விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 2 அக்டோபர், 2025

சிந்தனை செய் தமிழா (91) இஃதென்ன ஆட்சியோ ?

 

இஃதென்ன ஆட்சியோ ?

 

அறிவில்லாத மாந்தர்கள் பொய் சொல்லி 10,000 பேர் நடிகர் விசய்யைக் காண வருவார்கள் என்று விண்ணப்பம் தந்து சாலைத் தவழலுக்கும் (ROAD SHOW)  குறிப்பிட்ட இடத்தில் நடிகர் விசய் உரையாற்றுவதற்கும் காவல் துறையில்  இசைவு கேட்டிருக்கலாம் !

 

பரந்த திடலில்தான் கூட்டம் நடத்த வேண்டும், போக்குவரத்து மிகுந்த சாலையில் நடத்தக் கூடாது என்று கூறி இசைவு மறுத்திருக்க வேண்டிய காவல் துறை எப்படி இசைவு அளித்தது ?  இசைவு அளித்த காவல் துறை அதிகாரியை இந்நேரம் பணி இடை நீக்கம் செய்திருக்க வேண்டாவா ? 

 

கரூரில் 27-09-2025 அன்று 41 பேர் கொலையுண்டு போக யார் யார் காரணம் என்று பட்டியலிட்டால், கரூர் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் முதலிரண்டு இடங்களில் இடம் பிடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் கடமை தவறிய “அறிவாளிகள்” என்பதில் ஐயமில்லை. இந்த “அறிவாளிகளை”த் தமிழக அரசு ஏன் இதுவரைப் பணி இடை நீக்கம் செய்ய வில்லை ? அரசு செயலிழந்து நிற்பது ஏன் ?

 

விக்கிரவண்டியில் பல நூறாயிரக் கணக்கில் வந்து குவிந்த “அணிற் பிள்ளை”களின் கூட்டத்தைக் கண்டபிறகும், கரூரில்  “சாலைத் தவழல் காட்சி”க்கும்  “எழுச்சியுரை” ஆற்றுவதற்கும் போதுமான இட வசதி இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளாமல், நடிகர்  விசய்  வந்ததும், அதனால் 41 பேர் கொல்லப்படக் காரணமாக இருந்ததும் மாபெரும் குற்றச் செயல் அல்லவா ?

 

இந்தக்  குற்றச் செயலைப் புரிந்த நடிகர் விசய்யை  தமிழக அரசு ஏன் இன்னும் தளை (கைது) செய்யவில்லை. முதல் நோக்கிலேயே 41 பேரைக் கொன்ற குற்றவாளி நடிக – அரசியல்வாதி  விசய் எனத் தெரிந்த பிறகும், அவரைச் சிறைப்படுத்தாமல் “எந்த அரசியல் தலைவரும் தன் தொண்டர்களும், அப்பாவிப் பொது மக்களும்  இறந்து போக வேண்டும் என்று எண்ண மாட்டார்கள்” என்று விசய்க்கு நற்சான்று அளிக்கும் முதலமைச்சரைப் பெற்றிருக்கும் நாம் நற்பேறு பெற்றவர்களே !  நம்மையெல்லாம் முட்டாள் ஆக்குகிறர் முதலமைச்சர் !   ஆகா ! என்ன அருமையான ஆட்சி !

 

“எந்த அரசியல் தலைவரும், தன் தொண்டர்களும், அப்பாவிப் பொது மக்களும்  இறந்து போக வேண்டும் என்று எண்ண மாட்டார்கள்” என்று முதலமைச்சரே நற்சான்று அளித்த பிறகு, த.வெ.க.கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனையும், இன்னொருவரையும் காவல் துறை ஏன்  தளை (கைது) செய்தது ?  குற்றம் செய்த திமிங்கிலத்தை விட்டுவிட்டு, குரவை மீன் மதியழகனைத் தளை செய்திருப்பது தான்  “திராவிட மாடல் ஆட்சி”யின்  முக அழகோ ?

 

(“திராவிட மாடல்” என்னும் எரிச்சலூட்டும் சொற்களின் பொருள் என்னவென்று யாராவது எனக்குச் சொல்லுங்களேன்!)“

 

காவல் துறையினர் தம் கடமையைச் செய்ய விடாமல்  அவர்கள் கரங்களைக் கட்டிப் போட்டுவிட்டால் அப்புறம்  அந்தத்  துறை தான் எதற்கு? போக்குவரத்துக் காவலர்களை இடித்துத் தள்ளும் “குடிமகன்”களைப் படம் பிடித்துக் காட்டும் தொலைக்காட்சிச் செய்திகளை முதலமைச்சர் பார்த்ததே இல்லையா ?

 

“காவல் துறை நடவடிக்கையே வேண்டாம்” என்று முதலமைச்சர் கருதினால் காவல் துறையைக் கலைத்துவிட்டு, தமிழக அரசுக்கு பல கோடிகள்  செலவை மிச்சப்படுத்தலாமே ! 

 

மக்களின் மன நிலை அறியாத முதலமைச்சர், அமைச்சர்களும் வாய் திறக்கக் கூடாது என்று தடை உத்தரவு போட்டு வைத்திருக்கிறார் போலும் !

 

எதிர்க் கட்சியினர் எல்லாம் “எதிரிக் கட்சி” யினர் ஆகி ஆட்சியைக் “கிழி கிழி”யென்று கிழித்துக் கொண்டிருக்கின்றனர். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்னென்ன நன்மைகளைச் செய்வோம் என்று பட்டியலிடுவதில்லை. ஆட்சியில் இருப்பவர்களை அகற்ற வேண்டும் என்னும் ஒரே கருத்தைத் தான் கிளிப்பிள்ளைபோல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர் !

 

நான்கைந்து கட்சினர் கூவும் குரல் காதுகளில் வெந்நீரை ஊற்றுவதாக இருக்கிறது. ஆனால் எதற்கும் அசையாத “ஊமைச்சாமி”யாக முதலமைச்சர் இருக்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் அவரே ஆட்சியுரிமையை தங்கத் தட்டில் வைத்து சிலுவம்பாளையத்தாரிடம் ஒப்படைத்துவிடுவார் என்று தோன்றுகிறது !

 

“மு.க.தாலின் ஆட்சி தமிழைத் தாழ்த்துகிறது. ஆங்கிலத்தை உயர்த்துகிறது. தமிழுக்கு எதிரான ஆட்சி இது. தந்தை மு.க. தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும்  ஆற்றிய நற்பணிகளை எல்லாம் மகன் மறந்துவிட்டார் !

 

இன்று தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளில்   உள்ள அனைத்து வேலை வாய்ப்புகளையும்   வடமாநிலத்தவருக்கு வாரி வழங்கி வரும் அறிவுக் குறைவான ஆட்சி இது. கோவை, திருப்பூர், ஓசூர், சென்னை என்று எங்குப் பார்த்தாலும் தொழிற்சாலைகளில் இந்திக்காரர்களின்  குரலே காற்றில் எதிரொலிக்கிறது. பெயரோ  தமிழ்நாடு; ஆனால் வேலை வாய்ப்பு எல்லாம் இந்திக் காரர்களுக்கு ? என்ன கொடுமை இது ? இதைக் கூடக் கவனிக்காத முதலமைச்சர் நமக்குத் தேவைதானா ?

 

இந்த ஆட்சி வீட்டுக்குப் போகவேண்டும் என்றே தமிழ் ஆர்வலர்களாகிய நாங்களும் விரும்புகிறோம் ! ஆனால், அடுத்த வாய்ப்பு யாருக்கு என்று பார்க்கையில் எதிரில் தெரியும் கட்சிகள் எல்லாம் மதவாத பாரதீய சனதாவுக்கு சேவகம் செய்யும் கூலிக் காரக் கட்சிகளாக அல்லவோ தென்படுகின்றன !

 

பாரதீய சனதாவோ, பார்ப்பன மேலாளுமையத் தூக்கிப் பிடிக்கும் கட்சி. உழைக்கும் மக்களைச் “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கேவலப்படுத்தும் கட்சி. இந்தியைத் தமிழனின் தொண்டைக்குள் திணிக்க முயலும் கட்சி. இத்தகைய கட்சிக்குச் சேவகம் செய்யும் “தமிழ்ப் பகைவர்களை”  நாங்கள் எவ்வாறு ஆதரிக்க முடியும் ?

 

எனவே, தமிழ் ஆர்வலர்களாகிய நாங்கள் எங்கள் வாக்குரிமையை எதிர்வரும் சட்ட மன்றத் தேர்தலில் பயன்படுத்தாமல்  தேர்தலைப் புறக்கணிப்போம் என்பதே எங்களது இப்போதைய நிலை !

--------------------------------------------------------------------------

        ஆக்கம் & இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ச் சுரங்கம் வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2056, கன்னி (புரட்டாசி) 14]

{30-09-2025}

-----------------------------------------------------------------------

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக