக்களின் பாதுகாப்புக்ககாக,
தன் செலவில் நான்காயிரம் உடல் கொழுத்த மல்லர்களை
ஏற்பாடு செய்திருந்தால், 41 பேதைகளின் உயிர் பறிபோயிருக்காதே !
பத்தாயிரம் பேர் கூடுவார்கள் என்று சொல்லி
காவல்துறையில் இசைவு வாங்கிய நடிக அரசியல்வாதி
குறுகலான போக்குவரத்துச் சாலையில் முப்பதாயிரம் பேரைக் கூடவைத்து – ஏழு மணி
நேரம் காக்க வைத்து – 41 பேரைக் கொன்று குவித்து அரியதொரு செயலைப் பெருமையுடன் நிகழ்த்திக்
காட்டியிருக்கிறார் ! மறக்க முடியாத அருஞ்செயல் ! கல்வெட்டில் பொறித்து வைக்கவேண்டிய
கனிவான அருள்மிகுந்த செயல் !
வாருங்கள் மக்களே ! 2026 சட்டமன்றத் தேர்தலில்
இந்த நடிக அரசியல்வாதியான மாவீரனுக்கு வாக்களித்து முதலமைச்சர் ஆக்குவோம் ! அந்த மாவீரன் செல்லுமிடமெல்லாம் 50, 100, 500,
1000 என்று எளிய மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவித்து, மக்கள் தொகைப் பெருக்கத்தால்
திணறும் நம் நாட்டிற்கு நல்வழி காட்டி, நல்லாட்சி புரிவார் !
வாழ்க அண்ணா ! வாழ்க பெரியார் ! வாழ்க
அம்பேத்கர் ! வாழ்க வேலு நாச்சியார் ! வாழ்க நாம் நாட்டு மக்களின் அறியாமை !
--------------------------------------------------------------------------------------
ஆக்கம் & இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
“தமிழ்ச் சுரங்கம்” வலைப்பூ
[திருவள்ளுவராண்டு 2056, கன்னி (புரட்டாசி)13]
{29-09-2025}
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக